Saturday, June 8, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 7:ஆயிரம் மலர்களே மலருங்கள்

   
 
கீதம் 7:ஆயிரம் மலர்களே மலருங்கள்     (நிறம் மாறாத பூக்கள்)
 
 
 
 
 
 
      
      இந்தப் பூமியில் நொடிக்கு நொடி ஆயிரமாயிரம் பூக்கள் பூத்து மலர்கின்றன..ஓரிரு தினங்களில் அவை வாடியும் போகின்றன.ஆனால் அப்பூக்களின் நிறம் மட்டும் மாறுவதேயில்லை.அது போன்றுதான் காதலும்.மிக ஆழமாக,இதயம் பார்த்து வரும் காதல் எந்த நேரத்திலும் தன் சுயத்தை இழப்பதில்லை.சோகத்திலும் கூட ஒரு சுகம் இருப்பதை காதல் நினைவுகள் உணரவைக்கின்றன.வலியைத் தந்தாலும் மீண்டும் மீண்டும் அந்த இன்ப நினைவுகளில் நீந்தி ஆறுதல் தேடுகின்றன.கரைசேரும் முன்பே கரைந்து போன காதலின் சோகத்தை இசைக்கும் பாடல்களில் ஒன்றுதான் நிறம் மாறாத பூக்கள்" என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஆயிரம் மலர்களே மலருங்கள்" என்ற பாடலாகும்.


இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1979-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தக் காதல் காவியத்தில் விஜயன்,சுதாகர்,ராதிகா,ரதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இளையராஜா ஐயாவின் இசையில் முதன்முதலாக,இரு பறவைகள்,ஆயிரம் மலர்களே போன்ற இனிமையான பாடல்கள் ஒலித்திருக்கும் இப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற பாடல் நம் இதயத்தில் நுழைந்து நம்மை உருகவைக்கும் பாடல்களில் ஒன்றாய் இருக்கிறது.
காதலினால் காயம் கண்ட இரு நெஞ்சங்களின் கதை.சுதாகர் வேலைக்குத் திண்டாடும் ஒரு பட்டதாரி.ஒரு மோதலில் ராதிகாவுக்கு அவன் அறிமுகமாகிறான்.அவள் கார் சக்கரத்தில் காற்றைப் பிடுங்கிவிட்டுவிட்டு அனுபவியுங்கள் அடங்காப்பிடாரிகளேஎன எழுதிவைத்துவிட்டு ஓடிவிடுகிறான்.அன்றிரவு தன் கையில் கிடைத்த டைரியைப் பிரித்துப் படிக்கும்போது அவனது ஏழ்மை நிலையை அறிந்து அவன்மீது பரிதாபம் கொள்கிறாள் ராதிகா.


"நட்சத்திரங்கள் வானில் மட்டுமல்ல


என் கைலி,பனியனிலும் உண்டு"

 
 
 
 
என அவன் எழுதிவைத்த வரிகளைக் கண்டு அவளால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.தன் அலுவலகத்தில் அவனுக்கு மேலாளர் வேலை வாங்கித் தருகிறாள்.அவனிடமே வேலைகேட்டு வந்து துரத்தப்படுகிறாள்.அவன் காட்டும் பந்தாவைக் கண்டு வாய்விட்டு சிரிக்கிறாள்.பின்னர் அவள் தந்தைதான் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர் என அறிந்து நடுங்குபவனை மிரட்டி,அவனது மிரட்சியையும் குறும்பையும் கண்டு இரசிக்கிறாள்.அவர்களுக்குள் காதல் மலர்கிறது.

ராதிகாவின் தந்தை ஆரம்பத்தில் அந்தக் காதலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டாலும் தன் மகளின் பிடிவாதத்தின் முன் தோற்றுப்போகிறார்.காதல் பறவைகள் மலை முழுவதும் சிறகடித்துப் பறக்கின்றன.


ஒருநாள் தொழில் நிமித்தம் மும்பைக்குச் செல்லும் சுதாகர் தன் தந்தையின் பணத்தைக் களவாடிவிட்டு தலைமறைவாகிவிட்டதை அறிந்து வேதனை அடைகிறாள் ராதிகா.அவள் காதல் கானல் நீராகிவிட்டதை எண்ணி நித்தம் கண்ணீர் வடிக்கிறாள்.ஒரு மாறுதலாக இருக்கட்டும் என அவள் தந்தை அவளை ஊட்டிக்கு தன் நண்பனின் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறார்.அங்குதான் விஜயனைச் சந்திக்கிறாள்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் விஜயனின் நல்ல குணம் தெரியவரவே அவனோடு நட்பு கொள்கிறாள்.அவனுக்குள்ளும் காதல் காயம் இருப்பதை அறிகிறாள்.அவன் தன் கதையைச் சொல்கிறான்.

ரதியின் அழகில் மயங்கி அவளை நேசிக்கிறான்.விளையாட்டுத்தனம் நிறைந்த அவள் இருமுறை அவனை ஏமாற்றிவிட,மூன்றாவது முறை அவளிடம் ஏமாந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தனக்கு நீச்சல் தெரியாது என சொல்லியும் கேளாது அவளைப் பிடித்து ஏரியில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறான்.பாவம் அவள் ஏரியில் மூழ்கி இறந்துபோகிறாள்.தானே தன் நேசத்திற்குரியவளைக் கொன்றுவிட்டதை எண்ணி வேதனையில் உழலும் அவன் அவள் நினைவு வரும்போதெல்லாம் அந்த ஏரியருகே சென்று,ரதியின் குரலில் பாடி பதிவு செய்யப்பட்ட அந்தப் பாடலைக் கேட்டு அவள் நினைவில் கரைகிறான்.

இருவருமே ஒரே பாதையில் பயணிப்பதை உணர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க முடிவு செய்கின்றார்கள்.ஆரம்பத்தில் ரதிக்காகவும்,விஜயனுக்காகவும் ஒலிக்கும் இப்பாடல் பின்னர் விஜயனுக்காகவும்,ராதிகாவுக்காகவும் படத்தில் ஒலிக்கிறது.

இப்பாடலை ஜென்சியும்,மலேசிய வாசுதேவனும் பாடியிருக்கிறார்கள்.ஜென்சியின் குரலில் நம் உயிரோடு கலக்கக்கூடிய ஒருவித ஈர்ப்புத்தன்மை இருக்கும்.ஏதோ மெல்லிய சோகத்தை ஒளித்துவைத்திருப்பதாக இருக்கும்.

இப்பாடலிலும் அப்படிதான்.ஆரம்பத்தில் இப்பாடல் சந்தோசமான தருணத்தில் ஒலித்தாலும் நம் மனதை என்னவோ செய்கிறது..ஏதேதோ ஏக்கங்களைக் கொண்டுவந்து நெஞ்சம் கனக்க செய்கிறது.ஒருவித வலியையும் தருகிறது.படத்தில் பெயர் ஓடும்போது இதே பாடலின் மெட்டில் நிறம் மாறா பூக்களே என்ற ஒரே வரியோடு லாலலா லாலலா என்ற ஹம்மிங் மட்டுமே முழுமையாய் ஒலிக்கிறது.அப்போதே இந்தப் பாடல் படத்தில் எப்போது ஒலிக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டு பண்ணிவிடுகிறது.சபாஷ் இளையராஜா ஐயா.

படத்திலும் இப்பாடல் முழுமையாக ஒலிக்காமல் விட்டுவிட்டு ஒலிக்கிறது.ஆரம்பத்தில் விஜயன் குளத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கும்போது கொஞ்சம் ஒலிக்கிறது.அதன்பின்னர் விஜயன் தன் காதலை ராதிகாவிடம் சொல்லும்போது ரதியின்பால் விஜயனின் குறும்பையும்,துணிச்சலையும் எண்ணி அவள் சிரித்துவிடுகிறாள்.அந்த சந்தோசத்தை உணரனும் என்றால் நீயும் யாரையாவது காதலிச்சிருக்கனும் என்கிறான்.அவள் உணர்ச்சிகளை விழுங்கிய குரலில்,"அப்கோர்ஸ் என்கிறாள்.அவன் பாடலை ஒலிக்கவிடுகிறான்.

அப்போது வரும் காட்சியில் ரதியோடு மகிழ்ச்சியாக ஊட்டியின் பனிப்பிரதேசத்தில் அழகாய் பூத்துக்குலுங்கிய மலர்களின் நடுவே இருவரும் சந்தோசமாய் ஆடிப் பாடியதை நினைத்துப் பார்த்து இன்ப நினைவினில் மூழ்குகிறான்.

நீ யாரோ,நான் யாரோ யார் சேர்த்ததோ என்ற வரிகள் வரும்போது அதற்கு மேல் கேட்க இயலாமல் வானொலியை முடக்கிவிடுகிறான்.இருவரது கண்களும் கண்ணீரில் நிறைந்திருக்க,தனக்கு தனிமை வேண்டுமென எழுந்துபோகிறான்.

அன்றிரவில் ராதிகாவிடம் ரதியின் இறப்பைப் பற்றி சொல்லிவிட்டு கலங்கி நிற்கும்போது ராதிகா விஜயனின் தோளை ஆறுதலாய்ப் பிடிக்க,ம்ம்ம்ம் என்ற ஹம்மிங் மட்டும் அதே மெட்டில் வருகிறது.

மறுநாள் ராதிகா தனது காதல் சோகத்தை அவனிடம் சொல்லிவிட்டு கலங்கும்போது அவனுக்கு மனம் இளகிப்போகின்றது.ரதி என அவளை அழைத்துவிடுகிறான்.நாம் இருவரும் ஒரே படகில் பயணிக்கிறோம்என்கிறான்.அப்போது, கோடையில் மழைவரும் வசந்தகாலம் மாறலாம்என்ற வரிகளோடு பாடல் ஒலிக்கிறது.ஏரியின் நடுவே படகில் அமர்ந்திருக்கும் விஜயன் வழக்கம்போல் பூர்வஜென்ம பந்தம் என்ற வரிகள் வரும்போது அந்தப் பாடலை நிறுத்திவிட,ராதிகா தொடர்ந்து பாடுகிறார்.அதன்பின்னர் இருவரின் ஜீவனும் உடலிலிருந்து வெளியேறி ஒன்று சேர்ந்து பாடுவதாய் பாடல் தொடர்கிறது.

நமக்குப் பிடித்த பாடல்கள் ஒரே காட்சியில் முழுவதுமாய் ஒலித்து முடிந்துவிடுவதைக் காட்டிலும் இந்தமாதிரி விட்டுவிட்டு ஒலிக்கும்போது அந்தப் பாடலோடு நாம் அதிகம் ஒன்றிப்போய்விட முடிகிறது.அந்தக் காரணத்தினாலேயே நம்மால் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதில் பொதிந்து கிடக்கும் வலியையும்,ஏக்கத்தையும் உணரமுடிகிறது.

இப்பாடலை எழுதி வாங்குவதற்காக இளையராஜா ஐயா கவிஞர் கண்ணதாசனுக்காக காத்திருந்த போது கவிஞர் சாவகாசமாய் வந்தாராம்.இவர் சூழலையும்,டியூனையும் விளக்கியதும் பட்டென்று வரிகளைச் சொன்னவர் அடுக்கடுக்காய் யோசிப்பதற்கு ஒரு வினாடி கூட எடுத்துக்கொள்ளாமல் வார்த்தைகளை அடுக்கினாராம்.இவர் தாரராரே என சொல்லி முடிப்பதற்குள் கவிஞர் வார்த்தைகளைச் சொல்லி முடித்துவிட்டாராம்.என் தெம்போவைவிட இவரோட தெம்போ இன்னும் வேகமா இருக்கே,பொருந்தி வருமா?"என பாடிப் பார்த்தால் கனகச்சிதமாக இசையோடு,தாளத்தோடு அந்த வரிகள் பொருந்தி வந்தனவாம்.’என்றென்றும் ராஜாஎன்ற இசைநிகழ்ச்சியில் இளையராஜா ஐயா வியந்து சொன்ன விசயம் இது.

காலத்தால் அழியாத கவிஞனின் பாடல் வரிகள் ஆழமாய் மனதுக்குள் தங்கிவிடுகின்றன.இப்பாடலில் நாயகி ரதி என்பதை உணர்ந்து வெகு பொருத்தமாய் மலையின் மீது ரதி உலாவும் நேரமேஎன்ற வார்த்தைகளைப் பொருத்தியிருப்பார்.அதேமாதிரி குறுந்தொகை வரியானயாயும்,ஞாயும் யாராகியரோஎன்ற பாடலை ஒத்தநீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ? என்ற வரிகளும் அருமை.

பாடலைப் பாடிய மலேசியா வாசுதேவன்,ஜென்சி குரலைப் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.ஜென்சியின் குரல் தனித்தனமை வாய்ந்தது.மலேசியா வாசுதேவனுக்கு சிம்மக்குரலாக இருந்தாலும் சோகத்தையும்,ஏக்கத்தையும் குழைத்து வெளிப்படுத்தியிருந்தார் சிறப்பாக.

நிறம் மாறாத அன்பைக் கொண்டிருக்கும் தினக்குரல் அன்பர்களே,இவ்வார பாடலை என் அன்பிற்கினிய ஜீவனோடு உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்க விழைகிறேன்.வார்ந்தோறும் என்னை உற்சாகப்படுத்திவரும் அன்பிற்கினிய கே.இளம்தமிழ்,ஸ்ரீ,எஸ்.பி.ராஜா,.தமிழரசி,.மனோன்மணி,நவரத்னம்,நஆர்.நடராஜன்,எம்.பிரியர்தர்ஷினி,.பாண்டியன்,நா.ஜெயந்தி,.கண்ணன்,மற்றும் அனைத்து தினக்குரல் வாசகர்களுக்காகவும் இந்தப் பாடல் வரிகள்.





ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுதகீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ

நெருங்கிவந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
ஆயிரம் மலர்களே மலருங்கள்..

 
 
 

வானிலே வெண்ணிலா

தேய்ந்து தேய்ந்து வளரலாம்

மனதில் உள்ள கவிதைக் கோடு மாறுமா?
 

ராகங்கள் நூறு...பாவங்கள் நூறு..
 
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவா??

ஆயிரம் மலர்களே மலருங்கள்...

 
 
 
கோடையில் மழைவரும்

வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ?

காலதேவன் சொல்லும்

பூர்வஜென்ம பந்தம்

நீ யாரோ நான் யாரோ

யார் சேர்த்ததோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுதகீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ

நெருங்கிவந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
ஆயிரம் மலர்களே மலருங்கள்..



பூமியில் மேகங்கள்

ஓடியாடும் யோகமே

மலயின்மீது ரதி உலாவும் நேரமே

சாயாத குன்றும் காணாத நெஞ்சும்

தாலாட்டு பாடாமல் தாயாகுமோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுதகீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ

நெருங்கிவந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்




 




3 comments:

  1. ஆயிரம் மலர்களே மலருங்கள்..

    கவியரசு கண்ணதாசன் தனது திரையுலகப் பிரவேசப் பயணத்தில் சந்தித்த கடைசி தேவதூதன் இசைஞானி இளையராஜா! ஏழுஸ்வரங்களின் கலவையை எண்ணிலா வர்ண மெட்டுக்களாய் வழங்கிவரும் இசைஞானியின் திரையுலக நுழைவாயிலருகே நடைபெற்ற சங்கமமிது!

    இசையின் மொழியை அறிந்தவராய்.. விஸ்வநாதன் ஆர்மோனியம் உம்.. எனும்முன்னே முன்னூறு பல்லவிகள் தந்தவராய்.. சொல்மழை பொழிந்த கவிதைமேகம் கண்ணதாசன்.. காலம் இந்த வித்தகர்களை நம் கண்முன்னே காட்டியபோது கனிந்த ஸ்வரங்களில் அல்லவா நாம் களைப்பாறுகிறோம்? கவலைகள் மறக்கிறோம்! இன்பங்களில் மிதக்கிறோம்! இசையும் கவிதையும் நடத்தும் விருந்தினை நாளும்பொழுதும் அருந்துகிறோம்!

    பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் திரைப்படத்திற்காக கவியரசர் பாடல் எழுத வந்தபோது நடந்த சுவையான நிகழ்வை இசைஞானி தானே ரசிகர்களுக்கு எடுத்துவைத்த விருந்தினை இங்கே காணுங்கள்!

    “கவிஞரை மாதிரி இந்த உலகத்திலே ஒரு கவிஞர் இல்ல.. கவிதை எழுதறது வேற.. போடற மெட்டுக்கு எழுதுறது வேற.. இந்தப்பாடல் கம்போஸிங்கிற்கு எனக்கு நேரமில்லாம இருந்த நேரத்திலே.. ஒரு ரீ-ரெகார்டிங் வைச்சிருக்கோம்.. கவிஞர் வந்து 7 மணிக்கு வர்றது ஒரு கஷ்டம்.. 10 மணிக்குத்தான் வருவார். அண்ணா.. எனக்கு இந்த மாதிரி பேக்ரவுண்ட் ஸ்கோர் போய்க்கிட்டிருக்கு.. தயவுசெய்து நீங்க கொஞ்சம் முன்னாடி வரணும்னு சொன்னா.. டியூனே கம்போஸ் பண்ணல.. பாரதிராஜா வந்து சிட்டுவேஷன் சொல்லிட்டு நல்ல டூயட்.. ரெண்டு வாய்ஸ் வருது.. ம்..னு ..

    அவர் வரதுக்குள்ளே நான் டியூனை ரெடி பண்ணனும்.. அவர் 7 மணிக்கு வரார். நான் 6 மணிக்கே போயிட்டு.. போய் என்ன சிட்டுவேஷன்னு கேட்டு.. கேட்டுட்டு.. உடனே கம்போஸ் பண்ணேன்..

    தாரரா .தரராரார. தாரரா.... (டியூன்)

    வந்தாரு.. என்ன சிட்டுவேஷன்னு கேட்டாரு.. அவரு சிட்டுவேஷன் கேட்கறதே நமக்கு பார்த்தா எரிச்சல் வர்றமாதிரி கேட்பாரு.. முதல் எக்ஸ்பீரியன்ஸ்.. நான் சொல்றது.. டைரக்டர கேர் பண்ணவே மாட்டாரு.. சிட்டுவேஷன் என்னவென்று கேட்டதும் சிகரெட்டு புடிப்பாரு.. அங்கே ஒரு ஆஷ் ட்ரே இருக்கும். ‘து’ன்னு துப்புவாரு. சிட்டுவேஷனுக்கு துப்புராறாரா.. இல்லை.. நிஜமாவே துப்புராறாரா. தெரியாது... துப்பிட்டு.. ஆ.. சொல்லுங்க.. என்ன டியூன் போட்டிருக்கிங்கீங்களா.. இல்ல பாட்டு எழுதணுமான்னு கேட்டார். அண்ணா டியூன் போட்டிருக்கேன்.. எங்க கொஞ்சம் வாசி..

    தாரரா.. தரரா.. தாரரா.... (டியூன்)

    ஆயிரம் மலர்களே மலருங்கள்..

    நான் பாடுற டெம்போவுக்கு இருக்காது.. அது வேற டெம்போ..

    சொல்லி முடிக்கல.. அதுக்குள்ளே சொல்லிட்டாரு..

    ஆயிரம் மலர்களே மலருங்கள்.. எப்படி சேருதுண்ணு யோசிச்சிட்டு இருப்பேன்.. அப்புறம் பாடிப்பார்ப்பேன்.. அட.. சரியா இருக்கே..

    ம்.. அப்புறம்..

    தரரார தாரார தாரார .... (டியூன்)

    அமுதகீதம் பாடுங்கள்..

    தாரரா.. தாரரா.. தரராரார ராரரார .... (டியூன்)

    காதல் தேவன் காவியம்..

    நீங்களோ நாங்களோ நெருங்கிவந்து சொல்லுங்கள்..

    அதாவது பாட்டு எழுதறதக்கு யோசிக்கவே மாட்டாரு.. யோசித்து, நான் பார்த்ததில்ல.. .. நான் மியூசிக் எழுதற மாதிரி அவர் பாட்டு எழுதிப் போட்டுடுவார்.

    இதுபோல இன்ஸ்டன்டா பாட்டெழுதறதுக்கு உலகத்திலே எந்த கவிஞர்களும் கிடையாது. நான் நிறைய கவிஞர்களோட ஒர்க் பண்ணியிருக்கேன்.

    ஸ்டீபன் வாட் திருவாசம் ஒர்க் செய்யும்போதுகூட அவர் இரண்டு மாதம் எடுத்துகிட்டாரு.. அந்த சின்ன போர்ஷன் வரதுக்கு..
    ஆயிரம் மலர்களே.. மலருங்கள்..

    http://www.youtube.com/results?search_query=aayiram+malargale+malarungal+ilayaraja+concert&sm=1

    இந்தப் பாடலில்தான் மலேசியா வாசுதேவன் அறிமுகமானார்! ஜென்சி குரலுடன் ...

    ReplyDelete
  2. kaviri2012@gmail.com

    Blogger - please reply to my email...

    Kavirimaindhan

    ReplyDelete
  3. தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா..அற்புதமான பாடல்களைப் பற்றிய இத்தகைய சுவையான தகவல்கள் அப்பாடலின் மேன்மையை வருங்காலத்தில் சொல்லவேண்டும்;அதற்காக பாடலைப் பற்றிய முழுமையான பதிவாக இருக்கவேண்டும் என்ற வேட்கையில் நான் தொடங்கியதுதான் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.. :)

    ReplyDelete