Thursday, August 15, 2013

சிறுகதை : காதல் போயின்



 

காதல் போயின்……


   இறுதியாக ஒரு முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள் அவள்.மரணக்களை அவள் முகத்தில் இலேசாய் கோடிட்டிருந்தது,எழுதி வைத்திருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு வரவேற்பறையை எட்டிப் பார்த்தாள்,அக்காளும் மாமாவும் வாணிராணியில் மூழ்கியிருந்தார்கள்.அவர்கள் உறங்கப் போகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

   ச்சே என்ன உலகம் இது? செத்துப் போவதற்கு கூட காத்திருக்க வேண்டியிருக்கிறது?” சலித்துக் கொண்டே மெத்தையில் ஏறியவள் மடிக்கணினியை உயிர்ப்பித்து முகநூல் பக்கத்தைத் திறந்தாள்.

     கரு கலைப்பைவிட

     காதல் கலைப்புக்கு

     இரணம் அதிகம்!!!!!!!!!!!!!

 

தோழியொருத்தி ஒரு நாவலிலிருந்து எடுத்து,தன் பக்கத்தில் பகிர்ந்திருந்த அந்த வரிகள் கண்ணில் பட்டன.

   அதில் இடம்பெற்றிருந்த கவிதை வரிகள் அவளைச் சட்டென்று கண்கலங்க வைத்தன.”உண்மைதானே?” என்று தனக்குத்தானே தலையாட்டிக்கொண்டாள்.
 
 
 

உலகத்தில் எல்லா வலிகளிலும் கொடுமையானது காதல் தரும் வலிதான் என்று யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சம்பந்தப்பட்ட அவள் ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும்?எத்தனை இரவுகள் அழுது துடித்தாள்?வலியோடு தூங்கி,வலியோடு எழுந்த அந்த ஏழு நாட்களை மறந்துவிடமுடியுமா?

    மடிக்கணினியை அடைத்துவிட்டு பால்கனிக்கு வந்து நின்றாள்.இன்னும் சில மணி நேரங்களில் அஸ்தமித்துப் போக போகும் இரவின் அழகை ஆராதித்தாள்.அவளும் அந்த இருளோடு கலந்துவிடப் போகிறவள்தானே? 

     இறுதியாக ஒரு தடவை அவனிடம் பேசலாமா?”

     ச்சே, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு,உனக்கு எத்தனை சூடு?” அவளுடைய மனசாட்சி அவளைக் காறி துப்பியது,என்ன செய்வது? துளி கூட வெறுக்க முடியாத அளவுக்கு காதல் அவன் மீது.

     ஒரு வேளை அவன் கெட்டவனாக இருந்திருந்தாலோ அவள் மனதைக் காயப்படுத்தும் அளவிற்குப் பேசியிருந்தாலோ அவனை வெறுக்கக் கூடிய சரிவிகிதங்கள் அதிகரித்திருக்கக் கூடும்,அவன் அப்படியெல்லாம் இல்லையே?

    
    
அவன் நல்லவன்தான் ஆனால கோழை,மணிக்கணக்காய் பேசிக்கொள்வதில் தொடங்கி வெட்கங்களின் விளிம்புகளைத் தாண்டிப் போகாத சின்ன சின்ன தொடுதல்களின் ஸ்பரிசங்களில் குளிர்காய்ந்தது வரை எல்லாமே சுகமாகதான் இருந்தது குடும்ப சூழ்நிலை காரணமாக எதிர்காலம் குறித்த திடீர் பயம் அவனுக்கு வரும்வரை.

   அவளிடம் முதன்முதலாக காதலைச் சொன்னபோது, இன்னும் காய்ச்சல் இருக்கா?” முதன்முதலாய் அவளுடைய நுதலினைத் தொட்டுப் பார்த்த போது…..ஆசையாய் அவளுக்கு வளையல் வாங்கி மாட்டிவிட்டபோது…. “அட தப்பு செய்கிறோமோ?” என்ற பயத்தில் விலகிப்போன அவளைச் சமாதானப்படுத்தி சேர்த்து அணைத்துக் கொண்ட போது…..இப்படி பல பொழுதுகளில் நினைவிற்கு வராத குடும்ப சூழ்நிலை அவன் நினைவிற்கு வந்தது அவள் தன்னுடைய காதலை உருக்கி ரத்தத்திற்குப் பதில் நரம்புகளில் ஊற்றிக்கொண்டபிறகுதான்.பிறகெப்படி பிரித்தெடுக்க இயலும்?

    அவனைவிட்டு விலக அவள் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் அவன் மீதான காதலை கூட்டியதே தவிர குறைத்தபாடில்லை.எந்தப் பாடலைக் கேட்டாலும் அவன் நினைவு கொன்றது.திருமணம் உறுதியாகும்வரை கண்ணியம் காப்பேன் என்பவன் அவளைச் சந்திக்கும்போதெல்லாம் கன்னத்திலும்,நெற்றியிலும் பாசமாய் முத்தமிடுவான்.துளி கூட காமம் கலக்காத முத்தங்களைச் சுமந்தபடி உடலில் ரத்த நாளங்களை மிஞ்சிப் பயணித்துக்கொண்டிருக்கும் அந்த முத்தநாளங்களை எப்படி வெட்டியெறிய முடியும் அவளால்?

   அவன் திரைப்படங்களில் வருவது போன்றோ கதைகளில் வருவது போன்றோ தனக்கு வியாதி இருப்பதாக பொய்ச் சொல்லி விலகவில்லை.வேறொரு பெண்ணை விரும்புகிறேன் என்றும் அவளைக் காயப்படுத்தவில்லை,அவளைச் சாப்பிட வைத்து தலையெல்லாம் வருடி கொடுத்து நிதானமாகதான் சொ(கொ)ன்னான் நாம பிரிஞ்சிடலாம் என்று ஆனாலும் அது அவளைக் காயப்படுத்தியதே?கத்தியை உடலில் மெதுவாக பாய்ச்சினாலும் கூட வலி வலிதானே?

   பாவம் அவனுக்கு வேறு ஏதும் பிரச்சனையோ என்னவோ?அவனுடைய சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அவளாவது அந்தப் பிரிவை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.ஆனால் முடியவில்லையே? ஒரே இடத்தில் வேலை செய்வதால் தினமும் பார்த்து கொண்டே இருக்க வேண்டிய தருணங்களில் அவன் மிகவும் இயல்பாகதான் இருக்கிறான்.இவளால்தான் முடியவில்லை.அவனை நேருக்கு நேர் பார்க்கும்போது சிரிக்கவேண்டுமா முறைக்கவேண்டுமா என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.

    அவனைவிட சிறந்ததாய் வேறு காதலன் கிடைக்கமாட்டான் என்பதோ தனக்குத் திருமணம் நடக்காது என்பதோ அல்லவே அவளை வேதனைப்படுத்துவது?அந்தப் பிரிவை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லாமல் போய்விட்டதே!அந்த ஏமாற்றத்தைத் தாங்கும் வலு இல்லையே அவளுக்கு?

   காதல் தோல்வியடைந்து சில துளி கண்ணீரைச் செலவழித்த பின் இயல்பு நிலைக்குத் திரும்பி வாழ்க்கையின் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டுவிட்ட அவளுடைய தோழிகளும் இருக்கிறார்கள்தான்.ஆனால் அவர்களுக்கெல்லாம் அந்த காதலைவிட சந்தோசம் தரக்கூடிய விசயங்கள் நிறைய இருந்தனவே வாழ்வில்.

     இவளுக்கு அப்படி ஏதும் இல்லை.இருந்த ஒரே ஒரு பிடிப்பும் கைநழுவிப் போனபிறகு அவள் எப்படி இயல்பு நிலைக்குத் திரும்புவாள்?அவளுடைய வாழ்வில் அன்பு காட்டுவதற்கென்றே வந்த அவனும் பாதியிலேயே விலகிப்போனால் அவள் எப்படி தாங்கி கொள்வாள்?

 

* * * * *

 

   அக்காளும் மாமாவும் மாடிப்படிகளில் ஏறி வரும் சத்தம் கேட்டது,தன் அறைக்குள் நுழைந்து மடிக்கணினியை எடுத்துவைத்துக்கொண்டாள்.முகநூலில் எதையோ படிப்பதுபோல் பாவ்லா காட்டினாள்.அப்போதுதான் கவனித்தாள்.இவளது சமீபத்திய படங்கள் எதையும் லைக் செய்யாத அவன் ஒரு பெண்ணுடைய படங்களை லைக் செய்திருந்தான்.ஒருவேளை வேறொரு பெண்ணின் மீது ஆசை வந்துவிட்டதால் குடும்ப சூழ்நிலை என பொய்க்காரணம் காட்டி இவளை நிராகரிக்கிறானோ?

   நின்றுபோயிருந்த கண்ணீர் மீண்டும் சுரக்க ஆரம்பித்தது.தற்கொலை எண்ணம் வலுவானது. 


   அக்காள் தன் அறைக்கதவைத் தாழிடும் சத்தம் கேட்டதும் மெத்தையைவிட்டு இறங்கினாள்.கைப்பைக்குள் பதுக்கிவைத்திருந்த பத்து தூக்கமாத்திரைகளையும் வெளியே எடுத்தவள் வாயில் போட்டுக்கொண்டு கொக்கோ கோலாவை வாயில் சரித்தாள்.பிறகு படுத்துக் கொண்டாள்.

   துணிந்து செயலில் இறங்கிவிட்டாலும் மனதில் மெல்லிய பயமொன்று இருக்கவே செய்தது.

   நல்லபடி இறந்துவிடுவேனா?”

   ஒரு வேளை இறந்து போகாமல் உடல் மட்டும் செயலிழந்து போய்விட்டால்...........ஐயோ வேண்டாம் அப்படி எதுவும் ஆகிவிடக் கூடாது,அப்படி ஒரு நிலமையில் இருப்பதைவிட இறந்துவிடுவதே மேல்

   அரைமணி நேரம் ஆனது.

  இறந்தபிறகு நடப்பதையெல்லாம் தன்னால் பார்க்க முடியுமா?”

    அவள் புத்தகங்களில் படித்திருக்கிறாள்.தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆத்மா தங்கள் உடலின் தலைமாட்டிலேயே அமர்ந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருக்குமென்று.

    என் ஆன்மாவும் அந்த மாதிரிதான் அழப்போகிறதா?”

    வழக்கம்போல் காலையில் அவளுடைய அக்காள்தாள் அவளை எழுப்ப போகிறாள்.பலமுறை கூப்பிட்டும் அவள் எழாமலிருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவளை நெருங்கி தொடுவாள்.கடிதம் கண்ணில் படும்.அவளுடைய உடல் சில்லிட்டிருக்கும்.அலறியடித்து கணவனை எழுப்பி அவளை மருத்துவமனைக்குக் கொண்டு போவதற்குள் அவள் நிச்சயம் இறந்துவிட்டிருப்பாள்.அதன் பிறகு பிரேதப்பரிசோதனை உள்ளிட்ட  மருத்துவமனை சம்பிரதாயங்கள் நடந்து முடிந்தபிறகு அவளை வீட்டிற்குள் தூக்கி வருவார்கள்.

     பலரும் வீட்டிற்கு வந்து அவளைப் பார்ப்பார்கள்; பலவிதமாக பேசுவார்கள்.எவனிடமோ ஏமாந்து போய்விட்டாள் என்றெல்லாம் வரம்பின்றி கூட பேசக்கூடும்.

    பேசட்டுமே? காதல் தோல்வியால் அவள் மனமுடைந்து அழுதபோது அவர்களா வந்து ஆறுதல் சொன்னார்கள்? உயிரோடு இருந்தால் மட்டும் அவளுடைய வலிகளை அவர்களா ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்?”

     அவன் வந்து பார்ப்பானா?தான் இறந்ததை நினைத்து அழுவானா?” கடைசி கணங்களிலும் அவன் மீதான எதிர்பார்ப்பு

     நிச்சயமாய் இறந்துவிடுவோம் என்ற எண்ணத்தில் இருந்ததாலோ என்னவோ மனதிதல் என்னென்னவோ எண்ணங்கள் தலைதூக்கிப் பார்க்க, திடீரென ஒருவித மயக்கநிலை அவளுக்கு.நெஞ்சு வலித்தது. மூச்சுவிட சிரமமாக இருப்பதை போன்றொரு பிரமை.

     வயிறு மெல்ல வலிக்க ஆரம்பித்ததோடு வாந்தியும் வருவதுபோன்று இருந்தது.கண்களில் உஷ்ணம் பரவ ஆரம்பித்தது.தூக்கம் வந்தது.அவனை நினைத்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டு இறப்பதற்கு தயாரானாள்.

 

* * * * * * * * * * * * * * * * * * * * * *

 

   கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு? இப்படி பண்ணிட்டியே?” பல கதைகளில் படித்து, பல நாடகங்களில் பார்த்து கேட்டு சலித்துப் போன பழைய வார்த்தைகளையே கிளிப்பிள்ளையாய் ஒப்புவித்துக் கொண்டிருந்தாள் அவளுடைய அக்காள்.

     கண்டிப்பாக இறந்துவிடுவோம் என்றுதான் அவள் நம்பியிருந்தாள்.ஆனால் மாத்திரைகள் அனைத்தும் வாந்தியில் வெளியேறிவிட்டதால் இப்படி உயிர் பிழைத்து பலருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டி வரும் என்று அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லைதான்.ஆனால் நடப்பதெல்லாம் நம் எதிர்பார்ப்பு படியா நடக்கிறது?மரணத்திற்கு கூட அவளைப் பிடிக்காமல் போய்விட்டதோ?

   விசாரணை,பரிசோதனை,வழிகாட்டல் மதியுரை எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தபிறகும் அவளுடைய அக்காளின் வசை தொடர்ந்தது,ஆனால் அவளுக்கு மனம் வலிக்கவேயில்லை.இதயத்தில் பெரிய கோடரியையே பாய்ச்சிவிட்டு காதலை அறுத்தெடுத்துக் கொண்டு போயிருக்கிறான் அவளுடைய காதலன்.அவளுடைய அக்கா ஊசியால் குத்துவதற்குப் போய் காயப்பட முடியுமா என்ன?

   அவனும் அவளை வந்து பார்த்தான்,நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு யாரையாவது திருமணம் செய்து கொள்ளும்படி அவளிடம் மன்றாடினான்,அதுதான் அவனுக்கு சந்தோசம் என்றால்...தப்பித்தவறி கூட அவனை மீண்டும் நெருங்கி தொல்லை பண்ணிவிடாமலிருக்க அதுதான் ஒரே வழி என்றால்........

   அவள் திருமணத்திற்குத் தயாரானாள்.கிடைத்த வரனை அவசர அவசரமாய் பேசி முடித்தாள் அவளுடைய சுயநலவாதி அக்காள்.சம்பிரதாயங்கள் முடிந்து கழுத்தில் தாலி ஏறியபோது கூட ஏனோ அவளுக்கு அழுகையே வரவில்லை.

 

* * * *

   முதல் இரவு.எந்தவித சலனமும். உணர்ச்சிகளும் இன்றி பொம்மை மாதிரி அமர்ந்திருந்தவளை மிருகத்தனமாய் இழுத்து தன்மீது சாய்த்தான் அவள் கணவன்.மோகம் கொண்ட நேரத்தில் கூட தன்னை குழந்தை மாதிரி மென்மையாகவே கையாளும் காதலனின் நினைவு வந்தது. இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த காயங்கள் யாவும் மீண்டும் உயிர்த்தெழுந்தது.இருவருக்கும் பிடித்தமான பாடல்களை மெல்லிய சத்தத்தில் ஒலிக்கவிட்டபடி முதல் இரவைத் தொடங்கவேண்டும் என காதலனோடு ஆசை ஆசையாய் பேசியவை எல்லாம் நினைவுக்கு வர, வெளியே சத்தம் வராமல், கண்ணீர் சிந்தாமல் உள்ளுக்குள்ளேயே கேவி கேவி அழ ஆரம்பித்தாள் அவள்.

      இனி ஒவ்வொரு இரவும் அவளைக் கொல்வதற்கு தூக்கமாத்திரைகளும் கொக்கோ கோலாவும் தேவையில்லைதான்.


                          ஆக்கம் : உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

No comments:

Post a Comment