Friday, February 25, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 1

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 1



 

கையில் மிதக்கும் கனவா நீ?
கைகால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே?!

    1997 - ஆம் வருடத்து நள்ளிரவு நேரம். சத்தம் போடாமல் வெளியே வந்து வானத்தை வேடிக்கைப் பார்த்தாள் தேன்மொழி.வைரக்கற்களாய் மின்னிய நடசத்திரங்களுக்கிடையே பருவ நிலா வெட்கப்பட்டு தன் முகத்தை மேகத்தில் மறைத்திருந்தது,
   சற்று நேரம் வானத்தை வேடிக்கைப் பார்த்த தேன்மொழி வீட்டுக்குள் போய்விட்டாள்,
   காலை ஐந்து மணிக்கெல்லாம் சுப்ரமணி தண்டலின் மணி சத்தம்தான் அவளை எழுப்பியது.மணியடிப்பதில் அவரை மிஞ்ச யாரும் இல்லை.அவரது கை பட்டு எழும்பும் மணியின் சத்தமே வேறு.எப்பேர்ப்பட்ட கும்பகர்ணனையும் வாரி சுருட்டி எழ செய்யும் சக்தி அவரது மணி சத்தத்திற்கு மட்டுமே உரித்தானது.
   தேன்மொழி அவிழ்ந்திருந்த கூந்தலை ஒன்றாக சேர்த்து கொண்டை முடிந்துக்கொண்டே சமையலறைக்குள் நழைந்தாள்,முடிந்து போய் வரமாட்டேன் என்று அடம்பிடித்த பற்பசையை இரண்டாக வெட்டி,தூரிகையை உள்ளே விட்டு எடுத்தாள்.பல்லைத் துலக்கிவிட்டு முன்தினம் வைத்த கீரைக்கறியை அடுப்பில் வைத்து சூடு காட்டினாள்,பிறகு அரிசியைக் களைந்து வேகப்போட்டாள்.
   அவள் வீட்டைக் கூட்டி வாசலைக் கழுவிவிட்டு வருவதற்குள் சோறு வெந்துவிட்டிருந்தது.சாதத்தை வடித்து கஞ்சித்தண்ணியை வேறொரு பானையில் ஊற்றிவைத்தாள்,அவள் அப்பா ராமசாமிக்கு சாதத்தை வடிகட்டினால்தான் பிடிக்கும்,கஞ்சித்தண்ணியும் வீணாகாது அல்லவா? மாதக் கடைசியில் வீட்டில் மாவு, தேத்தூள் எல்லாம் முடிந்து போனால் தேநீருக்குப் பதில் கஞ்சித்தண்ணிதானே?
   தேன்மொழி குளித்துவிட்டு வருவதற்குள் அவள் அப்பா வெளிக்காட்டு வேலைக்குப் போகத் தயாராக இருந்தார்.பள்ளிக்குப் போக கிளம்பிவிட்ட தேன்மொழி வீட்டுக்கு வெளியே வந்து நின்று வேடிக்கைப் பார்த்தாள்.பக்கத்து வீட்டு மீனாவின் குழந்தை ஆயாக்கொட்டகைக்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்து அழுதது.வாயில் எந்நேரமும் வெற்றிலையை மென்று கொண்டு வளளவென பேசிக்கொண்டிருக்கும் ஆயம்மாவை ஏனோ குழந்தைகளுக்குப் பிடிப்பதேயில்லை.சிறுவயதில் அவளும் அப்படிதானே...
   என்னா தேனு, இன்னும் ஸ்கூல் பஸ் வரலியா?” நெற்றியில் விளக்கைக் கட்டியிருந்த எதிர்வீட்டு கோமளம் காண்டாவைத் தோளில் மாட்டியபடி விசாரித்தாள்.அவளுக்குப் பதில் சொல்வதற்குள் அவளுடைய தங்கை கயல்விழி ஓடிவந்தாள்.
   அக்கா,எனக்கு பூரான் சடை போட்டுவிடுக்கா,” சீப்பை அவளிடம் நீட்டினாள்.அவளுக்குத் தலைசீவி விட்டுவிட்டு தன் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பினாள் தேன்மொழி.
   அவள் பள்ளி முடிந்து வருவதற்குள் மாலை மணி ஐந்தாகிவிட்டிருந்தது.ஐந்தாம் படிவத்தில் பயில்வதால் அவளுக்குப் பிரத்தியேக வகுப்பு இருக்கும்.பள்ளி முடிந்து வந்ததும் சீருடையை மாற்றிக்கொண்டு உடனே சமையல் வேலையில் இறங்க வேண்டும்.அம்மா இருந்தவரை தேன்மொழி இவ்வளவு சிரமப்பட்டதில்லை.எல்லாவற்றையும் அவளே பார்த்துக்கொள்வாள்,அதனால்தானோ என்னவோ சீக்கிரமே நோய்வாய்ப்பட்டு இறந்து போனாள்.புத்தகப்பையைச் சுமக்க வேண்டிய வயதில் குடும்ப பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலை அவளுக்கு.
   தேனு, கொஞ்சம் தைலம் எடுத்து வாம்மா,இன்னிக்கு ஒரம் போட வெச்சுட்டாங்க. ஒடம்பெல்லாம் வலிக்குது, ராமசாமிதான் அவளை அழைத்தார்.
   அப்பாவை நினைக்கையில் அவளுக்குப் பாவமாகதான் இருந்தது.அம்மாவின் இழப்பு அவரைப் பெருமளவில் பாதித்துவிட்டிருந்தது.அவளுக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தாலாவது அப்பாவின் பளு கொஞ்சம் குறைந்திருக்கும்.
   தேன்மொழி தைலத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்குப் போனாள்.அப்பா பக்கத்துவீட்டு முருகம்மா பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார்.பாட்டியின் முகத்தில் வழக்கத்திற்கு மாறான களிப்பைப் பார்க்க முடிந்தது.இன்னும் ஒரு வாரத்தில் தோட்டத்து முருகன் கோவிலில் திருவிழா வரப்போவதால் முருகம்மா பாட்டியின் மகன் தன் மனைவி, பிள்ளைகளுடன் வந்திருந்தார்.அதுதான் அவளுடைய சந்தோஷத்திற்கான காரணம்.
   அவருடைய மகனைப் போலவே முன்பு தோட்டத்தைவிட்டுப் போயிருந்த பலரும் திருவிழாவைப் பார்ப்பதற்காக அவரவர் உறவினர் வீட்டில் வந்து தங்கியிருந்தார்கள்.அவளுடைய வீட்டிற்குதான் யாரும் வருவதில்லை.
   ஏன்க்கா நம்ம வீட்டுக்கு மட்டும் யாரும் வரதில்ல? லதா வீட்டுக்கு நெறய பேரு வந்திருக்கறதால அது என்கிட்ட பேசறதேயில்ல,,” தன் பன்னிரண்டு வயது தங்கையின் கேள்விக்கு அவளால் பதில் கூற இயலவில்லை.
    அம்மா இறந்தபிறகு அவளுடைய உறவுகளும் உடன்கட்டை ஏறிவிட்டன.பெரிய அத்தை மட்டும் அவ்வப்போது வந்து போனாள்.ஆனால் வரும்போதெல்லாம் தன் பிள்ளைகள் உடுத்தி பழையதாகிப் போன துணிகளைக் கொண்டுவந்து கொடுப்பாள்.அவள் அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை.புது துணிமணிகள் வாங்கி கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை,ஏன் பழையதைக் கொடுத்து அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டிவிட்டார்.அன்றிலிருந்து அவளும் வருவதில்லை.

* * *
     கோயில் திருவிழாவிற்கு இன்னும் முன்று நாட்களே இருந்தன.கோயில் புதிதாக சாயம் பூசப்பட்டு வெகு அழகாக இருந்தது.பக்தி பாடல்கள். ஆண் பெண் கூட்டங்களுடன் திருவிழா களை கட்டியிருந்தது,தேன்மொழிக்குத் திருவிழா என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும் அவள் அம்மா இருந்தபோது அவளுடைய புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு அவளுடன் கோயிலைச் சுற்றி வருவதில் அவளுக்கு அலாதிப்பிரியம்.அங்கே விற்கப்படும் அவல், கடலை எல்லாம் இழூ;டம் போல் வாங்கி கொரித்துக் கொண்டிருப்பாள்.
   திருவிழா வருடந்தோறும் வந்து கொண்டேதான் இருக்கிறது.ஆனால் அம்மா….
   அம்மாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவளுக்கு ஏக்கமாக இருந்தது.அவள் ஏன் இவ்வளவு சீக்கிரம் செத்துப்போனாள்டூ அவள் இல்லாத திருவிழா இனிக்கவேயில்லை.தேன்மொழியை அவள் அம்மாவின் ஞாபகம் பாடாய்ப் படுத்தியது,
   அவள் அம்மா மிக அழகானவள்.வேலை முடிந்து வந்ததுமே தலையோடு குளித்துவிட்டு மஞ்சள் பூசிக்கொள்வாள்.அம்மாவின் மேல் வீசும் அந்த மஞ்சள் வாசம் கூட அவளுக்கு இன்னும் நினைவிலிருந்தது.
   தேன்மொழி அவள் அம்மா அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு அழகிதான்.தங்க நிறம்.வட்ட வடிவ முகத்தில் கண், காது. மூக்கு அனைத்தும் கச்சிதமான அளவில் அமைந்திருந்தது.நீண்ட அடர்த்தியான சுருட்டை முடி அவள் அம்மாவைப் போலவே.
   தேனு, இந்தப் பையனைக் கொஞ்ச நேரம் பிடிச்சுக்கம்மா. முருகம்மா பாட்டி தன்னுடைய இரண்டு வயது பேரனை அவளிடம் கொடுத்துவிட்டு புடவையைச் சரிசெய்து கொண்டாள்.அன்று அவளுடைய உபயம் என்பதால் புது புடவை கட்டியிருந்தாள்.அவளுடைய மகன் வாங்கி கொடுத்திருப்பார் போலும்.பாவம் அவளுக்கு வேறு யார்தான் இருக்கிறார்கள்?
   பாட்டி பேரனை வாங்கி கொண்டு போனதும் தேன்மொழி படியின் ஓரமாய் வந்து நின்றாள்.கோயிலில் கூட்டம் நிறைந்து கொண்டே இருந்தது. திடீரென எவனோ ஒருவன் தேன்மொழியை இடித்துத் தள்ளிவிட்டு ஓடினான்.தேன்மொழி நிலைதடுமாறி படியிலிருந்து கீழே விழப்போனாள்.அதற்குள் படியின் கீழிருந்து ஒரு வலிமையான ஆண்கரம் அவளைத் தாங்கி பிடித்தது.அவள் உடல் சிலிர்த்துப் போனது.ஒரே நிமிடம்தான்,அவனிடமிருந்து தன்னை விடுவித்து விலகி நின்றாள்,அவனோ எதுவும் நடவாததுபோல் அங்கிருந்து நகர்ந்தான்.
   அவன் மட்டும் பிடிக்காமல் விட்டிருந்தால் அவளுக்கு நிச்சயம் பலத்த அடி பட்டிருக்கும்.ஆனால் தன்னைக் காப்பாற்றிய அந்த இளைஞன் மீது அவளுக்குக் கோபம்தான் வந்தது.
   எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்?” ஏன் இப்படி செய்தான்?எவ்வளவு பெரிய அவமானம்?அவனைக் கண்டபடி கருவியவள் மீண்டும் அவன் தன் கண்ணில் படவே கூடாதென்று வேண்டிக்கொண்டாள்.அவளால் நிம்மதியாக சாமி கும்பிடவே முடியவில்லை.
   பூஜை முடிந்ததும் பிரசாதம் கூட வாங்காமல் தன் தங்கையை அழைத்துக்கொண்டு செம்மண் சாலையில் இறங்கி விடுவிடுவென நடக்கத் தொடங்கினாள்.எதிரே அவன் வந்து கொண்டிருந்தான்.

                                                   தொடரும் …….

No comments:

Post a Comment