Saturday, June 8, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 8 :சங்கீத வரங்கள்

       கீதம் 8: சங்கீத ஸ்வரங்கள்  (அழகன்)
 
 
 
 
 
 
 
 
      இயக்குனர் கே.பாலச்சந்தர் ஐயாவின் படங்களில் எனக்கு அவரது பாத்திரப்படைப்புகள் அதிகம் பிடிக்கும்.அவரது பாத்திரப்படைப்புகள் எதார்த்தமாக அதே சமயம் நகைச்சுவையும்,இரசனையும் கலந்து பிறர் நலன் நாடும் வண்ணமும் இருக்கும்.அவரது அழகன் திரைப்படத்தில் அனைத்து பாத்திரங்களும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும்.அதற்குத் தோதாக அப்படத்தில் முக்கிய பாத்திரங்களுக்காக இடம்பெற்ற பாடல்களும் அற்புதமாகவே அமைந்திருந்தன.

   1991-ஆம் ஆண்டில் வெளிவந்தஅழகன்திரைப்படத்தில் மம்முட்டி,பானுப்பிரியா,கீதா,மதுபாலா ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தன் மனைவியைக் காலனுக்குப் பறிகொடுத்துவிட்டு தம் குழந்தைகளுக்காக மட்டுமே வாழும் அழகப்பனின் (மம்முட்டி) வாழ்க்கையில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மூன்று பெண்களால் உண்டாகும் மாற்றங்களே கதையின் சாரமாகும்.

   இப்படத்தில் மூன்று நாயகிகளில் கண்மணி (கீதா) தமிழ் இலக்கியத்தின் பால் தாகம் கொண்டவள்.சொப்னா (மதுபாலா) இசையின்பால் தாகம் கொண்டவள்.பிரியா ரஞ்சன்(பானுப்பிரியா) நடனக்கலையின்பால் தாகம் கொண்டவள்.கலாரசிகனான அழகனின் இரசிப்புத் தன்மையாலும்,நற்குணங்களாலும் கவரப்பட்டு அந்த மூன்று பெண்களுமே அவனை நேசிக்கிறார்கள்.

     இரசனையான காட்சிகள் நிறைந்த இப்படத்தில் மரகதமணியின் இசையில்அழகன் அழகன்’,’கோழி கூவும் நேரமாச்சி’,’துடிக்கிறதே நெஞ்சம்’,’தத்தித்தோம்’,’சங்கீத ஸ்வரங்கள்’,’ஜாதிமல்லி பூச்சரமே’,நெஞ்சமடி நெஞ்சம்’,’மழையும் நீயே போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.நாயகனின் தன்மையை உரைக்கும் பாடல்,கலைத்திறனை வெளிப்படுத்தும் பாடல்,சமூகநலனை வெளிப்படுத்தும் பாடல்,காதலை வெளிப்படுத்தும் பாடல்,ஊடலுக்குப் பின் வரும் கூடலைச் சொல்லும் பாடல்,காதல் தந்த விரக்தியை வெளிப்படுத்தும் பாடல் என பல்வகைப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.அனைத்துமே இதமாய் மனதைத் தாலாட்டும் கானங்கள்.இவ்வார உதயகீதங்கள் தொகுப்பில் நாம் பார்க்கவிருப்பது திரையில் அழகன்,பிரியாவுக்காக ஒலிக்கும்சங்கீத ஸ்வரங்கள் என்ற பாடல்.இப்பாடல் வரிகளுக்கு எஸ்.பி.பாலா,சந்தியா ஆகியோர் குரல் தந்திருக்கிறார்கள்.

   இப்பாடலை நன்கு உள்வாங்கி ரசிக்கவேண்டும் என்றால் நாம் அழகனுக்கும்,பிரியாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டு இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்து நெருக்கத்தை நோக்கிப் பயணிக்கும் இரசனையான தருணங்களையும் மீட்டெடுக்கவேண்டும்.

   பிரியா ரஞ்சன் அற்புதமான நடனமணி.அவள்காதல் என்பது சிறை,கல்யாணம் என்பது ஆயுள் தண்டனை என்ற கொள்கையில் இருப்பவள்.தனது கடைசிமூச்சு வரை நடனத்தை மட்டுமே சுவாசிக்கப் போவதாக சொல்லி தன் பெற்றோரிடம் திருமணத்திற்கு மறுத்துவருகிறாள்.அவள் முதன்முதலில் அழகனைச் சந்திப்பது அவனது உணவகத்தில்தான்.தன் உணவகத்தில் என்னென்ன அயிட்டங்கள் உண்டு என்பதை மெனு அட்டையைப் பார்க்காமலேயே கடகடவென ஒப்புவிப்பவன்தான் கடையின் உரிமையாளன் என அறிந்து வியப்படைகிறாள்.

    அதன்பின் ஒருநாள் பிரியாவின் நாடக நடன நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கவேண்டிய பத்மா சுப்ரமணியம் கடைசி நேரத்தில் வரஇயலாமல் போனதால் அந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கவேண்டிய வாய்ப்பு அழகனைத் தேடி வருகிறது.’நான் ரவா உப்புமா மாதிரி,அயிட்டங்கள் எல்லாம் தீர்ந்து போச்சின்னா அவசரத்துக்கு ரவா உப்புமாதான் கைகொடுக்கும் என தன் தொழிலோடு சம்பந்தப்படுத்தி தன் உரையை வழங்கும்போது அழகனின் பேச்சாற்றல் கண்டு வியக்கிறாள்.நடனத்தைப் பற்றி சொன்ன விசயங்களின் மூலம் அவனது கலையார்வமும்,கலை குறித்த அவனது தீர்க்கமான,பரந்த அறிவைக் கண்டு பாவை அவள் வியந்து போகிறாள்."உடம்பா இல்லைகோழி இறகா?இப்படி சுத்தி சுத்தி ஆடறாங்களே?" என பாராட்டும்போதும்,வயிற்றுக்குள் கரு உதைப்பதும் கூட நடனம்தான்,பிரியாவின் நடனமும் அங்கேதான் ஆரம்பமாகியிருக்கக்கூடும் என சொல்லும்போது பிரியாவின் கண்கள் பனிக்கின்றன.

     அழகனின் நிலையோ இன்னும் மோசம்.கடலுக்குச் சென்ற தன் கணவன் மாண்ட செய்தியறிந்து வேதனையால் துடித்து துவண்ட ஒரு பெண்ணின் கதையை வெகு இயல்பாகவும்,உணர்ச்சி பொங்கவும் தனது நடனத்தின்பால் ஆடிக்காட்டிய பிரியாவின் கலைத்திறமை அவனை அடியோடு கட்டியிழுத்துவிடவே,எந்நேரமும் அவள் நடனமாடிய காட்சியே கண்ணுக்குள் வந்துபோகின்றது.

    அவ்வேளையில் பிரியாவே அவனைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறாள்.அவ்விழாவில் தன்னைப் பெருமைப்படுத்தி பேசி நெகிழச் செய்த அழகனுக்கு நன்றி கூறும் அவள் அவனது அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைவதாக சொல்கிறாள்.இருவர் மனதிலும் ஏதோ ஓர் ஈர்ப்பு தோன்றுகிறது.தன் மகளை பிரியாவிடம் நடனம் பயில அனுப்ப எண்ணி அவளைத் தேடிச் செல்கிறான்.அப்போது அவனுக்குத் திருமணமாகிவிட்டதை அறிந்து ஒருகணம் ஏமாற்றமடையும் பிரியா அவனது மனைவி முன்பே காலமாகிவிட்டாள் என்பதை அறிந்து கொஞ்சம் நிம்மதியும் அடைகிறாள்.அதேமாதிரி பிரியாவின் பின்னால் இருக்கும் ரஞ்சன் அவளது கணவனின் பெயரல்ல என்பதை அறியும் அழகனும் நிம்மதியாகிறான்.இருவரின் நட்பும் வளர்கிறது.

       ஒரு தடவை பிரியாவின் கார் பழுதாகி,அவள் நடு சாலையில் நிற்பதைக் கண்டு அவளிடம் செல்கிறான்.அவள் அவசரமாக ஒரு நிகழ்வில் நாட்டியமாட சென்று கொண்டிருப்பதை அறிந்ததும் அவளைத் தன் காரில் அழைத்துப் போய் விட்டுவிட்டு வரும்படி தன் காரோட்டியிடம் சொல்கிறான்.அவன் காதில் ஏறும் பிரியா அக்காரில் அவனது இருப்பை உணர்கிறாள்.அவனது குளிர்க்கண்ணாடியை அணிந்து பார்க்கிறாள்.அவனது கைக்குட்டையை எடுத்து மறைத்து வைத்துக்கொள்கிறாள்.அங்கே அவனும் அவளது காரில் அவளது வாசத்தை உணர்கிறான்.’பிரியாஎன எழுதப்பட்ட அவளது தலையணையை ஆசையாய்த் தொடுகிறான்.தன் மனம் அவள் வசம் இருப்பதை அவன் உணர்கிறான்.அவளது கார் தயாரானபிறகு தானே கொண்டு போய் ஒப்படைத்துவிட்டு வருவதாகச் சொல்லி அவளது வீட்டுக்குப் போகிறான்.

        இன்னொருநாள் ஒரு விருந்தின் போது பிரியாவின் வீட்டுக்குச் செல்லும் அழகன் அவள் கேட்டிருந்த புதுமைப் பித்தனின் புத்தகங்களைக் கொண்டு போய் கொடுக்கிறான்.அப்போது பிரியாவிடம் திருமணம் எப்போது என கேட்ட உறவினர்களின் மத்தியில் தான் அழகனை நேசிப்பதாக பிரியா சொல்ல,அங்கு வந்திருந்த வயதான ஆண்கள் இருவர்,மனைவியை இழந்து இருக்கும் மம்முட்டியின் நிலையைத் தங்களோடு ஒப்பிட்டு,கிண்டலடிக்க,அழகன் அவமானமாய் உணர்கிறான்.அந்த இடத்தைவிட்டு கோபமாக நகர்கிறான்.வீட்டை அடைந்ததுமே அவசர அவசரமாக பிரியாவுக்கு கடிதம் எழுதி தான் அவளைவிட்டு விலகப்போவதாய் எழுதி,தபாலில் சேர்த்துவிடுகிறான்.அவனது காரோட்டி அழகனின் காதல் தவறில்லை என்றும்,அதை மறைத்துவைத்து துன்பப்படுவதோடு,அவன்மீது நேசம் வைத்திருக்கும் பெண்ணையும் காயப்படுத்துவது தார்மீக செயலல்ல என்றும் அறிவுறுத்த,தன் தவற்றை உணர்ந்த அழகன் சொப்னா மூலம் அந்தக் கடிதத்தைத் திரும்ப பெற்றுக்கொள்கிறான்.அவன் மனம் நிம்மதியடைகிறது.

         அன்றிரவில் தொலைக்காட்சியில் ஒரு வீணை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு பிரியாவை அழைக்கிறான் அழகன்.அது என்ன ராகம் என கேட்கிறான்.அவர்கள் அப்படியே பேச ஆரம்பிக்கிறார்கள்.அப்போது ஒலிக்கிறது சங்கீத ஸ்வரங்கள்" என்ற பாடல்.

         இப்பாடல் காட்சி முழுவதும் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.வழக்கமாய் காதல் கொண்ட நெஞ்சங்கள் விடிய விடிய கூட அலுக்காமல் தொலைபேசியில் பேசுவார்கள் அல்லவா?அது இப்பாடலில் எதார்த்தமாக காட்சியாக்கப்பட்டுள்ளது.நெஞ்சின் மேல் விகடன் பத்திரிக்கையை மூடிவைத்துக்கொண்டு சாவகாசமாய் மெத்தையில் படுத்தபடி அழகனும்,சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆடியபடி பிரியாவும் தொலைபேசியில் பேசிக்கொள்வது ரசனையான காட்சி.இரவு 10:15க்கு பேச ஆரம்பிக்கும் அவர்கள் மறுநாள் பொழுது விடியும் வரையில் இடைவிடாது பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.இரவில் வானில் நிலா காய,பிரியாவின் வீட்டில் செடிவடிவிலான அந்த விளக்கு அழகாய் வண்ண மயமாய் எரிய,அழகனின் வீட்டுக் கடிகாரத்தில் பெண்டுலம் அழகாய் ஆட, அந்த ரசனையான பொழுதில் ஏதேதோ பேசி சிரித்துக் கொள்கிறார்கள்.தூக்கம் கண்களைச் சொக்கவைத்தாலும் வற்புறுத்திக்கொண்டு பேசுகிறார்கள்.மெத்தையில் படுத்தவாறு,எழுந்து நடந்தவாறு,தரையில் அமர்ந்து கட்டிலில் தலைசாய்த்து,தொலைக்காட்சி பார்க்காவிடினும் ஒளியலையை மாற்றிக்கொண்டு,புத்தகத்திலிருந்து எதையோ தேடி பகிர்ந்தவாறு,மாறி மாறி ஏதோ நகைச்சுவை சொல்லி சிரித்துக்கொண்டு,விளக்கையும் அணைத்துவிட்டு மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் இப்படி அவர்கள் பேசும் விதம் எதார்த்தமாக இருக்கிறது.அட நாமும் இப்படிதானே செய்வோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவும் செய்கிறது.அவர்களின் அந்தப் படுக்கையறை வெகு அழகான சிலைகள்.நடராஜர் சிலை,ஏகாந்த வீணை என ரம்மியமாக இருக்கிறது.

     இப்பாடல் காட்சியில் கடிகாரமும் அவ்வப்போது நேரத்தைக் காட்டியபடி இருக்கிறது.நேரம் ஆக ஆக,சாலையில் வாகனங்கள் குறைந்து பின்னர் ஒரேயடியாய் வெறிச்சோடி போகுதல்,தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் கடமையை முடித்துக்கொண்டு விடைபெறவே,திரையில் தோன்றும் பிம்பம் எல்லாம் வெகுஎதார்த்தம்.முதல்நாள் ஆரம்பித்த பேச்சு மறுநாள் வரையிலும் தொடர்கிறது என்பதைக் குறிக்கும் வண்ணம் சூரியவெளிச்சம் அறைக்குள் பரவுவது,பணியாள் காப்பி கொண்டு வந்து தருவது போன்ற காட்சிகள் இயக்குனரின் சாமர்த்தியம்.அதேமாதிரி இரவில் தொலைக்காட்சியை அணைக்காமல் விட்டதால் மறுநாள் காலை ஒளிபரப்பு தொடங்கும்போது இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்படுவதைப் போன்று பாடலை முடித்திருப்பார் மரகதமணி.

    இப்பாடலில் சந்தியாவின் குரலைக் காட்டிலும் எஸ்.பி.பாலாவின் குரலில் ஏக்கம் இன்னும் வழிந்தோடும்.இரவு நேர மயக்கத்தை அவரது குரல் நன்கு பிரதிபலிக்கும்.மயக்கம் என்ற வார்த்தை இப்பாடலில் உச்சரிக்கப்படும் விதமே மயக்கத்தைத் தூண்டுகிறது.மனதுக்குப் பிடித்தவர்களோடு அதுவும் இரவுநேரத்தில் எல்லாரும் உறங்கிவிட்ட பிறகு தொலைபேசியில் பேசும் சுகம் இருக்கிறதே?அனுபவித்தவர்களால்தான் நன்கு உணரமுடியும்.சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதிய காதல் கடிதம் அன்றுதான் கையில் கிடைத்ததுபோன்ற இன்ப நிலையில் நாயகி மருகிறாள்.

     இந்த ரசனையான பாடலை எழுதியவர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை.இப்பாடல் சிறுசிறு வரிகளோடு ஓர் ஆணும்,பெண்ணும் உரையாடிக்கொள்வதைப் போன்றுதான் அமைக்கப்பட்டுள்ளது.என் வீட்டில் இரவு,அங்கே இரவா இல்லை பகலா என்ற வரிகள் காதல் மயக்கத்தில் கட்டுண்டு கிடப்பவரின் நிலையை அழகாக எடுத்து இயம்பியுள்ளது.என்னென்னவோ நினைத்தார்களாம்..யோசனையில் வரவில்லையாம்.. தூங்கினால் ஒருவேளை நினைவில் வரக்கூடுமாம்.கனவிலோ?கேள்வியினூடே தூக்கம்தான் வரலை என ஆண் பாட,பெண் பாடுறேன் மெதுவா உறங்கு" என சொல்லுமிடத்தில் காதலியிடம் தாய்மையின் குணம்.அன்புக்குரியவர்களின் குரலில் பாடலைக் கேட்டு உறங்கிப்போவதும் இனிமைதானே?

       நம் அன்பிற்குரியவர்களோடு தொலைபேசியில் பேசும்போது இப்பாடலைக் கொஞ்சம் ஒலிக்கவிடலாமா?என் அன்பிற்குரியவர்களோடு தினக்குரலின் தீவிர வாசகர்களான எங்கள் ஊரைச் சேர்ந்த எம்..தண்ணீர்மலை, தியாகப் புவியரசு,வீர.இராமன்,பொன்.வனஜா, மம்முட்டியின் தீவிர ரசிகரான அண்ணன் மு.பாலசேனா,ஆர்.லோகநாதன் மற்றும் அனைத்து தினக்குரல் வாசகர்களுக்காகவும் இதோ பாடல் வரிகள்.


 
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா?

இன்னும் இருக்கா?

என்னவோ மயக்கம்?


என் வீட்டில் இரவு

அங்கே இரவா
இல்லை பகலா?

எனக்கும் மயக்கம்


 
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்

நானும்தான் நெனச்சேன்

ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும்

யோசனை வரல

தூங்கினா விளங்கும்

தூக்கம்தான் வரல

பாடுறேன் மெதுவா உறங்கு

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா?
இன்னும் இருக்கா?
என்னவோ மயக்கம்?


என் வீட்டில் இரவு

அங்கே இரவா
 
இல்லை பகலா?

எனக்கும் மயக்கம்


 
எந்தெந்த இடங்கள்

தொட்டால் ஸ்வரங்கள்

துள்ளும் சுகங்கள்

கொஞ்சம் நீ சொல்லித் தா

சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்

காதல் கடிதம் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணிலே பிறக்க

நாயகன் ஒருவன்

நாயகி ஒருத்தி

தேன்மழை பொழிய

பூவுடல் நனைய

காமனின் சபையில்

காதலின் சுவையில்

பாடிடும் கவிதை சுகம்தான்

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா?

இன்னும் இருக்கா?

என்னவோ மயக்கம்?

 
என் வீட்டில் இரவு

அங்கே இரவா
இல்லை பகலா

எனக்கும் மயக்கம்


 

No comments:

Post a Comment