Wednesday, August 7, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 13 : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்


       
கீதம் 13 : கண்ணா வருவாயா
(மனதில் உறுதி வேண்டும் - 1987)
 
 
 
 
      பெண்ணாய்ப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்றான் ஒரு கவி.ஆனால் எல்லா பெண்களது வாழ்க்கையும் பூத்துக்குலுங்கி விடுவதில்லை.ஒவ்வொரு கணத்தையும் ஏக்கம்,ஏமாற்றம்,பிரச்சனைகள்,பெருமூச்சு என எந்தவித சுவாரஸ்யமும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் நிறையவே உண்டு.அத்தகைய அவலநிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் மனதில் காதல் தோன்றும்போது ஏற்படும் சுகம்,சுமை,எதிர்பார்ப்பு,வேதனை,தடுமாற்றம் அனைத்தையும் மிக இயல்பாகவும்,கவித்துவமாகவும் எடுத்துரைத்த படங்களுள் ஒன்றுதான் கே.பாலச்சந்தர் ஐயாவின் மனதில் உறுதி வேண்டும்.

   1987- ஆம் ஆண்டு திரையீடு கண்ட இப்படத்தில் சுகாசினி,எஸ்.பி.பாலசுப்ரமணியம்.ஸ்ரீதர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.பெண்ணியச் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் இளையராஜா ஐயாவின் இசையில்,கவிஞர் வாலியின் வரிகளில் கண்ணின் மணியே ஆச்சி ஆச்சி’,’வங்காளக்கடலே’,’சங்கத்தமிழ் கவியே கண்ணா வருவாயா’’மனதில் உறுதி வேண்டும்,’ ஆகிய அற்புதமான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

   தாதியாக பணிபுரியும் நந்தினி(சுஹாசினி) சம்பாதித்து அனுப்பும் பணத்தில்தான் அவளது பெற்றோர்,இரு தங்கைகள்,நான்கு தம்பிகள் ஆகியோர் வாழ்க்கை நடத்தவேண்டியுள்ளது.தாதி தொழிலுக்கே உரிய பொறுமையும்,அன்பும்,கனிவும் நிறைந்த நந்தினி விரும்பி மணமுடிக்கும் காதலன் அவள் தன் சம்பளத்தை தன் பிறந்த வீட்டுக்குக் கொடுக்கக்கூடாது என கட்டுப்படுத்துவதோடு அவள் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவளை அடித்து,கொடுமையும் செய்கிறான்.அதைத் தாளமுடியாத அவள் அவனை விவாகரத்து செய்துவிட்டு தனியாக, ஆட்டோவில் அறிமுகமான தோழி சுந்தரியோடு ஒரு வீட்டில் வாழ்கிறாள்.அவள் வாழ்வில் எந்த இனிமையும் இல்லாது இருந்த பொழுதில்தான் மெல்லிய காதல் பூ ஒன்று அவள் மனதில் பூக்கிறது.ஒவ்வொரு காட்சியிலும் நம்மை நெகிழவைத்துவிடும் இப்படத்தில் நந்தினிக்கும்,சூரியாவுக்கும் இடையிலான காதல் காட்சிகள் வெகு சுவாரஸ்யமும்,இரசனையும் நிறைந்தவை.

  சூரியா(ஸ்ரீதர்) பிரபல எழுத்தாளன்.அவன் சாவி பத்திரிக்கையில் யாரோ ஒரு தாதி செய்ததைச் சுட்டிக்காட்டி, மருந்து கொடுக்கறவள்,சமயத்துல வாலிப விருந்தும் கொடுக்கிறாள் என எழுதிவிடுகிறான்.அந்த எழுத்து ஒட்டுமொத்த தாதியினத்தையும் கேவலப்படுத்துவது போல் இருக்கிறதென எல்லா தாதிகளும் நந்தினியின் தலைமையில் அவன் வீடு நோக்கிப் படையெடுக்கிறார்கள்.அவர்கள் எதிர்பார்த்தது போலல்லாமல் அவன் நகைச்சுவை உணர்வு நிறைந்த குறும்புக்காரனாக இருக்கிறான்.குறும்பு பேச்சால் அனைத்துப் பெண்களையும் சிரிக்கவைக்கிறான்.சீருடை அணியாமல் சேலையணிந்து வந்திருக்கும் நந்தினியிடம்,”நீங்க என்னா ஆயாவா?உங்க டிரஸ் என்னா லாண்டரியில இருந்து வரலையா?” என அவளையும் கிண்டல் செய்கிறான்.அவள் அவன் பேச்சுக்கெல்லாம் மயங்காமல் பொரிந்து தள்ளிவிடுகிறாள்.தாதிகளில் எத்தனையோ நல்லவங்க இருக்காங்க,அவங்களைப் பத்தி எழுதலாமே,” என கண்டிக்கிறாள்.எல்லாருமாக சேர்ந்து தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் அந்தப் பத்திரிக்கைகளைக் கொளுத்திவிடுகிறார்கள்.கிளம்பும்போது கடைசியாக போகும் நந்தினியைக் கிண்டலாக பெயர் சொல்லி அழைக்க, அவள் மனம் கொஞ்சம் சஞ்சலமும் அடைந்தாலும் உடனே சுதாகரித்துக்கொண்டு அவனை எச்சரித்துவிட்டுப் போகிறாள்.

  மறுநாள் தான் வழக்கமாக பெட்ரோல் போடும் நிலையத்திற்குச் செல்லும்போது அங்கே சூர்யா கார் ஒன்றைப் பழுதுபார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள்.அவனது வீட்டை எட்டிப்பார்க்கிறாள்.சூர்யா எழுத்தாளர் (மாஜி) என வாசலில் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது.மருத்துவமனையில் அவளது தலைமை மருத்துவர் அர்த்தநாரி(எஸ்.பி.பாலசுப்ரமணியம்)சூர்யா எழுதுவதையே விட்டுவிட்டதாக அறிக்கை கொடுத்திருப்பதைச் சொல்லி வருத்தத்தைத் தெரிவிக்க,அவரைக் கடிந்து கொண்டாலும் அவள் மனமும் வருத்தம் அடைகிறது.திறமையான ஓர் எழுத்தாளன் எழுதுவதை நிறுத்திவிட,தான் காரணமாக இருப்பது தனக்கு வருத்தத்தைத் தருகிறது என சொல்லி அவனை மீண்டும் எழுதுமாறு கேட்கிறாள்.

  நீங்க சொன்னா எழுதறதை விட்டுடனும்,நீங்க சொன்னால் திரும்ப எழுதனும்,நீங்க சொல்லறதையெல்லாம் கேட்க,நான் என்னா உங்க புருஷனா?” என்கிறான் குறும்பாய்.அந்த மாதிரி நெனப்பெல்லாம் வேண்டாம்,” என்பவளிடம், உங்களிடம் ஒன்னு சொல்லனும்,மூனே வார்த்தைதான்,” என்கிறான்.அவள் மனம் குறுகுறுக்க அந்த வார்த்தைகளைக் கேட்க ஆவலாய் இருக்கையில் இன்னொருநாள் சொல்வதாய் சொல்லி அனுப்பிவிடுகிறான்.அவள் சற்றே ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்படுகிறாள்.

  வாழ்க்கையை வலியோடு நகர்த்திக்கொண்டிருப்பவளுக்கு மனதுக்குப் பிடித்த ஆணின் சிறு செய்கை கூட ஒரு சலனத்தை ஏற்படுத்திவிடும் அல்லவா?அதுமாதிரி வாழ்க்கையில் எந்த இன்பத்தையும் அறியாத நந்தினியின் மனதில் சூர்யாவின் குறும்புத்தனம் சலனத்தை ஏற்படுத்திவிட,முதன்முறையாக தன் பணி நேரத்தில் புத்தி பேதலித்து,அவனுடைய குறும்புப் பேச்சை எண்ணி சத்தம் போட்டு சிரித்துவிடுகிறாள்.மருத்துவர் அர்த்தநாரி அவளை வீட்டுக்குப் போய் நன்கு ஓய்வெடுத்துவிட்டு வரும்படி அனுப்பி வைக்கிறார்.

  அவன் தன் தோழி சுந்தரியிடம் தன் மனதைக் கட்டுப்படுத்த என்ன வழி என கேட்கிறாள்.தனது நினைவுகள்,எண்ணங்கள்.ஆசைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று முரணாக இருந்து தன்னைத் தாக்குவதாக சொல்லி புலம்புகிறாள்.அவளது அந்த ஆசை தவறல்ல என தோழியும் அவளுக்கு எடுத்துச் சொல்ல அவனை நெருங்கி பார்த்தால் என்ன என்று அவளுக்குத் தோன்றுகிறது.

  அன்று அவளை ஓர் உணவகத்தில் பார்த்துவிட்டு நெருங்கும் அவன் அவளிடம் தான் மீண்டும் கதை எழுத ஆரம்பித்துவிட்டதாய் சொல்கிறான்.வழக்கமாக கடவுள் துணை என எழுதுபவன் இம்முறை நந்தினி துணை என எழுத ஆரம்பித்திருப்பதாய்ச் சொல்ல அவளுக்குள் சலனம் எட்டிப் பார்க்க,வெளியில் காட்டிக்கொள்ளாமல் விரைவாக அவ்விடத்தைவிட்டு கிளம்புகிறாள்.ஆனால் அவன் சொல்ல வந்த அந்த மூன்று வார்த்தை என்னவாக இருக்கும் என்ற கேள்வி அவள் மண்டையை பிராண்ட,அவன் வீடு தேடி செல்கிறாள்.

  அது என்னா கருமம் மூனு எழுத்து?” என எந்த ஆசையும் இல்லாதமாதிரி கேட்கிறாள்.அவன் சொல்ல தயாராக அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் துடிதுடிக்கும் இதயத்தோடு அவன் சொல்லப்போகும் ஆசை வார்த்தைக்காக காத்திருக்கிறாள்.அவனோ சற்று நீட்டி முழக்கி,”அதுதாங்க,உங்களைப் பார்த்து மீசை இல்லாத பாரதி என கூப்பிடனும்னு ஆசை,” என்கிறான்.

  ஒருகணம் அந்த ஏமாற்றம் அவளைக் காயப்படுத்திவிடுகிறது.கண்களில் கண்ணீர் சுரக்க,அதை மறைத்தபடி,வலுகட்டாயமாக உதடுகளில் சிரிப்பை ஊற்றிக்கொண்டு, நான் கூட நீங்க என்கிட்ட ஐ லவ் யூ சொல்லி வாங்கி கட்டிக்கப்போறீங்களோ என நெனச்சிட்டேன்,” என்கிறாள்.

  எங்கே தன்னையறியாமல் தன் வேதனை வெளிப்பட்டுவிடுமே என்ற பயத்தை மறைப்பதற்காக கதையை மாற்றும் முயற்சியில், சங்கமம் என்ற தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு,” என்கிறாள்.அட கதை கேக்கற மூட்லதான் இருக்கீங்க போல,” என அவன் உற்சாகமாக தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான்.எழுத்தாளனுக்குச் சொல்லியா கொடுக்கவேண்டும்?சில சந்தர்ப்பங்களில் மனதில் இருப்பதை வெளிப்படுத்துவதற்கு கதை என்பது ஒரு கருவியாகிவிடும் அல்லவா?

  சூர்யாவும் அப்படிதான்.தன் மனதில் இருப்பதையே தான் எழுதிக்கொண்டிருக்கும் கதையின் வாயிலாக அவளிடத்தில் சேர்க்கிறான்.

  சிவா என்பவன் ஒரு நடனக் கலைஞன்.நடனாஞ்சலி என்ற அவனுடைய நாட்டியப்பள்ளியில் விதவையான மஞ்சரி வந்து சேர்கிறாள்.அவளுக்கு சிவா மீது ஆசை ஏற்பட்டுவிட,அதை மறைத்து வெளியே அவனை வெறுப்பதுபோல் நடிக்கிறாள் என அவன் கூற,நந்தினி சிவா,மஞ்சரி பாத்திரத்தில் தன்னையும்,சூர்யாவையும் இணைத்துக்கொண்டு அவன் சொல்லும் கதையை கற்பனையில் காட்சியாக்கிப் பார்க்கிறாள்.கதைக்குள் கதை என்பதுபோல் இவர்களின் கதை சிவா,மஞ்சரி என்ற பாத்திரத்தின் வாயிலாக நமக்குக் காட்டப்படுகிறது.தான் விதவை என்பதால் எந்த மன சஞ்சலத்துக்கும் அடிமையாகிவிடக்கூடாது என தன்னைச் சுற்றி கவசம் போட்டுக்கொள்ளும் மஞ்சரி அவன் அவளிடம் வந்து பேசும்போது வேண்டுமென்றே முகத்தில் அடித்தாற்போன்று பேசி அவனைத் தவிர்க்கிறாள்.ஆனால் பார்க்கும் எல்லா விசயமும் அவளுக்கு அவனையே நினைவுப்படுத்துவதால் அவள் தன்னைத்தானே அதிகம் வருத்திக்கொள்கிறாள் என சூர்யா தன் கதையின் நாயகியைப் பற்றி சொல்ல,அவள் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் நந்தினி அன்றிரவு அதேமாதிரி வெறும் தரையில் படுத்து தூங்குகிறாள்.மஞ்சரியைப் போன்றே பார்க்கும் எல்லாமும்  அவளுக்கு சூர்யாவை நினைவுப்படுத்த அவள் பெரும் போராட்டத்தைச் சந்திக்கிறாள்.

  ஒருநாள் அவள் வேலைக்குக் கிளம்பும்போது வீட்டு வேலைக்கு உதவியாக இருக்கும் பெண் சந்தையில் புதிதாய் வந்திருக்கிறது என சூர்யா சமையல் எண்ணெய்யை வாங்கி கொண்டு வர,அதைப் பார்த்ததும் அவளுக்கு சூர்யாவின் நினைவு வருகிறது.தன் கொண்டையை அவிழ்த்து,முடியைத் தளர பின்னிவிட்டு,சேலையை மாற்ற நினைக்கையில் சலவை செய்ய கொடுத்திருந்த சீருடை வந்து சேர,தன் சலனத்திலிருந்து வெளிப்பட்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டுவிடுகிறாள்.யாரைச் சந்திக்கவேண்டாம் என வேலைக்குச் சென்றாளோ அவனே அங்கு கையில் அடிபட்டு நோயாளியாய் படுத்து கிடக்கிறான்.போதாதற்கு அங்கு வந்த மருத்துவர் அர்த்தநாரி,”உங்களோட சங்கமத்தை எதிர்பார்க்கிறேன் என இருவரும் ஒன்றாய் இருக்கும்போது சொல்லிவிட்டுப் போக,அவளுக்கு அது எல்லாமே தெய்வச் செயலாக தோன்றுகிறது.

  அப்போது சூர்யா அவளுக்கு ஒரு டைரியை எடுத்து நீட்டுகிறான்.அப்போது அவள் மென்மையாய் புன்னகைக்க,

 

 உன் புன்னகை என்ன விலை?

  வரி நீங்கலாக……”

என்றும் அஸ்தமிக்காத சூர்யா!!!!

 

என முன் பக்கத்தில் எழுதி அவள் கையில் கொடுக்கிறான்.படித்துப் பார்த்தவள் தான் நோயாளிகளிடமிருந்து எந்த அன்பளிப்பையும் வாங்கி கொள்வதில்லை என்கிறாள்.

  அவன் வேண்டுமென்றே சங்கமம் கதையைத் தொடர்கிறான்.மஞ்சரியின் பிறந்தநாளன்று சிவா ஆசையாய் பூங்கொத்து வாங்கிகொண்டு போக,அவள் அவனை அவமானப்படுத்திப் பேசுவதோடு,அந்தப் பூங்கொத்தையும் தூக்கி குப்பையில் எறிகிறாள்.அவன் வேதனையோடு கிளம்பிப் போய் கோயிலில் ஆத்திரம் தீர ஆட,எல்லாரும் கிளம்பி போன பிறகு அந்தப் பூங்கொத்தை எடுத்து கண்ணீர் மல்க,முத்தமிடுகிறாள் மஞ்சரி.

  அந்தச் சம்பவத்தைச் சொல்லிவிட்டு, காதல் வந்தாலே கள்ளத்தனம் வந்துடுது இல்லையா?” என கேட்கிறான்.அவன் பேச்சை மறுப்பதுபோல் பேசிவிட்டு நந்தினி அவன் கொடுத்த டைரியில் அவன் எழுதிய கவிதை வரிகள் அடங்கிய தாளை மட்டும் கிழித்து எடுத்து பத்திரப்படுத்திக்கொள்கிறாள்.

  அந்நேரத்தில் தந்தை இறந்துவிட்டதாய் தகவல் வருகிறது.ஏற்கனவே பெரிய தம்பி மதம் மாறி ஒரு பெண்ணை மணந்து கொண்டு போய்விட்டான்.தங்கையும் ஒருவனுடன் ஓடிப்போய்விட்டாள்.தந்தையும் இறந்துவிட்டதால் அவள் மனதளவில் உடைந்து போய் நிற்கிறாள்.அவள் தன் எதிர்காலம் குறித்து தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணம் என தோழி சொல்ல,அவள் தனது காதலை மறக்க எண்ணுகிறாள்.அவன் எழுதிக்கொடுத்த கவிதை அடங்கிய  தாளை துண்டு துண்டாய் கிழித்து,கழிப்பறை தொட்டியில் போட்டு தண்ணீரை இழுத்துவிடுகிறாள்.ஆனால் அஸ்தமிக்காத சூர்யா என்ற வரி மட்டும் தொட்டியின் மேல்பரப்பில் ஒட்டிக்கொண்டு நிற்கிறது.அவளால் முழுமையாக ஒரு முடிவெடுக்க முடியவில்லை.சூர்யா சமையல் எண்ணெய்யையும் இனி வாங்கவேண்டாம் என்று சொல்லிவிடுகிறாள்.ஆனல் அவன் நினைவிலிருந்து தப்பிக்க முடியாமல் மனம் வாட மன அமைதி வேண்டி கோயிலுக்குச் செல்கிறாள்.அங்கு கோயிலில் எதிர்ப்புறம் வரும் சூர்யாவைக் கண்டதும் என்றும் அஸ்தமிக்காத சூர்யா என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.அவன் அவளைப் பார்த்ததும் ஆச்சரியம் அடைகிறான்.

  நர்சம்மா எப்படி இங்கே?முருகனுக்கு உடம்புக்கு ஏதுமில்லையே?” என கிண்டலாய் பேசுபவன் தன் கதையை அவளிடம் தொடர்கிறான்.

  மஞ்சரி திருட்டுத்தனமாய் தான் கொடுத்த பூங்கொத்தை முத்தமிட்டதைப் பார்த்துவிட்டு தோழி ஒருத்தி சிவாவிடம் உண்மையைச் சொல்லிவிட ஆத்திரமடைந்த அவன் அவள் வீடு தேடிப்போய் அவளை உலுக்கி எடுக்கிறான்.அவள் வழக்கம்போல் மறைத்துப் பேச,அவன் ஆவேசமாய் அவளைப் பற்றி இழுத்து அறைய,அவன் கொடுத்த அழுத்தத்தைத் தங்கமுடியாமல் மங்கை அவள் தன் காதலை ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாய் அவன் கொடுத்த மல்லிகைச் சரத்தைத் தலையில் சூடிக்கொள்ள அக்காட்சியில் தன்னையும்,சூர்யாவையும் இணைத்துக்கொண்டு நந்தினி கற்பனையில் மூழ்க,அப்போது ஒலிக்கிறது கண்ணா வருவாயா என்ற பாடல்.

   இப்பாடலை ஜேசுதாஸ் ஐயாவும்,சித்ரா அம்மாவும் உருகிப் பாடி உயிர் கொடுத்திருக்கிறார்கள்.கௌரி மனோஹரி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இப்பாடலில் காதல் கொண்ட நெஞ்சங்களின் ஏக்கம் அழகாய் வெளிப்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களால் மனதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த காதல் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து வெடித்து வெளிப்படும்போது ஏற்படும் நிம்மதியையும்,மனதில் புதைந்து கிடந்த ஆழமான ஏக்கங்களையும்,காதல் கிறக்கத்தையும் இப்பாடல் வெகு அழகாக பிரதிபலிக்கிறது.தான் காணும் யாவற்றிலும் அவள் தெரிவதாய் அவன் சொல்ல உண்ணும்போதும் உறங்கும்போதும் அவன் நினைவுதான் என வஞ்சி அவள் சொல்கிறாள்.தன் மனதுக்கினியவனை கண்ணனாகவும்,தன்னை அவன்மீது தூய அன்பைக் கொண்ட ராதையாகவும் உருவகப்படுத்தி பாடும் வண்ணம் அமைந்துள்ள இப்பாடலில் மீரா வருவாளா என கண்ணனும் தேடுவதாய் எழுதப்பட்டுள்ளது அழகான முரண்.

   மீராவாணி என்ற பெயரிலும் தனது அற்புதமான படைப்புகளை வழங்கி கொண்டிருக்கும் வாணி ஜெயம் அக்காள் நான் அதிகம் போற்றும் எழுத்தாளர்.இலக்கியத்துறையில் துறையில் பண்பட்டு மிளீர்ந்தாலும் என்றுமே தளும்பாத நிறைகுடமாய் இருப்பவர் வாணி அக்கா.கதையில் வந்த நாயகியைப் போன்று வாணி அக்காளும் தனது புனிதமான தொழிலை முழுமனதோடு செய்து வருபவர்.ஓராண்டுக்கும் குறைவான காலக்கட்டத்தில்தான் அவரோடு பழகியிருக்கிறேன் என்றாலும் தன்னடக்கமும்,பணிவும்,தாய்மை உணர்வும் கொண்ட வாணி அக்காள் எனது எழுத்துகளை நேர்மையாக விமர்சித்து,என்னை உற்சாகப்படுத்திக்கொண்டு இருப்பவர்.அடுத்தவர்கள் மீது துளி கூட பொறாமைப் படாமல் அவர்களையும் வளர்த்துவிடவேண்டும் என்ற அவரது குணத்தை நானும் பின்பற்ற நினைக்கிறேன்.கண்ணன் மீது அதீத ஆசை கொண்டுள்ள வாணி அக்காளுக்கு மிகப்பிடித்தமான பாடல் இது என்பதால் அவருக்காகவே எழுதினேன்.

    வாணி அக்காள் இலக்கியத்துறையில் மேன்மேலும் சிறந்து விளங்கவேண்டும்.இவ்வேளையில் கண்ணா வருவாயா கீதத்தை என் கண்ணனாகிய அன்பிற்கினியவனுக்கும்,வாணி அக்காளுக்கும் நடிகை சுகாசினி அவர்களின் ரசிகர்களுக்காகவும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.இதோ பாடல் வரிகள்.

 

 

பெண்: கண்ணா வருவாயா  கண்ணா வருவாயா

     மீரா கேட்கிறாள்

     மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்

    மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து

    கண்ணா வருவாயா  மீரா கேட்கிறாள்

கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணா

 

ஆண் : நீல வானும் நிலமும் நீரும்

       நீ என காண்கிறேன்

பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும்

        உன்முகம் பார்க்கிறேன்

ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது

        காய்ந்து போகும் பார்கடல்

பெண் : உன்னை இங்கு ஆடை போல

        ஏற்றுக்கொள்ளும் பூவுடல்

ஆண் : வேரில்லையே பிருந்தாவனம்

பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்

ஆண் : சொர்க்கம் இதுவோ ஓஓஓஓஓ

        மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

        மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து

        மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

கோரஸ் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 

ஆண் : மல்லிகைப் பஞ்சனையிட்டு

        மெல்லிய சிற்றிடை தொட்டு

        மோகம் தீர்க்கவா

        மல்லிகைப் பஞ்சனையிட்டு

        மெல்லிய சிற்றிடை தொட்டு

        மோகம் தீர்க்கவா

பெண் : மன்மத மந்திரம் சொல்லி

        வந்தநல் சுந்தரவல்லி

        ராகம் சேர்க்கவா

        மன்மத மந்திரம் சொல்லி

        வந்தநல் சுந்தரவல்லி

        ராகம் சேர்க்கவா

ஆண் : கொடியிடை ஒடிவதன் முன்னம்

       மடியினில் எடுத்திடவா

பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம்

        மதுரசம் கொடுத்திடவா

ஆண் : இரவு முழுவதும் உறவு மழையிலே

பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே

ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே

பெண்: கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

பெண் : மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்

கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணா......


2 comments: