Saturday, August 10, 2013

தொடர்கதை : என்னுயிரே வா என்னருகே


 


என்னுயிரே வா என்னருகே
 (அத்தியாயம் 1 : ரேகிங்கும் சீனியர் அரவிந்தனும்)




     விடுமுறை முடிந்து மீண்டும் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டிருந்தது.முதலாம் செமஸ்டர் மாணவர்களின் வருகையால் பல்கலைக்கழகம் பம்பரமாய் இயங்கிக் கொண்டிருந்தது.மலாய்,சீன,இந்திய மாணவர்கள் பலரும் தங்கள் பெற்றோர் குடும்பத்தாருடன் வந்து பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.அவர்களில் நித்தியாவும் ஒருத்தி.

  நித்யாவுடன் வந்திருந்த மாணவர்களில் பெரும்பாலோர் தங்களின் குடும்பத்தினரைப் பிரியப் போகிற கவலையில் கண்கலங்கி கொண்டிருந்தார்கள்.நித்தியாவுக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை.அவள் சிறுவயதாக இருக்கும்போதே குடும்ப வறுமை காரணமாக அவளைத் தன் தம்பியிடம் தத்துக் கொடுத்துவிட்டார் அவளுடைய தந்தை.அவளுடைய சிற்றப்பாவும்,சித்தியும் அவளுக்கு வேண்டியதை எல்லாம் தயார் செய்து கொடுத்தார்கள்.ஆனால் ஒருநாள் கூட அவளிடம் பாசமாக பேசியதே இல்லை.தன் மீது அக்கறை காட்டவும்,அன்பு செலுத்தவும் யாருமின்றி வாழ்க்கையை வெறுமையாக வாழ்ந்து வந்தாள்.

  தன் வீட்டு முன்புறம் ஆசையாய் நட்டு வைத்திருந்த மல்லிகைச் செடியையும்,ரோஜா செடியையும்,தான் ஆசையாய் தூக்கிக் கொஞ்சிய பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும் விட்டுவிட்டு வந்த ஏக்கம் மட்டும்தான் அவளுக்கு இருந்ததே தவிர வீட்டிலுள்ளவர்களைப் பிரிந்து வந்த ஏக்கம் துளியும் இல்லை.

   வாழ்க்கையை விரக்தியாக வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு இருந்த ஒரே பிடிமானம் பல்கலைக்கழக வாழ்க்கை மட்டும்தான்.

  அறிமுக வாரம் என்பதால் பாடங்கள் எதுவும் தொடங்கவில்லை.ஜூனியர் மாணவர்கள் சீனியர் மாணவர்களிடம் அகப்பட்டு வருந்தி கொண்டிருந்தார்கள்.ஒரு பக்கம் ஜூனியர் மாணவிகளுக்கு மார்க் போடும் பணி நடந்து கொண்டிருக்க,இன்னொரு பக்கம் ஜூனியர் மாணவர்களின் கழுத்தில் போர்டுகளைத் தொங்கவிடும் பணி நடந்து கொண்டிருந்தது.

  அன்று காலை நித்யா விடுதியிலிருந்து கலவரத்துடன் நடந்து போய் கொண்டிருந்தாள்.ரேகிங் நடந்து கொண்டிருந்ததை தூரத்திலிருந்து கவனித்துவிட்டாள்.

  ஒரு மரத்தினடியில் கூட்டமாக அமர்ந்திருந்த சீனியர்களின் கண்களில் நித்யா பட்டுவிட்டாள்.அந்த மாணவர்களில் ஒருவன் அவளை கை காட்டி அழைக்க,பயந்து பயந்து அவர்களை நெருங்கினாள்.

 சீனியரைப் பார்த்தா வணக்கம் சொல்ல தெரியாதா?” அவர்களில் ஒருவன் அதட்டலான குரலில் மிரட்ட,நித்யா பயந்துவிட்டாள்.அவள் கண்கள் கலங்கின.

  அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.அவளை பாட்டுப் பாட சொன்னார்கள்; நடனம் ஆட சொன்னார்கள்.அவள் எதையும் செய்யாமல் மௌனமாக நின்றாள்.

  உங்க பேர் என்னா?”

  நி..நித்யா தடுமாறினாள்.

  நி..நித்யா கூட்டத்தில் ஒருவன் அவளை மாதிரியே பேசி காண்பிக்க,அங்கே சிரிப்பொலி எழுந்தது.

  நித்ய,இப்ப நீங்க ஒரு பாட்டுப் பாடி,டான்ஸ் ஆடப்போறீங்க நித்யா கலங்கிய கண்களோடு அமைதியாக இருந்தாள்.

  நாங்க சொன்னதைச் செய்யலேன்னா இன்னிக்கு முழுக்க இங்கேயேதான் நிக்கனும்.நாங்களாவது பரவால.வேற யாராவது வந்தா என்ன செய்வாங்கன்னு தெரியாது.

  பாட்டு மட்டும் பாடினா விட்டுடுவீங்களா?” தயங்கி தயங்கி கேட்டாள்.

  முதல்ல பாடுங்க பார்க்கலாம்.”

   சற்று நேரம் தயங்கிய பின் தனக்கு மிகவும் பிடித்தமான அந்தப் பாடலைப் பாடினாள்.

  எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

  என்னுயிரில் கலந்தே அது பாடும்

  சேர்ந்திடவே உனையே ஓஓஓ

  ஏங்கிடுதே மனமே

  அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்ய,ஒருவன் மட்டும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

   அவன்தான் அரவிந்தன்.வர்த்தக நிர்வாகத் துறையில் இறுதியாண்டில் பயில்பவன்.நித்யா பாடிய அந்தப் பாடல் அவனுக்கு மிகவும் பிடித்தமான பாடல்.ஒவ்வொரு வருட கலைநிகழ்ச்சியிலும் அந்தப் பாடலைத்தான் அவனும் பாடுவான்.

  அரவிந்தன் நித்யாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.நித்யாவுக்கு உயரமான,ஒடிசலான தேகம்.நீண்டு பெரிதாக இருந்த கருவண்டு விழிகள் அவளுடைய முகத்துக்கு ஒருவித வெகுளித்தனத்தைக் கொடுத்திருந்தன.அவளது உதட்டோர மச்சத்தையும்,குலுங்கி குலுங்கி நடனமாடிய ஜிமிக்கிகளையும் இரசித்துக்கொண்டிருந்தான் அவன்.

  நான் போகட்டுமா?”

  டான்ஸ் ஆடலையே,அதனால ராத்திரி வரைக்கும் இங்கே

  நிக்கணும்,”

  டேய் விடுங்கடா அந்தப் பொண்ணை

  அரவிந்த் என்னடா புதுசா பாவம் பர்க்குறே?”

  பேசாம இருங்கடா,நீங்க போங்க நித்யா

  நித்யா அரவிந்தை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போனாள்.

  நாளைக்கு மாட்டாமலா போயிடும்,அப்ப பார்த்துக்கறோம்,” அரவிந்தனின் நண்பர்கள் கோபமாக எழுந்து போனார்கள்.

 
ஆக்கம் : உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்,மலேசியா
                                               
 
(தொடரும்)
 
 
 

1 comment: