Saturday, August 10, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 14 : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்


      எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
     (என் ஜீவன் பாடுது - 1988)
 
 
 
 
      கிருஷ்ணர் மனித ரூபத்தில் வரமாட்டார் என தெரிந்தும் ஆண்டாள் அவரையே நினைத்துக்கொண்டிருந்தாள்.மீராவும் அந்தக் கண்ணனுக்காக உருகி நின்றாள்.அவர்களைப் போன்றே மனித ரூபத்தில் மீண்டும் வரவே முடியாத உருவமில்லாத ஓர் ஆணின் மேல் அளவற்ற நேசம் கொண்டிருந்த ஒரு போற்றுதலுக்குரிய பெண்ணின் கதையையும்,காதலுக்காக தனது கொள்கை,மதம்,தந்தை அனைத்தையும் துறந்து கடைசியில் தன் உயிரையே துறந்த ஒரு பரிதாபத்திற்குரிய ஆணின் கதையையும் மையமாகக் கொண்டிருந்த படம்தான் கார்த்திக்,சரண்யா,சுதா நடிப்பில் 1988-ஆம் ஆண்டு வெளிவந்த என் ஜீவன் பாடுது’.

   இளையராஜா ஐயாவின் இசையில் அவரும்,பஞ்சு அருணாசலமும் இணைந்து எழுதிய கட்டி வெச்சுக்கோ,மௌனமேன்,ஆம்பளை என்றால்,காதல் வானிலே,ஒரே முறை,எங்கிருந்தோ அழைக்கும் ஆகிய இனிமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.அவற்றில் இன்று இவ்வார கட்டுரையில் இடம்பெறப்போகும் பாடலை எழுதியவர் இளையராஜா அவர்கள்.அந்தக் காலத்து காதலர்களுக்கு தேசியகீதமாய் இருந்தது இப்பாடல்.

  ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியிருந்த இப்படம் வித்தியாசமான கதையைக் கொண்ட படம்.

     நர்மதா(சரண்யா) கல்லூரியில் தன் படிப்பைத் தொடரவருகிறாள்.மற்ற மாணவர்கள் அனைவரும் சிற்றுண்டிச்சாலையில் அலப்பறை செய்துகொண்டிருக்க,நர்மதா அவர்களினின்று தனித்து இருக்கிறாள்.கல்லூரியில் ஓவிய அறையில் அழகான ஓவியங்களைப் பார்த்து இரசிக்கும் அவள் அந்த உயிரோட்டமான ஓவியங்களையெல்லாம் வரைந்தவர் சுரேன்(கார்த்திக்) என்ற கல்லூரி மாணவர் என்பதை அறிந்து வியப்போடு தன் தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.அந்தத் தோழியின் மூலம் சுரேன் அற்புதமாக எழுதக்கூடியவன் என்பதை அறிந்து வெகு ஆர்வமாய் அவன் எழுதிய கவிதைப் புத்தகங்களைத் தேடி எடுத்துப்போகிறாள்.

 

உன்னுடைய உதடுகளால் உச்சரிக்கப்படும்போதுதான்

என் பெயர் எவ்வளவு அழகானது என்று

எனக்கே தெரிந்தது

 

    சுரேன் எழுதிய அந்த வரிகளை இரசித்துப் படிப்பவள் அவன் எழுத்தின்பால் கவரப்பட்டு அவனுடைய எல்லா புத்தகங்களையும் படித்து முடிக்கிறாள்.அவனுடைய திறமையைக் கண்டு அதிசயிப்பவள் அவனது நெருங்கிய நண்பனான சின்னியிடம் சுரேந்திரனைப் பற்றி விசாரிக்கிறாள்.கல்வியிலும்,கலையிலும்,இலக்கியத்திலும் சிறந்து விளங்கும் அவனைப் பார்க்கவேண்டுமென ஆசைப்படுவதாய் சொல்லி அவனைப் பற்றி கேட்கிறாள்.சின்னி அவளிடம் அவ்வளவு அற்புத திறமைகள் வாய்ந்த சுரேந்திரன் பிலோமினா(சுதா) என்ற பெண்ணால் ஏமாற்றப்பட்டு ,அந்த வலியைத் தாங்கமுடியாமல் தன் உயிரையே மாய்த்துக்கொண்டதைச் சொல்கிறான்.

  நர்மதா பார்க்க ஆசைப்படும் சுரேன் உறங்கிகொண்டிருக்கும் இடம் என அவன் கல்லறையைக் காட்ட அவள் கண்கள் கலங்குகின்றன.அவனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலில் தனக்குக் கிடைத்த அவனது நாட்குறிப்பை வெகு ஆர்வமாய் எடுத்துப் படிக்கிறாள்.தன் தோழிகள் கிண்டல் செய்தபோது தன்னைப் பொருத்தவரையில் அது ஒரு காதலனின் ஆத்மராகம் என்கிறாள்.அவனது புகைப்படத்தைப் பார்ப்பவள்,”சாமுத்திரிகா இலட்சணம் பொருந்திய இந்த இளைஞன் ஒரு பெண்ணுக்காக தன் உயிரையே மாய்த்துக்கொண்டான் எனில் அவன் எந்த அளவுக்கு அப்பெண்ணை நேசித்திருப்பான் என சிலிர்க்கிறாள்.   நர்மதாவுக்கு சுரேந்திரனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் எழவே,அவனது கல்லறைக்கு ஒருநாள் தனியாக செல்கிறாள்.அவள் தோழிகள் அவளைக் கண்டிக்கிறார்கள்.அவள் அவர்கள் சொன்னதைக் கேட்டு பதட்டப்படவேயில்லை.

  மறுநாள் அவன் சுரேந்திரன் குதித்து இறந்த இடத்தைப் போய் பார்க்கிறாள்.அவன் குதித்த அந்த உயரமான இடத்தில் நின்று பார்த்தபோது அவள் கால்பட்டு சிறு பாறையொன்று மலயுச்சியிலிருந்து உருண்டு விழ,சுரேந்திரனும் அவ்வாறுதானே இறந்திருப்பான் என்பதை எண்ணுகையில்  அவள் மனம் சொல்லொணா துயரை அனுபவிக்கிறது.

  அந்தக் காடுகளில் உள்ள மரம்,சிறு பாறைகள் எல்லாவற்றிலும் காதல் பொய் என்று எழுதிவைத்திருப்பதைப் பார்க்கிறாள்.ஒரு கல்லில் ரத்தத்தாலும் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்கிறாள்.அப்போது பனி சூழந்த அந்த இடத்தில் ஓஓஓஒ என்ற ராகத்தோடு எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என அவன் பாடுவதை அவளால் உணரமுடிகிறது.

    அன்று இரவு முழுக்க அவளால் உறங்கவே முடியவில்லை.அவன் கீதம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க,தன் மெத்தைக்குப் பக்கத்தில் வைத்திருந்த அவனது புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.பின்னர் எழுந்து போய் அவனது நாட்குறிப்பைத் திறக்கிறாள்.

 

ஒரே முறை உன் தரிசனம்

உலாவரும் என் பூமனம்

என் கோயில் மணிகள்….

உன்னை அழைக்கும்

நெஞ்சோடு நீ........

      அந்த வரிகளோடு அவன் எழுதிய கவிதை நின்று போயிருக்க,அவள், கண்ணோடு நீ வா என்ற வரியை யோசித்து உடனே எழுத முற்படுகையில் பேனா எழுத மறுக்கிறது.வேறு தாளில் எழுதிப் பார்க்கும்போது எழுதும் பேனா அவனது நாட்குறிப்பு தாளில் எழுதாததால் அவள் தன் உள்ளங்கையில் பேனாவால் குத்திக்கொண்டு,தன் ரத்தத்தைக்கொண்டு அந்த வரிகளை எழுதுகிறாள்.அவள் தன் கல்லறைக்கு வந்ததிலிருந்து அவளைப் பின்தொடரும் சுரேந்திரனின் ஆவி அங்கு தோன்றுகிறது.இனி தன்னைப் பற்றி அறிய முற்படவேண்டாம் என சொல்லிவிட்டு மறைந்துவிடுகிறது.

  மறுநாள் பொழுது விடிந்ததும் அவள்,அவன் கல்லறைக்குச் சென்று பூ வைத்துவிட்டு அவன் எழுதி முடிக்காமல் விட்ட கவிதையை தன் வரிகளால் தொடர்ந்து பாடுகிறாள்.

  உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா என அவனைப் பார்க்க விரும்புவதை தன் பாடலின் வழி வெளிப்படுத்த சுரேந்திரனின் ஆவி அவளை அதிசயமாய் தொடர்ந்து வந்து பார்க்கிறது.

  நர்மதாவுக்கு அவன் மீது கொண்ட ஆர்வமும்,பரிதாபமும் அளவுக்கதிக நேசத்திற்கு வித்திட்டதால் எந்நேரமும் அவனையே நினைத்து புலம்புகிறாள்.காய்ச்சல் கண்டதுபோல் அவள் உடம்பு நடுங்குகிறது.இரவெல்லாம் சுரேன் சுரேன் என ஏக்கத்தோடு அவன் பெயரைச் சொல்லி அனத்திக்கொண்டே இருக்கிறாள்.அவளது நிலை பொறுக்கமாட்டாமல் மீண்டும் சுரேனின் ஆவி அவள் முன் தோன்றுகிறது.தன்னிடம் என்ன இருக்கிறதென்று இந்தப் பெண் இப்படி தொடர்ந்து வருகிறாள் என தன் வியப்பைக் காட்டும் ஆவியிடம் அவன் வாழ்க்கையில் நடந்ததை வெறும் ஏட்டில் படிப்பதைக் காட்டிலும் அவன் மூலம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ள ஆசைப்படுவதாய்ச் சொல்கிறாள்.இனி அவள் நினைத்த நேரத்தில் அவள் கண்களுக்கு மட்டும் தெரிவதாய் வாக்கு கொடுத்துவிட்டு சுரேனின் ஆவி மறைகிறது.

   மறுநாள் முதல் நர்மதா சுரேனின் ஆவியைச் சந்தித்துப் பேசுகிறாள்.சுரேனின் நற்குணங்கள் மிரட்ட,அவளால் அவனை நேசிக்காது இருக்கமுடியவில்லை.அவள் மனதில் அவன் மேல் தீராத காதல் மலர்கிறது.ஒரு தடவை கனத்த மழை பெய்யும்பொழுது சுரேனின் ஆவியுடன் பேசிக்கொண்டிருக்கையில் தன் மீது ஒரு துளி மழைநீர் கூட பாடமலிருப்பதைக் கண்டு அதிசயிக்கிறாள்.தான் உடன் இருக்கும்வரை அவள் மீது மழைத்துளி படாது என ஆவி சொல்ல,நர்மதா பெருமிதம் அடைகிறாள்.அவனோடு அடிக்கடி பேசி இன்புறுகிறாள்.சுரேனின் ஆவி வேறு யாருடைய கண்களுக்கும் தெரியாது என்பதால் அவள் தனக்குத்தானே பேசிக்கொள்வதாக கல்லூரியில் பலரும் அவளைக் கண்டு ஒதுங்குகிறார்கள்.விரிவுரையாளர் மனோரமா அவளது தந்தையிடம் அந்த விசயத்தைச் சொல்ல,அவர் மனோநல மருத்துவர் விஜயின்(பிரதாப்) உதவியை நாடுகிறார்.

  விஜய்யிடம் நர்மதா சுரேனைப் பற்றி அனைத்தும் சொல்கிறாள்.

  சுரேந்திரன் ஒரு கோயில் குருக்களின் மகன்.தாய் இறந்தபிறகு அவனுக்கு எல்லாமுமாய் இருந்து அவன் தந்தை (சந்தானபாரதி) அவனை அன்பாய் கவனித்துக்கொள்ள, அவனுக்குப் படிப்பு மட்டுமே முக்கிய கடமையாய் இருக்கிறது.வேட்டி,ஜிப்பா,நெற்றியில் பட்டை என இருக்கும் அவன் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காமல் இருக்கிறான்.அவனை நெருங்கிப் போய் ஏமாந்து போன சில பெண்கள் அதைப் பற்றி புதிதாக கல்லூரிக்கு வந்து சேர்ந்த பிலோமினாவிடம் சொல்ல,அவள் அவனை தன் மீது காதலோடு புலம்ப வைப்பதாய் சவால் விடுகிறாள்.அதற்கேற்றமாதிரி அவனைத் துரத்தி துரத்தி காதலிப்பதாய்ச் சொல்கிறாள்.அவன் எவ்வளவோ மறுத்தும் அவள் தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்க,ஒருநாள் பொறுக்கமாட்டாமல் அவளை அறைந்து விடுகிறான்.மறுநிமிடமே ஒரு பெண்ணை அடித்துவிட்டதை எண்ணி அவன் வருந்த,பிலோமினா அவன் தனது காதலை நிராகரித்துவிட்டதால் தற்கொலை செய்துகொள்வதற்காக ரயில் தண்டவாளத்தில் படுத்திருப்பதாய் அவன் கல்லூரி நண்பர்கள் சொல்ல,அவன் பதறிப்போய் அவளைப் பிடித்து இழுத்து கட்டிக்கொள்கிறான்.தனக்காக உயிரையேவிடும் அளவுக்கு அவள் தன்னைக் காதலிக்கிறாள் என்றெண்ணி அவளை உயிருக்குயிராய் காதலிக்கிறான்.

  அவளோ தன் சபதத்திற்காக அவனை மேலும் உருக வைக்க எண்ணி அவனை அலைக்கழிக்கிறாள்.ஒருநாள் அவனது தந்தை அவளைப் பார்க்க வந்தபோது கூட அவனைப் போகவிடாமல் தடுத்துவிடுகிறாள்.அவள் மீது அதிக நேசம் வைத்துவிட்டதால் அவன் அவளுக்காக தன் தந்தையிடமே பொய் சொல்கிறான்.இந்நிலையில் அவளது பிறந்தநாள் வருகிறது.அவள் எதிர்பார்க்காத பரிசைத் தரப்போவதாய் சொல்லும் அவன் அவளுக்காக கிறிஸ்துவ மதத்திற்கு மாறுகிறான்.அவள் உருகிப் போய்விட்டதாய் நடிக்கிறாள்.

  கல்லூரி விழாவில் அவள் வரவை எண்ணி அவன் உருகிப் பாடுகிறான்.அப்போது எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்ற பாடல் சந்தோசமான மெட்டில் ஒலிக்கிறது.அவளும் அவனோடு இணைந்து பாடுகிறாள்.

     பிலோமினா எதிர்பார்த்த நாள் வருகிறது.நான்கு நாள்கள் அவளைப் பார்க்காததால் அவளைத் தேடிப்போய் தன் ஏக்கத்தை வெளிப்படுத்த,அவள் வாய்விட்டு சிரிக்கிறாள்.தன் சபதத்தில் தான் ஜெயித்துவிட்டதாக சொல்லிவிட்டு தன் திருமண பத்திரிக்கையை நீட்டிவிட்டு கிளம்புகிறாள்.அவன் கலங்கிப் போகிறான்.அவளது அப்பா கொடுத்த கடைசி வாய்ப்புக்காக மரண தருவாயில் இருக்கும் தன் தந்தையைக் கூட போய் பார்க்காமல் பிலோமினாவைப் பிடிப்பதற்காக ஓடுகிறான்.அதற்குள் இரயில் புறப்பட்டுவிடுகிறது.அவன் தந்தையும் இறந்து போகிறார்.காதலுக்காக எல்லாவற்றையும் இழந்து கடைசியில் அந்தக் காதலே பொய்யாகிப்போனதில் அவன் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறான்.

   நர்மதா அந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் அவனை ஏமாற்றிய பிலோமினாதான் பிரசவ நேரத்தில் இறந்துபோன தன் மனைவி என்பதால் விஜய்யும் அவனுக்காக பரிதாபப்படுகிறார்.சுரேனின் மீது நர்மதா காட்டும் நேசத்தையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

  நர்மதாவை தன் நண்பரின் மகன் ஆனந்துக்கு திருமணம் செய்துவைக்க அவள் அப்பா திட்டமிட,அவள் அந்தத் திருமணம் வேண்டாமென மறுத்து,சுரேனின் ஆவியிடம் தனது காதலையும் சொல்லிவிடுகிறாள்.தன்னால் அவள் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்பதால் அந்த ஆவி இனிமேல் அவள் முன் தோன்றப்போவதில்லை என சொல்லிவிட்டு மறைகிறது.

   திருமண நாளன்று நர்மதா விஜய்யின் உதவியோடு வீட்டை விட்டு வெளியேறி,சுரேனைத் தேடிப்போகிறார்.அப்போது இப்பாடல் மீண்டும் ஒருமுறை சோகமாக ஒலிக்கிறது.அவள் கண்களில் கண்ணீரோடு தன்னைத் தேடி அலைந்து திரிவது கண்டு சுரேனின் ஆவியும் கலங்குகிறது.பாடல் முடிந்ததும் அவள் சுரேனின் கல்லறையில் நின்று,சுரேன்,உங்களைப் பார்க்கனும் ஒரே ஒரு தடவை என்கிறாள்.ஆவி அமைதியாக நிற்கிறது.அவள் அழுதுக்கொண்டே தன் ஆழமான காதலை வெளிப்படுத்திவிட்டு அதே மலையுச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறாள்.இருவரது ஆவியும் ஒன்றாய் சேர்ந்து நடக்கையில் எங்கிருந்தோ அழைக்கும் என்ற பாடலின் ஹம்மிங் மட்டும் ஒலிக்கிறது.

    இப்பாடலும் படமும் என் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவை.அதற்குக் காரணம் கார்த்திக்.என் குழந்தைப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் கார்த்திக்.அவர் மீது அதீத ஈர்ப்பு இருந்ததுண்டு எனக்கு.என் பள்ளிப் பருவத்தில் ஒருமுறை இந்தத் திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.அப்போது படத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் எனக்குப் பிடித்தமான கார்த்திக் தற்கொலை செய்துகொண்டு ஆவியாக சுற்றியது என்னை வெகுவாய்ப் பாதித்ததில் பலநாள் அழுதிருக்கிறேன்.பெரும் வலியொன்றை என் மனதில் பலநாள் சுமந்து திரிந்தேன்.தோட்டத்து சக தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ஓய்வு நேரத்தில் இந்தப் படத்துக் கதையை நடித்துப் பார்த்ததுண்டு.அழுதுக்கொண்டே, மீன்குளம் கட்டுவதற்காக தோட்டக்கார அண்ணன் வெட்டிவைத்திருந்த சிறு பள்ளத்தில் குதித்து நானும் தற்கொலை செய்துகொண்டதாய் நடித்தது இன்னும் என் மனதில் பசுமையாய் நினைவிலிருக்கிறது.அந்த அளவுக்கு கார்த்திக் என் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார்.

    உதயகீதங்கள் எழுதுவதற்காக மீண்டுமொருமுறை இந்தப் படத்தைப் பார்த்தபோது இரவு முழுக்க உறங்கமுடியாமல் மீண்டும் அந்த வலியைச் சுமந்திருந்தேன்.படத்தில் சரண்யா பாத்திரம் சுரேன் சுரேன் என அனத்தியபோது அந்த ஏக்கத்தை நானும் உணர்ந்து தவித்தேன்.கார்த்திக்கின் கதாபாத்திரம் என்னைக் கலங்கவைத்தது. இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதிலும் கூட நிஜத்தில் அப்படி ஒருவன் இருந்ததுபோல் உணர்ந்து துடித்துக்கொண்டிருக்கிறேன் காரணம் என்னைப் பொறுத்தவரையில் காதலில் தற்கொலை என்பது கோழைத்தனம் அல்ல.அது ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடு.

    இளையராஜா,மனோ,லதா மங்கேஷ்கர் குரலில் ஏக்கமும்,வலிகளும் சுமந்து வெளிப்படும் அந்த ஆத்மராகத்தை என் அன்பிற்கினியவனுக்கும்,காதல் ரணங்களை நெஞ்சில் சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும்,வாழ்ந்து மடிந்த,வாழாமல் மடிந்த அனைத்து காதலர்களுக்கும் சமர்ப்பணமாய் வழங்குகிறேன்.

 

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே அது பாடும்

சேர்ந்திடவே உனையே..ஓஓஓ

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே உனையே..ஓஓஓ

ஏங்கிடுதே மனமே

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே அது பாடும்

 

வசந்தமும் இங்கே வந்ததென்று

வாசனை மலர்கள் சொன்னாலும்

வசந்தமும் இங்கே வந்ததென்று

வாசனை மலர்கள் சொன்னாலும்

தென்றலும் இங்கே வந்து நின்று

இன்பத்தின் கீதம் தந்தாலும்

நீயின்றி ஏது வசந்தமிங்கே

நீயின்றி ஏது ஜீவனிங்கே

சேர்ந்திடவே உனையே ஓஓஓ

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே அது பாடும்

சேர்ந்திடவே உனையே..ஓஓஓ

ஏங்கிடுதே மனமே

 

காதலில் உருகும் பாடலொன்று

கேட்கிறதா உன் காதினிலே

காதலில் உருகும் பாடலொன்று

கேட்கிறதா உன் காதினிலே

காதலின் உயிரைத் தேடி வந்து

கலந்திட வா என் ஜீவனிலே

உயிரினைத் தேடும் உயிரிங்கே

ஜீவனைத் தேடும் ஜீவனிங்கே

சேர்ந்திடவே உனையே ஓஓஓஓ

 எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

என்னுயிரில் கலந்தே அது பாடும்

சேர்ந்திடவே உனையே..ஓஓஓஓ 

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே உனையே..ஓஓஓஓ 

ஏங்கிடுதே மனமே

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

எங்கிருந்தோ அழைக்கும்...

 

 

 

No comments:

Post a Comment