Wednesday, August 7, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 12 : நீ பாதி நான் பாதி கண்ணே


நீ பாதி நான் பாதி கண்ணே
(கேளடி கண்மணி 1990)
 
 
 
 
 
 
 
 
 
 
இடது விழியில் தூசி விழுந்தால்

வலது விழியும் கலங்கிவிடுமே....

இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்

இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்!!

 

   கவிஞர் வாலியின் பொன்கரங்களால் உதயமான நீ பாதி நான் பாதி கண்ணே என்ற பாடலில் இடம்பெற்ற வரிகள்தாம் அவை.ஒரு கண்ணில் தூசி விழுந்தால் இன்னொரு கண்ணும் கலங்கிவிடும் என்ற நிலை உனக்கு ஏதாவது நேர்ந்தால் நானும் கலங்கிப் போய்விடுவேன் என்றுதானே அர்த்தப்படுகிறது?நம்மை எப்போதும் பின் தொடர்ந்து வருவது நிழல் மட்டும்தான் என்பார்கள்.நிழல் என்பது இருட்டில் இருக்காது,ஆனால் இந்தப் பாடலிலோ அந்தப் பெண் தன் காதலனிடம் தன்னை இருட்டில் கூட இருக்கும் நிழல் என உவமைப்படுத்திக்கொள்கிறாள்.எந்தச் சூழலிலும் உன்னைப் பிரியாமல் இருப்பேன் என்பதை இதைவிட கவித்துவமாக சொல்லிவிட முடியுமா என்ற ஐயம் தோன்றுகிறதல்லவா?எளிய வார்த்தைகளில் எதார்த்தமான விசயங்களைச் சொல்லி நம் மனதை அள்ளும் திறமை கொண்ட கவிஞர் வாலிக்கு விருது வாங்கி தந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

   இவ்வார உதயகீதங்களைத் தொடங்கும் முன் காலத்தால் அழியாத பாடல்களைத் தந்து மறைந்து போன ஐயா வாலி அவர்களைப் பற்றிய சில குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

   அந்திமத்தின் முன் அடிபணிந்து போகாமல் தமது கடைசிக்காலம் வரையில் தமிழ் இசையுலகில் தமது பங்களிப்பினை வழங்கி வந்த வாலிபக் கவிஞன் வாலி  கவிஞர்,பாடலாசிரியர்,நடிகர்,இயக்குனர்,ஓவியர் என சகலகலா வல்லவனாக திகழ்ந்தவர்.எம்.ஜி.ஆர். சிவாஜி காலம் தொட்டு சிவகார்த்திகேயன் வரையில் பல தலைமுறை நடிகர்களுக்கும் பாட்டெழுதிய பெருமை இவரைச் சாரும்.நவீன உலகத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு ரேப் வகை பாடல்களைக் கூட புனைந்திருக்கிறார்.மனதில் இருப்பதை யாருக்கும் பயப்படாமல் துணிந்து பேசக்கூடியவர்.

  கவிஞர் வாலி முதன்முதலில் ஓவிய ஆசிரியராகதான் பணிபுரிந்தாராம்.கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திவந்து பின்னர் நாடகத்துறைக்குச் சென்று அதன்பின்னரே சினிமாவுக்கு வந்தார்.எம்.ஜி.ஆர்,சிவாஜி ஐயா ஆகியோருக்கு இவர் எழுதிய பாடல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.இவர் எழுதிய சில பாடல்களை கண்ணதாசன் எழுதியதாக நினைத்துக்கொண்டோரும் உண்டு.

   பாடல்கள் மட்டும்தான் என்றல்லாமல் 17 படங்களுக்கு திரைக்கதை,வசனமும் எழுதியுள்ளார்.வடைமாலை என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.சில படங்களில் நடித்தும் உள்ளார்.இவர் ஐந்து முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதையும் வென்றுள்ளார்.2007-ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருதையும் வழங்கியுள்ளது.

    திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய இவர் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை காலம் கொண்டு சென்ற இன்னொரு இசை ஜாம்பவானான டி.எம்.எஸ் ஐயா அவர்கள்தாம்.

        இவர் எழுதிய பல பாடல்களை நான் வெகுவாய் இரசித்திருந்தாலும் இவ்வார கட்டுரையில் இவருக்கு விருது வாங்கி தந்த பாடல்களில் ஒன்றான நீ பாதி நான் பாதி கண்ணே என்ற பாடலைப் பற்றிய புனைவைப் பகிர விழைகிறேன்.

  தொன்னூறாம் காலக்கட்டத்தில் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய வகையில் ஆபாசமின்றி,மென்மையான மனதை வருடும் படங்களைத் தந்த இயக்குனர்களில் வஸந்த் மறக்கமுடியாதவர்.கே.பாலச்சந்தர் ஐயாவின் சீடர் என்பதால் அவரைப் போன்றே கதையமைப்பிலும்,பாத்திரப்படைப்பிலும் நம்மை வெகுவாய்க் கவர்ந்துவிடுவார்.

  1990- ஆம் ஆண்டு வெளியான கேளடி கண்மணி என்ற படமும் அந்த வரிசையைச் சேர்ந்த படம்தான்.இப்படத்தைக் கூட தன் குருநாதர் கே.பாலச்சந்தர் ஐயாவுக்கு சமர்ப்பணம் என்றுதான் குறிப்பிட்டிருப்பார் வஸந்த்.

  அற்புதமான இரு காதல் கதைகளைக் கொண்டு அமைந்த படம் இது.

  கணவனோடு கொஞ்சகாலம் வாழ்ந்து மறைந்து போன மனைவியாக கீதா,தன் மனைவியின் மறைவுக்குப் பிறகு தன் ஒரே மகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் எஸ்.பி.பாலா,காது கேளாத,வாய்பேச முடியாத தம்பதிகளாக பூர்ணம் விஸ்வநாதன்,ஸ்ரீவித்யா,அவர்களின் ஒரே மகளாக திருமண நாள் எண்ணி காத்திருக்கும் ராதிகா,குறும்புத்தனமான ரமேஷ் அரவிந்த்,கொடிய நோயில் விரைவில் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் இளவயது அஞ்சு என இப்படத்தில் எந்தப் பாத்திரத்தையுமே இரசிக்காமல் இருக்கவே முடியாது.

  இப்படத்தில் எஸ்.பி.பாலாவுக்கும்,ராதிகாவுக்கும் இடையில் தோற்றுப்போன ஒரு காதலோடு,சுகத்தை அனுபவிக்க காத்திருக்கும் ரமேஷ் அரவிந்த்,அஞ்சுவின் இளமையான காதல் என இருவகைக் காதலையும் இரசிக்கும் வண்ணம் வெகு அற்புதமாக படமாக்கியிருப்பார் வஸந்த்.

  இப்படத்தில் இளையராஜா ஐயாவின் இசையில் என்ன பாடுவது,தென்றல்தான் திங்கள்தான்,நீ பாதி நான் பாதி,கற்பூர பொம்மை ஒன்று,மண்ணில் இந்தக் காதலன்றி,வாரணம் ஆயிரம் போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.அவற்றில் கவிஞர் வாலி எழுதி,விருது பெற்ற பாடலான நீ பாதி நான் பாதி கண்ணே பாடலைக் கேட்டாலே மனம் இளகிப் போய்விடும்.

  படத்தில் இப்பாடல் ரமேஷ் அரவிந்துக்கும்,அஞ்சுவுக்கும் ஒலிக்கிறது.

 சசியும்(ரமேஷ்),அனுவும்(அஞ்சு) ஒரே கல்லூரியில் பயில்கிறார்கள். அனு பயணித்த பேருந்தை முகமூடி அணிந்த முகத்தோடு வழிமறித்து,அவளை முத்தம் கொடுக்க சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டிப் பார்க்கிறான் சசி.பதிலுக்கு அவளும் அவனை குதிகால் செருப்பு அணிந்து நடக்கவைத்து அவமானப்படுத்துகிறாள்.இரு தடவை ஒருவரையொருவர் பழி வாங்கிவிடுகிறார்கள்.மோதல் காதலாக மாறுகிறது.

   அனுவுக்கு மனதளவில் ஒரு பாதிப்பு இருக்கிறது.சிறுவயதில் இறந்து போன தாயின்மீது அதிக பாசம் கொண்ட அவளால் தன் தாயின் இடத்தில் வேறொரு பெண்ணை நினைத்துப்பார்க்க முடியவில்லை.அவள் தந்தை ஒரு பெண்ணின்மேல் ஆசை கொண்டு அவளை மணப்பதற்காக அனுமதி கேட்டபோது விடாப்பிடியாய் மறுக்கிறாள்.அந்தப் பெண்ணின் பெற்றோர் திருமணம் நின்று போன அதிர்ச்சியில் இறந்துபோகவே,அந்தப் பெண்ணும் அவள் தந்தையைவிட்டு எங்கோ தூரமாக போய்விடுகிறாள்.அறியாத வயதில் செய்த அந்தத் தவறை அவள் பெரியவளான பிறகுதான் உணர்கிறாள்.குற்ற உணர்வு அவளது ஆழமனதில் அவளை வருத்திக்கொண்டே இருக்கிறது.அதேவேளையில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து தானும்,சசியும் பிரிய நேரிடும் என ஒரு பயம் அவளை ஆட்கொள்கிறது.அதை நினைத்து பயப்படும் அவளிடம் தங்கள் காதல் நிச்சயம் வெற்றியடையும் என ஆறுதல் சொல்கிறான் அவன்.

     அவளுக்கு அவன்மீது நம்பிக்கை இருந்தாலும் சில சமயங்களில் அவனது குறும்பைக் கண்டு பயபப்டுகிறாள்.தன் உடலுக்காகதான் அவன் சுத்தி சுத்தி வருகிறான் என அவனைக் கேவலமாக திட்டிவிடுகிறாள்.அவன் கோபமாக அவளை விட்டுப் போய்விடுகிறான்.அவள் என்னென்னவோ சமாதானம் செய்தும் அவனது கோபம் குறையாமலேயே இருக்கவே,உடைந்த கண்ணாடுத் துண்டை எடுத்து தன் தோள்பட்டைக்கு சற்று கீழே அவனது பெயரைக் கீறிக்கொள்கிறாள்.ரத்தக்காயத்தோடு அவளைப் பார்த்த அவன் அவளது ஆழமான நேசம் கண்டு கண்ணீர் வடிக்கிறான்.அவளது காயத்தில் இதமாய் முத்தமிடுகிறான்.அவள் அதை நினைத்து பூரிக்க அப்போது ஒலிக்கிறது இப்பாடல்.

  ஜேசுதாஸ் ஐயாவின் குரல் தரும் இதத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.இப்பாடலிலும் உமாரமணனோடு இணைந்து அசத்தியுள்ளார்.

  இப்பாடலின் இசையும்,வரிகளும்,குரலும் கேட்கும்போதே நம்மைப் பரவசப்படுத்தி வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றன.

  இப்பாடலின் வரிகளை மிக நுணுக்கமாய் கேட்டால் விருது கிடைத்ததன் காரணத்தை நம்மால் அறியமுடியும்.ஒவ்வொரு வரியும் எளிமையான வார்த்தைகளால் ஆனால் மனதில் ஆழமாய்த் தங்கிவிடக்கூடியதாய் அமைந்திருக்கின்றன.

   ஆணும்,பெண்ணும் தங்கள் நேசத்தின் ஆழத்தைக் காட்டக்கூடிய வார்த்தைகளாக அவை வடிக்கப்பட்டிருக்கின்றன.மஞ்சள் பூசி குளித்திருக்கும் அவளது நெற்றியில் அவள் இடும் திலகத்துக்கு அவனால்தான் ஓர் அர்த்தம் கிடைக்கும் என்கிறாள்.பொன்னுலகம் ஒன்றே அந்தப் பெண்வடிவில் தன்னோடு இருக்கையில் சொர்க்கம் எதற்கு என அவனும் கேட்கிறான்.எவ்வளவு இரசனையான வரிகள்?இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் என்ற வரிகளை மட்டும் நான் அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன்.இதமான மாலை நேரத்தில் உங்கள் மனதுக்குப் பிடித்தமானவரையும்,உங்கள் இளம் பருவத்தையும் நினைத்தபடி இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்களேன்.

  என் மாய உலகில்,என் கற்பனையில் மட்டும் என்னோடு உறவாடிக்கொண்டிருக்கும் அன்பிற்கினியவனுக்கும்,வாலி ஐயாவின் இரசிகர்களுக்கும் இந்தப் பாடல் வரிகள் சமர்ப்பணம்.வாலி ஐயாவின் ஆத்மா நல்லபடி சாந்தியடைய பிரார்த்திப்போம்.

 

 

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீயில்லையேல் இனி நானில்லையே

உயிர் நீயே

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

 

 

 

மானப்பறவை வாழ நினைத்தால்

வாசல் திறக்கும் வேடந்தாங்கல்

கானப்பறவை பாட நினைத்தால்

கையில் விழுந்த பருவப்பாடல்

மஞ்சள் மணக்கும்

என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு

அர்த்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும்

உன் முத்துநகை ரத்தினத்தை

அள்ளித்தெளிக்கும் முன்னாலே

மெய்யானது உயிர் மெய்யாகவே

தடையேது?

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

 

 

இடது விழியில் தூசி விழுந்தால்

வலது விழியும் கலங்கிவிடுமே

இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்

இறுதிவரைக்கும் தொடர்ந்து வருவேன்

சொர்க்கம் எதற்கு

என் பொன்னுலகம் பெண்ணுருவில்

பக்கம் இருக்கு கண்ணே வா

இந்த மனம்தான்

என் மன்னவனும் வந்துலவும்

நந்தவனம்தான் அன்பே வா

சுமையானது ஒரு சுகமானது

சுவை நீதான்

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீயில்லையேல் இனி நானில்லையே

உயிர் நீயே

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே






No comments:

Post a Comment