Saturday, June 15, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் 9


 


கீதம் 9 : டேடி டேடி (மௌன கீதங்கள்)

 
 

 

     கே.பாக்யராஜ் அவர்கள் சிறந்த திரைக்கதை அமைப்பாளர்களில் ஒருவர் என பெயர் வாங்கியவர்.பல நல்ல கதைகளை தமிழ்ச்சினிமாவுக்கு வழங்கியவர்.அவருக்குப் பெண் இரசிகைகள் அதிகம் இருந்தார்கள்.சோகமான கதைகளைக் கூட நகைச்சுவை இழைந்தோட சொல்வதில் வல்லவர்.அவரது கதை,திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்த ஒரு படம்தான் மௌன கீதங்கள்

    படம் என பார்க்கும்போது எனக்கு பிடிக்காத படங்களின் வரிசையில்தான் இப்படம் இருக்கிறது.காரணம் (என் பார்வையில்)இப்படத்தில் பெண்களை அவமானப்படுத்துவது போன்று காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்தன.பெண் என்பவள் வெறும் போகப்பொருள்.ஆண்கள் எவ்வளவு பெரிய துரோகம் செய்திருந்தாலும் பெண்ணானவள் அவன் தன்னைவிட்டு வேறு பெண்ணிடம் போய்விடும் நிலை வந்தாலும் கூட காலில் விழுந்து கதறி தன் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் போன்ற ஆணாதிக்க அம்சங்கள் நிறைந்திருந்த காரணத்தினால் இப்படத்தை என்னால் இரசித்துப் பார்க்கமுடியவில்லை.ஆயினும் இப்படத்தில் கங்கை அமரன் அவர்களின் இசையில் இடம்பெற்ற பாடல்கள் மிக இனிமையானவை.குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் மூக்குத்தி பூ மேலே,டேடி டேடி ஆகிய பாடல்கள்.

   எனக்குப் பிடிக்காத படமாக இருந்தாலும் இப்படத்திற்கும்,அப்போது வாலிப வயதில் இருந்த என் தாய்,தந்தைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இப்படத்தில் உள்ள பாடலை என்னுடைய உதயகீதங்கள் தொகுப்பில் தந்தையை தின சிறப்பு கட்டுரைக்காக இணைத்திருக்கிறேன்.

 1981-ஆம் ஆண்டு கே.பாக்யராஜ்,சரிதா நடிப்பில் வெளிவந்த இப்படம் காதலித்து மணம் புரிந்த என் அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் பெரிய ஊடலையே ஏற்படுத்திவிட்டிருக்கிறது.படத்தையும்,அதன் பாடல்களையும் அணுஅணுவாக இரசித்துப் பார்க்கும் என் ரசனை என் அம்மாவிடமிருந்துதான் வந்தது.அவர் தன் குழந்தைப் பருவத்தில் எம்.ஜி.ஆர்.சிவாஜி ஆகியோரின் படங்களை இரசித்துப் பார்ப்பதோடு,அவற்றின் பாடல் வரிகளை மனனம் செய்து பாடுவதிலும் வல்லவர்.தோட்டக்காட்டில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்தாலும் எந்தப் புதுப்படத்தின் பாடல்கள் வந்தாலும் உடனே வாங்கிவிடுவார்.எம்.ஜி.ஆர்.சிவாஜி பாடல்கள் தொடங்கி,தொன்னூறாம் ஆண்டு பாடல்கள் வரையில் அம்மா வீட்டில் வாங்கி சேர்த்திருந்தார்.எங்கள் வீட்டில் தொலைக்காட்சியைவிட வானொலிக்கே முக்கியத்துவம்.

  மௌனகீதங்கள் படம் வெளிவந்தபோது அம்மாவுக்கு அப்படத்தைப் பார்க்கவேண்டும் என பெரும் ஆவல் எழும்பியிருக்கிறது.என் தந்தையிடம் தன்னைப் படம் பார்க்க திரையரங்கிற்கு அழைத்துப் போகுமாறு கேட்டிருக்கிறார்.வழக்கமாக மாலை ஆறு மணி காட்சிக்குப் போய்விட்டு,இரவில் வாடகை வண்டி பிடித்துதான் திரும்புவார்களாம்.அன்று இரவில் படம் முடிந்தபிறகு வாடகை வண்டி கிடைக்காததால் அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் ஏதோ மனவருத்தம் உண்டாகி அப்பா அம்மாவை ஏசிவிட்டாராம். அம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டதாம்.இனிமேல் அப்பாவே அழைத்தாலும் எந்தப் படமாக இருந்தாலும் இனி திரையரங்குக்குப் போகவே போவதில்லை என சபதம் இட்டதோடு அதன்பிறகு திரையரங்கின் பக்கமே எட்டிப்பார்க்கவேயில்லையாம்.

  அப்படத்தின் பாடல் கேசட்டை வீட்டில் வாங்கி வைத்திருந்தார் அம்மா.நான் சிறுவயது முதல் அப்பாவிடம் அதிக செல்லமாய்,ஒட்டுதலாய் இருந்ததால் அம்மா நான் பேச ஆரம்பித்தபிறகு திரையில் அப்பாவுக்காக ஒலிக்கும்,அப்பா என்ற சொல்லைக் கொண்டிருக்கும் பாடல்களையெல்லாம் ஒலிபரப்பி,என்னைக் கேட்கவைத்து சொல்லிக்கொடுப்பாராம்.அந்தப் பாடல்களில் டேடி டேடி என்ற பாடலைத்தான் நான் அதிகம் விரும்பினேனாம்.நான் ஏதேதோ உளறிக்கொட்டி பாட,அம்மாவும்,அப்பாவும் இரசித்துக் கேட்பார்களாம்.அப்படி ஒருநாள் என்னைப் பேசவைத்து, நான் டேடி டேடி என்ற பாடலை என் அப்பாவுக்காக ஒரு வரி பாட,அம்மா நான் பேசியதோடு சேர்த்து பாடியதையும் வானொலியில் பதிவு செய்து வைத்துவிட்டார்.எனக்கு நன்கு கருத்து தெரிந்த பிறகு அந்த விசயத்தைச் சொல்லி,அம்மா நான் மழலைக் குரலில் பேசியதையும்,பாடியதையும் எனக்கு போட்டுக்காட்ட,எனக்கு அந்தப் பாடலின்மீது வெகு ஆர்வமாகி,அப்பாடலை இரசிக்க ஆரம்பித்து,அப்பாடல் என் வாழ்வில் முக்கிய அங்கமாக ஆகிவிட்டது.இன்று என் அன்புத் தந்தையார் என்னைவிட்டு மறைந்துவிட்ட போதிலும்,என் சிறுவயதில் என் அம்மாவோடு சேர்ந்து அப்பா என்னைக் கொஞ்சியதையும்,அந்தக் கரகரப்பான அன்புக் குரலையும்,நான் ஏதோ ராகத்தில் இழுத்து,’’ ஈ...அம்பை தாடி என பாடியதையும் இன்றுவரையில் கேட்டு,என் அப்பாவுடனான என் பால்ய பொழுதை மீட்டெடுக்க முடிகிறது.இன்று தந்தையர் தினத்தில் அப்பாடலைப் பற்றி பகிரும் வாய்ப்பு கிடைத்தமையில் பெருமையாய் உணர்கிறேன்.

  மௌனகீதங்கள் திரைப்படத்தில் பாக்யராஜ் சபலபுத்தி உடையவராக இருப்பார்.அவருக்கும் சரிதாவுக்குமான தொடர்பு பின்னோக்கி நகரும் உத்தியில் சொல்லப்பட்டிருக்கும்.திருவள்ளுவர் பேருந்தில் இரவில் சென்னைக்கு தன் ஐந்து வயது மகனோடு பயணிக்கும் சுகுணா(சரிதா) நாளிதழ் படிப்பதில் மூழ்கிவிடுவார்.அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமரும் ரகுநாதன்(பாக்யராஜ்) சாப்பிடுவதற்காக மாத்திரைகளை கையில் எடுக்க,அந்நேரம் பார்த்து பேருந்து குலுங்கவே,மாத்திரைகள் பறந்து போய் சுகுணாவின் காலடியில் விழுந்துவிடும்.அவற்றை எடுத்து தரும்படி கேட்பதற்காக எக்ஸ்கியூஸ்மீ?” என அவர் அழைக்க,நாளிதழிலிருந்து நிமிர்ந்து பார்க்கும் சுகுணா ரகுநாதனைப் பார்த்ததும் அதிர்ந்துபோக,ரகுநாதனும் அதிர்ச்சியடைகிறார்.காட்சிகள் பின்னோக்கிப் பயணிக்கின்றன.

   சுகுணா நேர்முகத் தேர்வுக்காக செல்லும் அதே அலுவலகத்திற்கு ரகுநாதனும் நேர்முகத் தேர்வுக்காக வருகிறான்.அவனிடம் எக்கச்சக்க சான்றிதழ்கள் குவிந்து கிடக்க,அவனிடம் தான்  அந்த அலுவலகத்தில் மேலாளர் எனவும்,அந்தக் குமாஸ்தா வேலை திடீர் சிபாரிசின் பேரில் வேறு ஒருவருக்கு தரப்பட்டு விட்டதாகவும் பொய் சொல்லி அவனை ஏமாற்றிவிடுகிறாள்.தன் பதவியைப் பயன்படுத்தி அவனுக்கு விரைவில் இன்னொரு வேலைக்கு சிபாரிசு செய்யப்போவதாகவும் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து அவனை அனுப்பிவைக்கிறாள்.அதை உண்மையென நம்பும் அவனோ அடிக்கடி அவளது வீட்டுக்கு சாத்துக்குடி எல்லாம் வாங்கி கொண்டு வருகிறான்.தன் மிதிவண்டியை விற்று அப்பணத்தில் அவளது தம்பிக்கு கிரிக்கெட் மட்டை,.தங்கைக்கு ஸ்கிப்பிங் கயிறு,பாட்டிக்கு பகவத கீதை எல்லாம் வாங்கி கொடுத்து அவளது அபிமானத்தைத் தக்க வைத்துக்கொள்ள எண்ணுகிறான்.தற்செயலாய் அவனுக்கு அந்த அலுவலகத்தில் துணை மேலாளர் பதவி கிடைத்துவிட்ட பின்னர் சுகுணாவின் சாயம் வெளுக்கிறது.எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் பண்ணியிருக்கிறாள் என அவளைத் திட்ட,அவள் தேம்பி அழ,’பக்கத்துல வந்து என் கன்னத்துல ஒரு முத்தம் கொடு என சாமர்த்தியமாய் தனக்கு அவள் மீது இருக்கும் ஆசையையும் சொல்லிவிடுகிறான்.அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

  திருட்டு முழியோடு சபல புத்தியோடு இருக்கும் தன் கணவனிடம் தான் அவன்மீது அதிக அன்பு வைத்திருப்பதாகவும்,அவன் வேறொரு பெண்ணைத் தொட்டால் அதைத் தன்னால் தாங்கிகொள்ளவே இயலாது என்றும் அவள் அழுதுக்கொண்டே சொல்ல,அந்த அன்பில் கட்டுண்டு போகிறான்.வெளியூரில் மூன்றுநாள் தங்கியிருக்கவேண்டி வரும் சூழலில் இரண்டுநாள் தன் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தவன் மூன்றாம் நாள் வழிதவறி விடுதிப் பெண்ணைத் தேடிப்போகும் நேரம் சுகுணாவின் அழைப்பு வந்துவிடவே தப்பு செய்ய வழியில்லாமல் போவதோடு,காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் கைதாகும் நிலையிலிருந்தும் தப்பிக்கிறான்.இனி தன் மனைவிக்குத் துரோகம் செய்வதைப் பற்றி நினைக்கவே கூடாது என எண்ணிய வேளையில் ஒரு விதவைப் பெண்ணுக்கு உதவப்போகும்போது சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்தப் பெண்ணோடு சேர்ந்து தப்பு செய்துவிடுகிறான்.அந்த விசயம் அறிந்ததும் அவள் துடித்துப் போகிறாள்.அவனிடமிருந்து பிரிந்து போகிறாள்.அந்நேரத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள்.ஆயினும் மன உறுதியோடு மகனைப் பெற்று வளர்க்கிறாள்.

  ஐந்தாண்டுகளுக்குப் பின் தன் கணவனை அந்தப் பேருந்து பயணத்தில் பார்க்க நேர்ந்தாலும் அவளிடத்தில் எந்தச் சலனமும் இல்லை.ஆனால் அவனோ அவளிடம் சேர எண்ணுகிறான்.தன் மகன் வேறு தன்னை மாதிரியே நடந்து கொள்வதைப் பார்க்கும்போது அவனுக்கு மீண்டும் தன் மனைவியோடு வாழவேண்டும் என்ற ஆசை எழுகிறது.அவள் வேலை செய்யும் அதே அலுவலகத்தில் அவன் மேலாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.தன் மகனைத் திருட்டுத்தனமாக சந்தித்து,தான் தான் அவன் தந்தை என்பதைக் கஷ்டப்பட்டு புரியவைக்கிறான்.தந்தையைப் பற்றிய பேச்சை எடுத்தாலே அம்மா திட்டி,அடித்துவிடுவதால் அவன் தன் அம்மாவுக்குத் தெரியாமல் தன் அப்பாவைச் சந்தித்து பழகுகிறான்.

  அலுவலகத்தில் தினமும் காலை 11:30 அளவில் ரகுநாதன் எங்கோ போய்விட்டு மூன்று மணி அளவில் திரும்புவதாய் பேச்சு வருகிறது.அப்படி எங்கதான் போகிறார் என அலுவலகத்தில் கேட்கும் வேளையில்தான் இப்பாடல் படத்தில் ஒலிக்கிறது.கடற்கரையில் தன் அப்பாவை மாதிரியே உடையணிந்து, ‘டேடி டேடி என குழந்தை பாடுவதாய் இப்பாடல் அமைகிறது.

  மலேசிய வாசுதேவன் ஐயாவும் மயக்கும் குரலோடு குழந்தைக் குரலில் கொஞ்சம்,கெஞ்சல்,துருதுருப்பு எல்லாம் கலந்து பாடியிருக்கிறார் ஜானகியம்மா.

    இப்பாடல் காட்சியில் வழக்கமாக பாக்யராஜ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வரும்  சுரேஷ் கார் மீது ஒய்யாரமாய் சப்பணமிட்டு அமர்ந்தபடி தந்தையைக் கேள்வி கேட்டபடி வரும் காட்சி இரசிக்கவைக்கும். தன் அம்மா தன் அப்பாவின் பேச்சை எடுத்தாலே கோபம் கொண்டு ஏசுவதை புலியின் சீற்றத்திற்கு ஒப்பாக குழந்தை சொல்வது ரசனையானது.தன் அம்மாவின் கோபத்திற்கான காரணத்தைக் கேட்கும்போது தான் தப்பு செய்துவிட்டதாக தந்தை சொல்ல,என்ன தப்பு என குழந்தை துருவி துருவி கேட்கிறான்.சொன்னாலும் புரியாது என தந்தை மறுக்கவே செல்லக் கோபமும் உண்டாகிறது அவனுக்கு.

  அப்பாடல் காட்சியில் கற்பனையில் தன் மனைவியோடு ஒன்றாக மகனுக்கு சட்டை வாங்க செல்லும் காட்சியை நினைத்துப் பார்க்கும்போதும் கூட உடையைத் தேர்வு செய்வதில் சண்டை வந்துவிட்டதாய் நினைத்துப் பார்க்கிறான்.அவன் முகம் கவலையாகிவிட மகனின் மழலைக் குரலில் சோகத்திலிருந்து மீண்டு வருகிறான்.

   அப்பாடல் காட்சியில் தந்தை மகன் இருவரைக் குறிக்கும் விதத்தில் இரண்டு பந்துகள்,இரண்டு பலூன்கள் கடற்கரையில் உருண்டோடி வருதல் அழகு.கடற்கரையில் அலைகள் ஆர்ப்பரித்துவரும் காட்சி,படகில் மூவர் போகும் காட்சி. என கடலின் அழகு அற்புதம்.

    இரண்டாவது சரணத்தில் கரையோரத்தில் நண்டுகள் தங்கள் குஞ்சோடு ஓடியாடுவதைப் பார்த்துவிட்டு,அந்த நண்டுகளெல்லாம் சந்தோசமாய் ஆடிப்பாடுவதைச் சுட்டிக்காட்டி தாங்கள் மூவரும் அவ்வாறு ஒன்றாய் இருக்கப்போகும் நாள் எப்போது என பாடுமிடத்தில் மலேசிய வாசுதேவனின் குரல் இளகிப்போய்,குரலில் ஏக்கமும்,சோகமும் இழைந்து வெளிப்படுகிறது.அதேவேளையில் மகனிடம் பேசும்போது கொஞ்சலாய்,முதிர்ச்சியாய் ஒலிக்கிறது.இப்படி ஒரே பாடலில் குரலில் பலவித உணர்ச்சிகளையும் கலந்து கொடுக்கக்கூடிய பாடகர்களில் ஒருவர்.குழந்தை சுரேஷ் தன் அப்பாவைப் போன்றே கபில நிற கோட்,சூட்டில்,தந்தையைப் போன்றே இடது சட்டைப்பைக்குள் கையை விட்டுக்கொண்டு நடப்பது,மூக்குக் கண்ணாடியை நகர்த்துவது போன்றவை இரசிக்கத்தக்கவை.இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் தந்தையின் பாசத்தையும்,ஏக்கத்தையும் மீட்டுணர முடிகிறது.அது போல நம்மோடு அம்மாவும் கைகோர்த்து அன்போடு விளையாட மனம் ஏங்குதே என்ற வரிகள் அப்பாவோடு ஒன்று சேர்ந்து இருக்கும் தருணத்தை ஏங்கவைக்கிறது.

  என் வாழ்வில் பள்ளியிலும்,வெளியிலும் நிறைய பேரை அப்பா என அழைத்துப் பேசுவதுண்டு;தந்தை ஸ்தானத்தில் போற்றியதுண்டு.அவ்வகையில் இப்பாடல் வரிகளை சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் புறப்பாட நடவடிக்கை துணைத்தலைமையாசிரியராக பணியாற்றிய திரு.கி.புவனகுமார்,வாவாசான் தமிழ்ப்பள்ளியில் முன்னால் தலைமையாசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றுவிட்ட திரு.சுப்ரமணியம்,கிள்ளான் வாசகர் வட்ட தலைவர் திரு.பாலகோபாலன் நம்பியார்,நடிகர் சுப்ரமணியம் குப்புசாமி,சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி ஆசிரியரும் இலக்கிய ஆர்வம் நிறைந்தவருமான திரு.கலாதரன்.,எழுத்துலகில் தந்தையாக மதிக்கும் நயனம் ராஜகுமாரன்,தினக்குரல் பி.ஆர்.ராஜன் ஆகியோரோடு இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து தந்தையருக்கும் மட்டுமில்லாது,வாழ்ந்து நீத்துப்போன தந்தையர்களுக்கும் சேர்த்து சமர்ப்பிக்க விழைகிறேன்.

 

டேடி டேடி ஓ மை டேடி

உன்னைக் கண்டாலே ஆனந்தமே..

டேடி டேடி ஓ மை டேடி

உன்னைக் கண்டாலே ஆனந்தமே..

பேட்டா பேட்டா ஓ மை பேட்டா

எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்

பேட்டா பேட்டா ஓ மை பேட்டா

எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்

 

உன் பேரைச் சொன்னாலே

உன் பேச்சை எடுத்தாலே

அம்மாவும் புலி போல ஏன் பாயுது?

உன் பேரைச் சொன்னாலே

உன் பேச்சை எடுத்தாலே

அம்மாவும் புலி போல ஏன் பாயுது?

அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பைத்தான்

அந்நாளில் அடியேனும் செய்தேனப்பா

அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பைத்தான்

அந்நாளில் அடியேனும் செய்தேனப்பா

அது என்ன தப்பு?

சஸ்பென்ஸ்..

என்கிட்ட சொல்லு..

ஓ நோ..

சொல்லாமல் போனால் விடமாட்டேன்ப்பா....

பேட்டா பேட்டா ஓ மை பேட்டா

அதைச் சொன்னாலும் புரியாதப்பா..

டேடி டேடி..

 

கரையோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு

எப்போதும் அன்போடு விளையாடுதே

கரையோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு

எப்போதும் அன்போடு விளையாடுதே

அது போன்று அம்மாவும்

நம்மோடு கைகோர்த்து

அன்போடு விளையாட மனம் ஏங்குதே

கலங்காதே சும்மா

தேங்க் யூ...

வருவாளே அம்மா

ரியலி??

எல்லோரும் ஓர்நாள் ஒன்றாகலாம்..

பேட்டா பேட்டா ஓ மை பேட்டா

எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்

டேடி டேடி ஓ மை டேடி

உன்னைக் கண்டாலே ஆனந்தமே..

பேட்டா பேட்டா

டேடி டேடி

பேட்டா பெட்டா

டேடி டேடி..

 

 

No comments:

Post a Comment