Sunday, May 26, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்


  
 கீதம் 6 : சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்(பயணங்கள்)
 Payanangal Mudivathillai


    
     
     தன் மனம் கவர்ந்த ஆண்மகனின்பால் அளவிலாத நேசம் கொண்ட பெண்ணின் மனது எப்போதுமே அவனை நாடும். அவனுடன்  எவ்வளவு பேசினாலும் ஏக்கமது தீராது.சதா அவனை நினைத்து ஏக்கத்தில் வாடும்.கனவில்கூட அவனோடு இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும்.அபத்தமான ரசனைகளில் இன்புறும்.அத்தகைய  அழகிய ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்களில் ஒன்றுதான் பயணங்களில் முடிவதில்லை திரையில் இடம்பெற்ற சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் என்ற இனிய கானம்.

     1982-ஆம் ஆண்டு மோகன்,பூர்ணிமா,எஸ்.வி.சேகர்,பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்து, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஓடி சாதனை புரிந்தது.இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த காதல் காவியமாக அமைந்திருந்த இப்படத்தை அக்கால இளைஞர்கள் மிகவும் விரும்பி பார்த்ததாகவும்,இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் புகழ்ப்பெற்றதாகவும் என் அம்மா  சொன்னார்.இப்படத்தில் நடித்த மோகனுக்கும்,பூர்ணிமாவுக்கும் சிறந்த நடிகர்,நடிகை என்ற விருதும் கிடைத்துள்ளது.

    இளையராஜாவின் இசையில் ஜானகியம்மா,எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் இளையநிலா பொழிகிறது,ராகதீபம் ஏற்றும்போது,தோகை இளமயில்,மணியோசை கேட்டு எழுந்து,ஆத்தா ஆத்தோரமா வாரியா,வைகறையில் என கேட்க கேட்க திகட்டாத இனிமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

   பாடகனாகவேண்டும் என்ற இலட்சியத்தோடு  இருக்கும் ஓர் இளைஞனின் வாழ்க்கையில்  மலரும் காதல்  இறுதியில் என்னவாகிறது  என்பதுதான் கதை.இனி இப்பாடல்  இடம்பெறும் சூழலைக் கொஞ்சம் மீட்டுணர்வோமா?

  படிப்பு முடிந்து  தன் ஊருக்குத் திரும்பும் ராதா(பூர்ணிமா),தன்  அப்பாவின் நண்பரின் மகளான சுசீலாவின்(ரஜினி) வீட்டில் சில தினங்கள் தங்கியிருக்க செல்கிறாள்.ஒரு போட்டிக்காக கவிதை எழுதித் தரும்படி கேட்க,ராதாவும் கவிதை எழுதுகிறாள்.

 

வரும்வழியில் பனிமழையில்

பருவநிலா தினம் நனையும்

முகில் எடுத்து முகம் துடைத்து

விடியும்வரை நடைபயிலும்

 

    என்ற வரிகளை ராதா வாசித்துக் காட்டும்போது சுசீலா பிரமித்துப் போகிறாள்.நிச்சயம் அக்கவிதைக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும் என்கிறாள்.அப்போது அந்தத் தாள் பறந்து  போய் பக்கத்து குடியிருப்பில் விழுகிறது.சரி வேறு எழுதிக்கொள்ளலாம் என அவள் நினைக்கும்போது பக்கத்து வீட்டிலிருக்கும் ரவி (மோகன்) அக்கவிதைக்கு இசையூட்டி  பாடலாகப் பாடுகிறான்.மனதை வருடும் அந்தக் குரலில் மெய்மறந்துபோகும் ராதா சுசீலாவின் மூலம்  ரவியைப் பற்றியும்,அவன் நண்பன் செல்வம் பற்றியும் அறிகிறாள்.செல்வம் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் திண்டாடுகிறான் என்பதையும்,அவன்நண்பன் ரவி எப்படியாவது பெரிய பாடகனாக வேண்டும் என்ற இலட்சியத்தில் இருப்பதை அறிகிறாள்.வயிற்றுப்  பசிக்காக அவர்கள் படும் பாட்டையும்,வீட்டுவாடகை கட்டமுடியாமல் வீட்டு உரிமையாளரிடம் திட்டு  வாங்கி அவமானப்படுவதையும் அறியும் அவள் கண்கள் கலங்குகின்றன.

  கடற்கரையில் கிழிந்த சட்டையோடு நடந்து போகும் ரவியின் மீது  இளகிய மனம் கொண்ட ராதாவுக்கு இரக்கம் பிறக்கிறது.ஏழை என்ற காரணத்திற்காக அவனது திறமை அடிபட்டுப் போய்விடக்கூடாதென எண்ணுகிறாள்.தன் தந்தையிடம்(பூர்ணம்விஸ்வநாதன்) பேசி கோயில் கும்பாபிஷேகத்தில் பாடும் வாய்ப்பை வாங்கித் தருகிறாள்.இடிமழையில் மக்கள் எழுந்து ஓட,ரவி ஒவ்வொருவரிடமும் தன் பாடலைக் கேட்கும்படி கெஞ்சுவது கண்டு ராதாவின் உள்ளமும் நெகிழ்ந்து போகிறது.ஒரு  வெறியோடு ரவி ராகதீபம் ஏற்றும்போது புயல்மழையோ?” என பாட,மழை,இடி,மின்னல் நின்று,மக்கள் கூடி அவனது பாட்டை இரசிக்கின்றார்கள்.அவனுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது.

    ரவியின்மீது கொண்ட பரிவும்,அக்கறையும் காதலாக மாறுகிறது.சுசீலா விளையாட்டுக்காக தான் ரவியை நேசிப்பதாக சொல்ல,அவள் கண்கள் கலங்கி,அழுதுவிடுகிறாள்.அந்தளவுக்கு ரவியின் மீது நேசத்தை    வளர்த்துக்கொள்கிறாள்.அவனைப் பாராட்டி கடிதம் எழுதியவள் அவனுக்குத் தொலைக்காட்சியில் பாடும் வாய்ப்பையும் வாங்கித்தருகிறாள்.தொலைக்காட்சி நிலையத்தில் ராதாவின் கையெழுத்தைப் பார்த்தபோது,ஆரம்பத்தில் கவிதை எழுதியவள்,கும்பாபிஷேகத்தில் பாடுவதற்கு வாய்ப்பு வாங்கித் தந்தவள்,ரசிகையாக கடிதம் எழுதியவள் எல்லாமே அவள்தான் என அறிந்து அவன் நெகிழ்ந்து போகிறான்.அவள் எழுதித் தந்த பாடலைப் பாடாமல் வேறு பாடலை அவளுக்காக பாடுகிறான்.

     ரவியின்  பாடல்களைத் தொலைக்காட்சியில்  பார்த்து  இரசித்த கங்கை அமரன் அவனுக்கு திரைப்படத்தில் பாடும்  வாய்ப்பை வழங்குகிறார்.அவனுடைய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் புகழடைகின்றன.அவனது புகழ் பரவுகிறது.புகழ்ப்பெற்ற பாடகனாகிறான்.திரைப்படங்களில் நிறைய பாடல்களைப் பாடி சம்பாதிக்கிறான்.பெரிய  வீட்டுக்குக் குடிபோகிறான்.அவனது ஒவ்வொரு வளர்ச்சியிலும் உடனிருக்கும் ராதா தன் தந்தையிடம் தான் ரவியை நேசிப்பதைச் சொல்லி,சம்மதமும் வாங்கிவிடுகிறாள்.அப்பாவின் சம்மதம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடிகள் சந்தோசமாக சிறகடித்துப் பறக்கின்றன.ராதா ரவியின்மீது அளவு கடந்த  நேசத்தைக் காட்டுகிறாள்.அவன் மகிழ்ச்சிக்காக பாடுபடுகிறாள்.

      இந்நிலையில் ரவி  பதினைந்து  நாள்களுக்கு மதுரையில் இருக்கவேண்டி வருகிறது.உற்சாகமாய் ரவியைப் பார்க்கவந்த  ராதா செல்வம் மூலம் அந்த விசயத்தை அறிந்ததும் துடித்துப் போகிறாள்.அவள் கண்கள் கலங்குகின்றன.அவனுடைய லட்சியம் என்பதால் தடை சொல்லாமல் மௌனமாக நின்றாலும் ஏக்கத்தால் வருந்துகிறாள்.

       மறுநாள்  காலை ரவி மதுரைக்குப் புறப்படவேண்டும்.அன்றிரவு ராதாவுக்கு உறக்கம் வரவில்லை.ரவிக்கும் உறக்கம் வராததால் அவளை தொலைபேசியில் அழைக்கிறான்.வேண்டுமென்றே தொலைபேசியை   அலறவிட்டு  பிறகு எடுக்கிறாள்.(வழக்கமாய் பெண்கள் செய்வது ஆயிற்றே)தினமும் இரண்டு மணி நேரமாவது தொலைபேசியில் பேசிவிடும் ராதா வேண்டுமென்றே வம்பு செய்கிறாள் என்பது அறிந்து ரவியும் அவளைச் செல்லமாய்த் திட்டுகிறான்.அவள் தான் தூங்கப்போவதாய்ச் சொன்னதும் அவன் கோபிக்க,அவள் கனவில் சந்திக்கலாமென்கிறாள்.அவளது விளையாட்டுத்  தனத்தை அவனும் இரசிக்கிறான்.எங்கே சந்திக்கலாம் என  கேட்க,அவள் கடற்கரைக்குப் போகலாமென்கிறாள்.கனவில்தானே?காஷ்மீர்,கோவா என்ற இடத்தில் சந்தித்தால் என்னவாம்  என்கிறான்.அவ்வளவு தூரமாகவெல்லாம் சென்றால் சரியான நேரத்தில்  திரும்பமுடியாது  என்கிறாள்.

    இப்ப ராத்திரி மணி  பத்தரை.காலை ஆறு மணிவரை எங்கெல்லாம் சுத்தமுடியுமோ அங்கெல்லாம் கனவில் சுத்தலாம்,” என்கிறான்.அவள் சம்மதிக்க,கனவில் அவர்கள் சந்திக்கும்போது ஒலிக்கிறது சாலையோரம்  சோலை ஒன்று வாடும்” என்ற பாடல்.

   காதல் வயப்பட்டவர்கள் சில வேளைகளில் அபத்தமாய் நடந்து கொள்வார்கள்.கற்பனை உலகில் சஞ்சரிப்பார்கள்.வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் ஒரே இடத்தில் இருப்பதுபோன்று அல்லது சந்தித்துக்கொள்வதுபோன்று ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டு இன்பம் காண்பது அன்பு கொண்ட நெஞ்சங்களின் மனமகிழ் விளையாட்டு.இத்தகைய இரசனைகள் அந்த உறவை மேலும் சுவாரஷ்யமாக்குவதோடு,பின்னர் நினைத்துப் பார்க்கும்போது ஏக்கத்தை வரவழைக்கக்கூடியதாக இருக்கும்.அந்த மாயை  உலகம் இப்பாடலில் நன்கு புலப்படும்.

   இரவு  பத்தரைக்கு மேல் கனவில் சந்தித்துக்கொள்கிறார்கள் என்பதால் நல்ல இருட்டில்,சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் மோகன் பூர்ணிமாவைத் தேடிக்கொண்டு ஓடிவருவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.இப்பாடல் காட்சி புத்திசாலித்தனத்தோடு படமாக்கப்பட்டிருக்கும்.பாடலில் பூர்ணிமா நவீன உடையில் அழகாக,துருதுருவென இருப்பார்.மக்கள் நடமாட்டமில்லாத இரவு வேளை என்பதால் இருவரும்  சுதந்திரமாக ஆடிப்பாடி திரிவார்கள்.இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் இரண்டு  காவல்துறை அதிகாரிகள் வேறு மோகனையும்,பூர்ணிமாவையும் துரத்திக்கொண்டு வருவார்கள்.அவர்களிடம் இருந்து தப்பித்து,நடுசாலையில்  ஆடிப்பாடுவார்கள்.பிறகு கடற்கரைக்குப் போவார்கள்.கடற்கரை மணலில் காதலன் நடக்கும் கால்தடத்தைக்கூட ஒரு பொருட்டாய் நினைத்து ரசிக்கும் காதலியை அவன் ரசித்து,சிரிக்க,அடுத்த நொடியே அலை வந்து அந்தக் கால்தடத்தை அழித்துவிட்டுப் போகும்போது அவள் முகம் அப்படியே வாடிப்போகிறது.

   அவன் மீதான ஏக்கம் அவளுக்குள் அதிகரிக்கும் வேளை அவன் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான்.புறப்படும் நேரம் நெருங்கிவிட்டதை  அறிகிறான்.சேர்த்து வைத்த தாகம் என்று தீரும் என அளவிலாத காதலும்,ஏக்கமுமாய்  பாவை அவள் அவனை நெருங்கிவர,அந்தக்  குழந்தைத் தனத்தை இரசிப்பவன் அவளது கன்னத்தை வாஞ்சையாக தடவி,அவளைக் கொஞ்சி,பேசும் கிள்ளையே,ஈரமுல்லையே,நேரமில்லையே இப்போது என பாடிக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தவாறு ஓட,அவள் கண்களில் கண்ணீரோடு பின்னால் ஓடிவரும் காட்சி அழகான கவிதை.

   இப்பாடலில் பாலசுப்ரமணியம் அய்யாவின் குரலில் சிரிப்பு கலந்திருக்கும்.தன் மனம் கவர்ந்தவள் கலங்காதவண்ணம் தன் நிலையை எடுத்துரைக்கும் வண்ணம் மென்மையாக இருக்கும்.ஜானகியம்மாவின் குரலும் ஒரு நேசமான பெண்ணின் கொஞ்சலையும்,ஏக்கத்தையும் அழகாய்ப் பிரதிபலிக்கும்.நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரடிக்கும் என்ற வரிகளில் குளிரடிக்கும்  என்ற வார்த்தையில் நிஜமாகவே குளிரில் நடுங்குவதுபோன்ற தொனியைக்  கொடுத்திருப்பார்.

    எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தான் நேசிக்கும் ஆண்மகனின்மீது எப்படியெல்லாம்  தன் அளவு கடந்த நேசத்தை வெளிப்படுத்தலாம் என்ற துடிப்பில் இருக்கும் அன்பும்,பண்பும்,பணிவும்,குழந்தைத்தன்மையும் நிறைந்த ஒரு பெண்ணின் உணர்வுகளை இப்பாடல் மிக எதார்த்தமாக,கவிதையியலோடு எடுத்துரைக்கிறது.மிக  ஆழமாய் ஒருவரை நேசிக்கும்போது அவர் சம்பந்தப்பட்ட சிறுசிறு விசயங்கள் கூட அவள் கண்களுக்கு அற்பமாய் தெரியாமல் ரசனையானதாய்,போற்றிப் பாதுகாக்கப்படுவதாய் தோன்றும்.இப்பாடலிலும் அது வெளிப்பட்டுள்ளது.கடற்கரை மணலில் அவன் பதித்துச் சென்ற அவனது கால்தடங்கள்  கூட அவளுக்கு இரசனையானதாய் தெரிகிறது.அதை அலை அடித்து,அழித்ததைக்கூட ஏற்றுக்கொள்ளமுடியாமல் அவளுக்குக் கோபமும்,சோகமும் தோன்றி குரலில் வெளிப்படுகிறது.இன்னும் கொஞ்சநேரம் உடன் இருந்தால் என்ன.....  பெண்களின் பொதுவான ஏக்கம்.பொறுப்பு என வரும்போது ஆண் எளிதில் உணர்ச்சியிலிருந்து விடுபட்டுவிடுகிறான்.ஆனால் பெண்ணால் அப்படி முடியவில்லை.இதைத்தான் ஆணின் தவிப்பு  அடங்கிவிடும்,பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவரும் என்றார் கவிஞர்.இப்பாடலில் அவனுக்கு  நேரமாகிவிட்டது என்றபோதிலும் அந்தத் தவிப்பு அதிகமாகவே  இருக்கிறது.இப்படி ரசனையான அம்சங்கள் நிறைந்திருக்கும் இப்பாடலை என்னோடு சேர்ந்து,நீங்களும் உங்களுக்குப் பிடித்தமானவரை நினைத்துக்கொண்டு பாடியபடி கற்பனை உலகில் சஞ்சரித்துப்  பாருங்களேன்.

     

 

சாலை ஓரம் சோலை ஒன்று  வாடும்
சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று  வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து...கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து..கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம்  பாடும்...

 

 

பாவை இவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தானசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்..
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
மொட்டுக்கதவை பட்டுவண்டுகள் தட்டுகின்றதே
இப்போது...
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து...கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து..கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம்  பாடும்...

 

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்தனால் கன்னிமனம்தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரமில்லையோ..
நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ
சேர்த்துவைத்த தாகம் கண்ணா என்று தீரும்?
சேர்த்துவைத்த தாகம் கண்ணா என்று தீரும்?
பேசும் கிள்ளையே ஈரமுல்லையே
நேரமில்லையே இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து...கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து..கண்ணோரங்கள் வேர்த்து
லாலலால லாலலால லாலா

 

 


உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

No comments:

Post a Comment