Sunday, June 23, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் :கீதம்10 : குயில் பாட்டு


           குயில் பாட்டு (என் ராசாவின் மனசிலே)
 
 
 
 
 
     குயிலின் கீதம் தரும் இனிமையை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடமுடியாது.சிறுவயதில் தோட்டப்புறத்தில் ஆலமரத்திலிருந்து கூவிய குயிலின் ஓசை இன்னும் நினைவில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.தமிழ்ப்பள்ளியில் பயின்றபோது குயிலின் கீதத்தை மிக நெருக்கமாய் எனக்கே எனக்கானதாய் உணர்ந்ததுண்டு. மாலை வேளைகளிலும்,இரவும்,பகலும் உரசிக்கொள்ளும் அதிகாலைப் பொழுதிலும் கூவும் குயிலின் ஓசையில் ஏதோ ஒரு சோகம் கலந்திருப்பதைப் போன்று தோன்றினாலும் கேட்க கேட்க மனம் இதம் பெறுவதாய் உணர்ந்து இன்பமடைவேன்.அத்தகைய குயிலின் கீதத்தின் இனிமையைக் கொண்ட பாடல்களில் ஒன்றுதான் என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே?”கணவனைச் சரியாக புரிந்துகொள்ளாமல் தள்ளிவைத்து தள்ளி வாழ்ந்த கிராமத்துப் பெண்ணொருத்தி புரிதலுக்குப் பின் தன் கணவனை எண்ணி மருகிப் பாடிய கீதம்.

  முதல் மரியாதை உள்பட பல எண்பதாம் ஆண்டு தமிழ்த்திரையிசைப் பாடல்களிலும்,படங்களிலும் குயிலின் கீதம் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது.என் ராசாவின் மனசிலே  திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலோ குயிலோசையில்தான் ஆரம்பமாகிறது.

  1991-ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இளையராஜா இசையமைத்த பாரிஜாத பூவே,குயில் பாட்டு,பெண்மனசு ஆழமென்று,சோலைப்பசுங்கிளியே போன்ற மனதை அள்ளும் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.இப்படத்தில் இளையராஜாவின் பெயர் ராகதேவன் இளையராஜா என போடப்பட்டிருந்தது.

 உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தைத் தயாரித்து நாயகனாக நடித்திருந்தவர் ராஜ்கிரன்.அவரோடு மீனா,சாரதப்ரீத்தா,ராஜ்சந்தர்,ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

    படத்தில் இப்பாடல் சோகமான,மகிழ்ச்சியாக என இரு வகையாக ஒலிக்கிறது.ஆரம்பத்தில் படத்தின் பெயர் ஓடும்போது இளையராஜா ஐயாவின் குரலில் சோகமாய் ஆரம்பித்து,பின்னர் சொர்ணலதாவின் குரலில் மனதைப் பிசையும் இப்பாடல் பின்னர் ராஜ்கிரனுக்கும்,மீனாவுக்கும் ஒலிக்கிறது. 

     தொன்னூறுகளில் ராஜ்கிரண் அவர்கள் நடித்த எல்லா கிராமியப் படங்களுமே பெண்களை அதிகம் கவர்ந்ததோடு,கேட்பதற்கு இனிமையான பாடல்களையும் கொண்டிருந்தன.தன் தோற்றத்திற்குப் பொருந்தும் வகையில் தன் கதாபாத்திரத்தையும் கரடுமுரடான பலாப்பழத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் இனிப்பான சுளைக்கு ஒப்பாக அமைத்திருப்பார்.இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.மாயாண்டி என்ற முரட்டுத்தனம் நிரம்பிய இளைஞன் பாத்திரத்தில் எந்நேரமும் சாராயத்தைக் குடித்துக்கொண்டு,தப்பு செய்பவர்களைக் கண்டபடி அடித்து துவம்சம் செய்யும் கோபக்காரனாக நடித்திருப்பார்.அவருடைய முறைப்பெண் சோலையம்மா பாத்திரத்தில் அழகான மீனா.

  சோலையம்மா இயல்பாகவே பயந்த சுபாவம் கொண்டவளாக இருக்கிறாள்.ஆற்றில் குளிப்பதற்கு பயந்து கொண்டு காலை மட்டும் நனைத்துப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு பயந்தாங்கொள்ளியான அவள் பிறந்தபோதே மாயாண்டிக்குத்தான் மணமுடிக்கவேண்டும் என பெரியவர்களால் நிச்சயிக்கப்படுகிறது.அவளுக்கோ மாயாண்டியைத் திருமணம் செய்துகொள்வதில் விருப்பமேயில்லை.அவனைக் கண்டாலே கண்கள் படபடக்க பயந்து நடுங்குகிறாள்.மென்மையான அவளுக்கும்,மாயாண்டிக்கும் பொருத்தமே இல்லாமல் இருப்பதாய் உணர்கிறாள்.

     ஒரே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட இட்டிலிகளை சிறு வாளி நிறைய சாம்பாரோடு ஊற்றிப் பிசைந்து சாப்பிடும் வாட்டசாட்டமான மாயாண்டிக்கோ சோலையம்மாளிடத்தில் கொள்ளைப்பிரியம்.அவளுக்கென காசு,பணம் சேர்த்து அழகான,பெரிய வீட்டையும் கட்டி வைக்கிறான்.அவள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் அவ்வீட்டில் குடித்தனம் தொடங்கவேண்டும் என விரும்புகிறான்.

  கஸ்தூரி பெரிய மனுசியாகிவிட,அவளுக்கு முறைமாமன் சடங்கு செய்வதற்காக வரும் மாயாண்டி ஓலைப்பாயைப் பின்னும்போது அவளுடைய வாசம் உணர்ந்து ஆசையாய் நோக்க,அவளோ அவனைப் பார்த்து பயத்தால் எச்சில் விழுங்குகிறாள்.

  இன்னொருநாள் திருவிழாவின்போது ஒருவன் சோலையம்மாளை கையைப் பிடித்து இழுக்க,அவனையும் அவனது ஆட்களையும் கண்டபடி துவம்சம் செய்துவிடுகிறான்.அந்த அடிதடியைப் பார்த்து மிரண்டு போகிறாள் சோலையம்மா.அவளிடம் மாமனுக்கு திருவிழா சாப்பாட்டைப் போடும்படி மாயாண்டியின் தாய் பொன்னுத்தாயி (ஸ்ரீவித்யா) கூற,பரிமாற போகும் சோலையம்மா பயத்தால் சோற்றுப்பானையை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்துவிடுகிறாள்.அவனே எல்லா சோற்றையும் கொட்டிக்கொண்டு,ஆட்டுக்கறியோடு சாப்பிடுவதையும்,நல்லி எலும்பைக் கடித்து நொறுக்குவதையும் கண்டு மிரண்டு நடுங்குகிறாள்.

  சாராயம்,அடிதடி,முரட்டு புத்தி,மூர்க்கக்குணம் என இருக்கும் அவனைத் திருமணம் செய்துகொள்வதற்குப் பதில் கிணற்றில் விழுந்து செத்துப்போய்விடுவதே மேல் என அழுகிறாள்.ஆண்களில் அவள் அப்பா உள்பட பலரும் மோசமானவர்களாக இருந்து திருமணத்துக்குப் பின் திருந்தி வாழ்க்கை நடத்துவதாகவும்,தன் மகன் மூர்க்கனாயிருந்தாலும் குணத்தில் ராமனை ஒத்தவன்.சோலையம்மாளைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதால் கூட நினைத்துப் பார்க்கமாட்டான் என ஏதேதோ சொல்லி அவள் மனதை மாற்றுகிறாள் பொன்னுத்தாயி.மூத்தவள் மணமாகாமல் இருந்தால்,இளையவளின் திருமணமும் பாதிக்கப்படும் என அவள் அம்மாவும் தன் பங்குக்கு சொல்ல,வேறு வழியின்றி மாயாண்டிக்குக் கழுத்தை நீட்டுகிறாள்.

  முதலிரவன்று அவள் பயந்து நடுங்கி கொண்டிருக்கையில்,மூச்சு முட்ட சாராயம் குடித்துவிட்டு உள்ளே நுழைபவன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பலகாரங்களை எல்லாம் துச்சமாக பேச,அவள் மேலும் மிரண்டு போகிறாள்.தள்ளி தள்ளிப் போகும் அவளை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்க,சாராய நாற்றமும்,அவன் மீது கொண்ட பயமும் சேர்ந்து அவளுக்குக் குமட்டிக்கொண்டு வர,அவன் மீதே வாந்தி எடுத்துவிடுகிறாள்.அவன் கோபத்தில் அவளை அறைந்து தள்ளிவிட்டு வீட்டைவிட்டுப் போய்விடுகிறான்.

  மறுநாள் இரவு அவனுக்குப் பயந்து கொண்டு தன் இளைய தங்கையை அழைத்து,தன்னோடு படுக்கவைத்துக்கொள்ளும் சோலையம்மா,கணவன் வந்ததும் கதவைத் திறக்கும்போது,தூங்கி வழியும் தங்கையை வற்புறுத்தி எழவைக்க,அக்காட்சியைக் கண்ட அவனுக்குக் கோபம் உண்டாக,வேதனையோடு வெளியே போய் படுக்கிறான்.ஆனால் அந்நேரம் பார்த்து இடி,மின்னலோடு கனத்த மழை பெய்ய,நனைந்து போய் வீட்டினுள் திரும்ப வருகிறான்.சோலையம்மாவைப் பார்த்ததும் உள்ளே இருந்த கோபம் வெளியில் வர,மூர்க்கத்தனமாய் அவளைப் பிடித்து இழுத்து,பலவந்தமாய் தொட்டுவிடுகிறான்.

 ஒரு பெண்ணை எப்படி மென்மையாக கையாள வேண்டுமென தெரியாமல் அவளது கைவளையல்களை உடைத்து,உடலில் சிறு காயம் படும் வண்ணம் அவன் நடந்து கொண்டது அவளுக்குள் கசப்பாய் பதிவாகிப்போகவே,அவனைக் கண்டாலே பயந்து,மிரண்ட பார்வையோடு தள்ளிப் போகிறாள்.

    அவள் கர்ப்பமடைந்திருப்பது அறிந்து அவன் ஆசையாக மாங்காய்,சாத்துக்குடி எல்லாம் வாங்கி வந்து கொடுத்தபோது கூட அவள் அதை வாங்கிகொள்ளாமல் விலகிப்போகிறாள்.அவன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அவள் முகம் பார்த்து இருப்பதே போதும் என நினைக்கையில் ஒன்பதாவது மாதமாகிவிட்டதால் குழந்தை பிறக்கும்வரையில் தன் வீட்டில் வைத்துக்கொள்வதற்காக அவனிடம் அவன் மாமியார் அனுமதி கேட்க,அவன் மறுக்கிறான்.சோலையம்மாளுக்குக் கோபம் வந்து,தன் பெற்றோரிடம்,”இனிமேல் நீங்க எனக்கு செய்யவேண்டியது கருமாதி ஒன்னு மட்டும்தான் என வெடித்து புலம்புகிறாள்.அவர்கள் மௌனமாய் அங்கிருந்து வெளியேற,கேள்வி கேட்ட மாயாண்டியிடமும் தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறாள்.அந்த வீடு தனக்கு சுடுகாடு மாதிரி என்கிறாள்.அவனை ஆத்திரமும்,அவமானமும் சூழ்ந்து கொள்ள,அவளை கைநீட்டி அடித்துவிடுகிறான்.

       அப்போது அங்கு வரும் பொன்னுத்தாயிக்கு இருவருக்குமிடையே நிகழ்ந்தவை தெரியவரவே,மனைவியிடம் எப்படி பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை அவனுக்குப் புரிய வைக்கிறாள்.சாராய நெடியோடு,மூர்க்கத்தனமாக நெருங்கினால் எந்தப் பெண்ணாக இருந்தாலும் மிரண்டுதான் போவாள் என சொல்லி,அவனிடம் அவளுக்கு என்ன தேவையோ அதை வாங்கி வரும்படி சொல்கிறாள்.மனம் தெளிவாகி அவன் புறப்பட்டு செல்ல,சோலையம்மாளை நெருங்கி அவளுக்கும் புத்திமதி சொல்கிறார்.அவன் முரடனாயிருந்தாலும்,மனைவியின் மேல் உயிரையே வைத்திருக்கிறான்; காட்டத்தான் தெரியவில்லை என்கிறாள்.மனைவி என்பவள் நினைத்தால்,தன் அன்பினால் அவனைக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து திருத்திவிடமுடியும் என்கிறார்.அவள் மீது இருக்கும் தவற்றையும் சுட்டிக்காட்டி,அன்பால் அவனது குடிப்பழக்கத்தை நிறுத்தி,அவனை நல்லவனாக மாற்றவேண்டியது அவளுடைய பொறுப்பு என நிதானமாக எடுத்துக்கூற,வஞ்சி அவள் தன் அறியாமையை உணர்ந்து தெளிவு பெறுகிறாள்.

      கணவன் தனக்காக மல்லிகைப்பூ வாங்கி வர சென்றிருக்கிறான் என அறிந்தபோது அவள் முகத்தில் புன்னகை பூக்கிறது.தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் அவனை இனி அன்பாய்,ஒரு நல்ல மனைவியாய் கவனித்துக்கொள்ளவேண்டும் என எண்ணுகிறாள்.அப்போது சந்தோசமாக ஒலிக்கிறது குயில் பாட்டு.

  இப்பாடல் கணவனிடத்தில் ஆழமான நேசத்தை வெளிப்படுத்த எண்ணும் பெண்ணின் ஏக்கமும்,ஆவலும் ததும்பிய உணர்வின் வெளிப்பாட்டினை அழகிய வரிகளாகக் கொண்டுள்ளது.எப்படி குயிலின் கீதம் தரும் இதம் மாயாண்டிக்கு சோலையம்மாளை நினைவுப்படுத்துகிறதோ அதேமாதிரி அவளுக்கும் இன்பம் தோன்றுகையில் குயிலின் கீதம் மனதுக்குள் ஒலிக்கிறதாம்.குயிலே,நீ போய்விடு,இனி உன்னிடத்தில் இருந்து அவனுக்கு இன்பத்தையும்,இதத்தையும் தரப்போவது நான்தான் என்கிறாள்.நெருங்கவே விடாமல் தள்ளிவைத்து நடத்திய தன் அத்தை மகனின் மேல் தீராத அன்பை நெஞ்சில் சுமப்பாளாம்.அவன் வரும் பாதையில் மல்லிகைப்பூ மெத்தை விரிப்பாளாம்.அவன் உத்தரவு போடுவதற்கு முன்பே இவளே அவனுக்கு இன்பம் தர முந்தி நிற்பாளாம்.பிள்ளை தந்த ராசாவுக்கு ஒரு மனைவியால் கிடைக்கவேண்டிய அனைத்து சுகங்களையும் வாரிக்கொடுப்பாளாம்.அவன் தந்த பிள்ளை வயிற்றில் தாமரையாய் ஆட,அதைக் காத்து வளர்ப்பாளாம்.மௌனம் போனதாய் வேதம் பாடுகிறதாம் மனது.கணவனோடு வாழும் ஆசையோடு வாசல் தேடுகிறதாம் அவன் வரவை எண்ணி.இப்படத்தில் இளையராஜா ஐயாவோடு,கவிஞர் பொன்னடியான்,பிறைசூடன்,உஷா ஆகீயோர் பாடல்களை எழுதியுள்ளனர்.அவர்களில் இப்பாடலை எழுதியவர் யார் என கண்டறிய முடியவில்லை.

   இப்பாடல் காட்சியும் பாடலைப் போன்றே ரசிக்கவைக்கும்.எப்போதுமே சோகமுகத்தோடு,மிரண்ட விழிகளோடு வரும் மீனா,இப்பாடலில்தான் புன்னைகையால் மலர்ந்த முகத்தோடு இருப்பார்.மனம் தெளிவு பெற்றபோது பறவைகளின் கானம் காதில் விழ,மஞ்சள் பூசி தலையோடு குளித்து கணவனுக்காய் ஆசையோடு காத்திருப்பார்.அப்போது அழகாய் சூரியகாந்தி பூவின்மேல் அமர்ந்தபடி குயில் கூவ,மீனா பாட ஆரம்பிப்பது அழகான ஆரம்பம்.தான் தவறவிட்டதையெல்லாம் இப்பாடல் காட்சியில் (கற்பனையில்)செய்வார்.கால் பாதத்தை மட்டும் நனைத்தவர் ஆற்றில் இறங்கி சந்தோசமாக குளிப்பார்.பாவாடை,தாவணியில் மிக சந்தோசமாய் குதித்து ஓடுவார்.

      திருமணத்திற்கு முன்பும்,பின்பும் எதையெல்லாம் வெறுத்தாரோ அதையெல்லாம் ரசித்து செய்வார்.கணவனின் சட்டையை மார்பில் சேர்த்து அணைத்துப் பார்ப்பார்.கணவனுக்குப் பிடித்த நல்லி எலும்பைப் போட்டு பெரிய பானை நிறைய ஆட்டுக்கறி சமைப்பார்.திருமணத்தின்போது ஜோடியாக எடுத்த புகைப்படத்தை ஆசையாய் துடைத்து வைப்பாள்.மாட்டுவண்டி சத்தம் கேட்டதும் அவன் வந்துவிட்டானோ என துள்ளலோடு வாசலில் போய் நிற்பாள்.கடைசியாய் முதலிரவன்று அவனுக்காக மிரட்சியோடு காத்திருந்தவேளையில் அமர்ந்திருந்த பாயை பரணிலிருந்து எடுக்க முயலும்போது தவறிவிழுந்து இறந்தும் போய்விடுவார்.

        இப்பாடலைக் கேட்கும்போது மனதைப் பிசைய வைப்பதற்கு அக்காட்சியும் ஒரு காரணம்.இவ்வளவு ஆசையோடு பாடியவள்,அதையெல்லாம் செய்யமுடியாமல் அகாலமாய் மாண்டு போனாளே என்ற வருத்தம் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை.மாநிறத்தில் கள்ளமில்லாத குழந்தை முகத்தோடு, அழகான கண்களோடு,சாந்தமான தோற்றத்தில் வந்துபோகும் மீனாவை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியவில்லை.

  தன் பதினெட்டு வயதில் இப்பாடலை இவ்வளவு உயிர்கொடுத்து பாடியுள்ளார் சொர்ணலதா.என் வயிற்றில் ஆடும் தாமரை என்ற வரிகளை இவர் குரல் குழைய பாடும்போது அந்தத் தாய்மையை நம்மாலும் உணரமுடிகிறது இவ்வுலகை மட்டும் மறைந்தாலும் அந்த இசைக்குயிலின் இந்தக் கீதத்திற்கு என்றுமே மரணமில்லை.

  பேஸ்புக் வலைத்தளத்தில் Beauty Of Music என்றொரு பக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.ஷா ஆலமைச் சேர்ந்த நண்பர் நாசர் (கவிரசிகன்) தன் தோழி கேரலின் நாயரோடு சேர்ந்து உருவாக்கியுள்ள,மதங்களைத் தாண்டிய இந்த இசைப்பக்கத்தில் மித்ராணி,முகுந்த்,லாலாநந்தா,மதன்,கேத்ரின்,ரின்னா,புவனேஸ்வரி,கோபால்,ஜெயந்தி,வாசுதேவன் பிள்ளை,நிலா,கதிர்,ஷான் ஆகியோர் இனிமையான பாடல்களையெல்லாம் குறிப்பாக எழுபதாம்,எண்பதாம்,தொன்னூறாம் ஆண்டு பாடல்களையெல்லாம் பகிர்ந்து வருகிறார்கள்.கவிரசிகன் தினக்குரலின் தீவிர வாசகரும் கூட.பலநாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்தப் பக்கத்தில் குயில் பாட்டு போன்ற பல இனிமையான பாடல்களைப் பார்த்து மகிழ்வதோடு பாடல் காட்சிகளையும் பகிரலாம்.

  எந்த எண்பதாம்,தொன்னூறாம் ஆண்டு பாடல்களைக் கேட்டாலும் எனக்குள் குயிலின் கீதம் தரும் இதத்தை உணரவைக்கும் என் அன்பிற்கினியவனுக்கும்,இசையால் முகநூல் நண்பர்களை இணைக்கும் பியூட்டி ஆப் மியூசிக் இசைக்குடும்பத்தினருக்கும் இந்தக் குயில் பாட்டு சமர்ப்பணம்.இனி குயில் கூவும்போதெல்லாம் இந்த வரிகள் உங்கள் நினைவில் வந்துபோகட்டும்.

 

 

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே..

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே?

இன்று வந்த இன்பம் என்னவோ?

அதைக் கண்டு கண்டு அன்பு பொங்கவோ

குயிலே போ போ

இனி நான் தானே?

இனி உன் ராகம்

அது என் ராகம்..

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே..

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே?

 

அத்தை மகன் கொண்டாட..

பித்து மனம் திண்டாட

அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஓஓ

புத்தம் புது செண்டாகி

மெத்தை சுகம் உண்டாக

அத்தனையும் அள்ளிக்கொடுப்பேன்..ஓஓ

மன்னவனும் போகும் பாதையில்

வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்.

உத்தரவு போடும் நேரமே

முத்துநகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்.

மௌனம் போனதென்று புது வேதம் பாடுதே

வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே..

கீதம் பாடுதே..வாசல் தேடுதே..

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே..

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே?

 

வானம் இங்கு துண்டாக,வந்த இன்பம் வீணாக,

இன்றுவரை எண்ணியிருந்தேன்..ஓஓ

பிள்ளை தந்த ராசாவின்

வெள்ளைமனம் பாராமல்

தள்ளிவைத்து தள்ளி இருந்தேன்.ஓஓ

என் வயிற்றில் ஆடும் தாமரை

கையசைக்க காலசைக்க காத்து வளர்ப்பேன்

கர்ப்பகத்து பொற்பாதத்துப் பூவினை

அற்புதங்கள் செய்யும் என்று சேர்த்து முடிப்பேன்

மௌனம் போனதென்று புது வேதம் பாடுதே

வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே..

கீதம் பாடுதே..வாசல் தேடுதே..

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே..

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே?

இன்று வந்த இன்பம் என்னவோ?

அதைக் கண்டு கண்டு அன்பு பொங்கவோ

குயிலே போ போ

இனி நான் தானே?

இனி உன் ராகம்

அது என் ராகம்..

 

 

 

No comments:

Post a Comment