Friday, February 25, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 2

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 2



 

பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது?
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ?
பனி போல நாணம் அதில் கூடியதேனோ?

    முருகம்மா பாட்டி முருங்கை கீரையை அதன் தண்டிலிருந்து உருவி ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டிருந்தாள்.தேன்மொழி பாட்டிக்குத் துணையாக கீரையை உருவிக்கொண்டே அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
      எப்படி இருக்கீங்க? சௌரியமா?” மிக அருகில் ஒரு பெண்குரல் கேட்கவும் இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்தார்கள்.ஆறு வருடங்களுக்கு முன் தோட்டத்தை விட்டு போன பிரேமா வந்திருந்தாள்.அவளுடன்….
      ஐயோ இவனா?இவன் எப்படி?” கோயிலில் அவளைக் காப்பாற்றிய இளைஞனைப் பார்த்து அவள் குழம்பி கொண்டிருந்தாள்.
      பிரேமாவைக் கண்டுபிடிக்க முடிந்த பாட்டியால் பிரியனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.தன் சிறுத்துப் போன கண்களால் அவனையே உற்றுப் பார்த்தாள்.
     என்னாங்க இப்படி பாக்கறீங்க? இவன அடையாளம் தெரியலையா?என் ரெண்டாவது பையன் பிரியன்.”
     பிரியனா?பெரிய ஆம்பளையாயிட்டானே?” என்ற பாட்டி தேன்மொழியிடம் திரும்பினாள்.
    அம்மாடி, கடைக்காரர்கிட்ட போயி நான் கேட்டேன்னு ஒரு சின்ன பாக்கெட்டு எவரிடே மாவு வாங்கிட்டு வா.கணக்குல எழுதிக்கச் சொல்லு. சம்பளம் போட்டதும் காசு வந்துடறேன்
     துளி கூட யோசிக்காமல் அந்த இடத்தைவிட்டு ஓடினாள் தேன்மொழி, கடைக்காரரிடம் மாவு வாங்கி பின்னபக்க வழியாக கொடுத்துவிட்டு தன் வீட்டுக்கு ஓடிவிட்டாள்.
     பிரியன்தான் தன்னைத் தாங்கி பிடித்து காப்பாற்றியவன் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.முன்தினம் கோயிலிலிருந்து வீட்டுக்குப் போகும்போது எதிரில் வந்தவன் அவளிடம் என்னவோ பேசவந்தான்.அவள்தான் பயந்து போய் ஓடிவிட்டாள்.ஒரு வேளை தான் யார் என்பதை சொல்லத்தான் வந்தானோ என்னவோ?
    பிரியனுக்கு அவளைவிட நான்கு வயது அதிகம்.பத்து வயதிலிருந்தே அவன் ஈப்போவிலுள்ள பாட்டி வீட்டில்தான் வளர்ந்தான்.பள்ளி விடுமுறை என்றால் உடனே வந்துவிடுவான்.ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் அவன் பாட்டி இறந்து போனாள்.அதிலிருந்து அவனுடைய குடும்பமே ஈப்போவிற்கு இடம் மாறிவிட்டது.
    முருகம்மா பாட்டியின் வீட்டிலிருந்து அவர்கள் நேராக இவளுடைய வீட்டிற்குதான் வந்தார்கள்.பாட்டி வீட்டிலேயே தேநீர் குடித்துவிட்டு வந்தது நல்லதாகப் போய்விட்டது.தேன்மொழியின் வீட்டில் மாவு,தேத்தூள் எல்லாம் முடிந்து போயிருந்தது.
    ராமசாமி அவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, தேன்மொழி ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டிருந்தாள்.பிரியன் தன்னைப் பார்ப்பது போன்றதொரு பிரமை அவளுக்கு உண்டானது.ஏறிட்டுப் பார்க்கவும் பயமாக இருந்தது.ஐந்து வருடங்களாக கண்ணில் படாதவனாயிற்றே
    ஆறு வருடங்களுக்கு முன் ஒரு செவ்வாய்க்கிழமை மழை பெய்து கொண்டிருந்த சாயங்கால வேளையில்தான் அவள் பெரிய மனுஷியானாள்,அவளுக்கு மாமன் முறை மாலை போட்டவன் பிரியன்தான்.வெட்கப்பட்டு நாணி, கோணி உட்கார்ந்திருந்த அவளை அடிக்கொரு தரம் அதிசயமாய்ப் பார்த்து மேலும் வெட்கப்பட வைத்தவனாயிற்றே?
   அதன்பிறகு அவள் முருகன் கோயில் திருவிழாவிற்கு முதன்முதலாய் தாவணி அணிந்து போனபோது தன் நண்பர்களுடன் எதிரே வந்த பிரியன் அவளை பிரமிப்பாய்ப் பார்த்ததும், பார்த்துக்கொண்டே இருந்ததும் அவள் மனதில் இன்னும் சர்க்கரையாய் இனிக்கவே செய்தது.அதுதான் அவள் அவனைக் கடைசியாய்ப் பார்த்தது.அவள் அம்மா இறந்தபோது கூட அவன் வரவில்லை,ஒரு வேளை அவன் வந்திருந்தாலும் வந்திருக்கலாம்.அவள் என்ன பார்க்கும் நிலையிலா இருந்தாள்?
   போயிட்டு வரேன்மா தேனு,” பிரேமா அவளை இறந்த காலத்திலிருந்து மீட்டு வந்து அவளிடம் விடைபெற்று போனாள்.பிரியன் அவளைப் பார்த்து இலேசாக புன்முறுவல் பூத்தான்.கடைசியாக பார்த்தபோது இலேசான அரும்பு மீசை, மெலிந்த உடலோடு, உயரமாக, வெடவெடவென இருந்தவன் இப்போது பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக,அழகாக இருந்தான்.மீசையின்றி வழவழவென முகமும்,கோதுமை நிறமும் அவன் வடகத்தி இளைஞனோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.அவன் அணிந்திருந்த கண்ணாடி அவனுடைய அமைதியான தோற்றத்திற்கு நன்கு பொருந்தியது.

     திருவிழாவிற்கு முதல்நாள்  காலை.நல்ல மழை.வேலைக்குப் போயிருந்தவர்கள் மழையில் நனைந்து போய் வந்தார்கள்.இராமசாமி தலையில் பிளாஸ்டிக் பையைப் போட்டுக்கொண்டு வந்தார்.ஒரு சிலர் வாழை இலையைத் தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.சீவிய மரத்திலிருந்து பாலை எடுக்கும் முன்பே மழை வந்து கெடுத்துவிட்டது என்று ஒரு சிலர் புலம்பினாலும் பெரும்பாலோருக்குச் சந்தோஷம்தான்.காரணம் திருவிழாவை முன்னிட்டு சம்பளத்தை முன்கூட்டியே கொடுக்க இருந்தார்கள்.மழைத்திட்டி கிடைத்துவிட்டால் காலையிலேயே சம்பளம் கிடைத்துவிடும்,பட்டணத்திற்குப் போய் வரலாமே..
      சம்பளம் போட்டுவிட்டதால் வழக்கமாக வந்து போகும் துணிவியாபாரிகள் வந்திருந்தார்கள்.பழைய கடனை வசூலித்துவிட்டு அப்படியே திருவிழாவைக் காரணம் காட்டி விற்பதற்கு கொலுசு, வளையல் எல்லாம் எடுத்து வந்திருந்தார்கள்.ராமசாமி தன் சக்திக்கு ஏற்றவாறு தேன்மொழிக்கும்,கயல்விழிக்கும் கண்ணாடி வளையலும், பிளாஸ்டிக் முத்து மாலையும் வாங்கி கொடுத்தார்.கயல்விழிக்கு ஒரே சந்தோஷம்.அன்றிரவு கோயிலுக்குப் போகும்போதே அதை அணிந்துகொண்டாள்.
    மறுநாள் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் நிறைய வேலைகள் இருந்தன.தேன்மொழியும் அங்குதான் இருந்தாள்.ஆண்களில் சிலர் காவடியை ஜோடித்துக்கொண்டிருக்க, இளம்பெண்கள் மாலை தொடுத்துக் கொண்டும். காய்கறிகளை வெட்டிக் கொடுத்து கொண்டும் இருந்தார்கள்.கிழவட்டங்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு யார் யார் வீட்டில் என்ன நடந்தது என்ற ஊர்கதை பேசினார்கள்.சின்ன சின்ன வாண்டுகள் அழகாக உடுத்திக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தன.பெரிய திரை கட்டி பக்திப் படம் வேறு திரையிடப்பட்டிருந்தது.
   அக்கா, வீட்டுக்குப் போலாமா?தூக்கம் வருது,”அரைத்தூக்கத்தில் கெஞ்சிய தங்கையை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் கோயிலுக்குக் கிளம்பினாள்.பழகிப் போன பாதை என்பதால் அவளுக்குப் பயமில்லை.மழை பெய்திருந்ததால் பாதையெங்கிலும் சேறு.பாவாடையைத் தூக்கிப் பிடித்தவாறு நடந்தாள்.
   தேனு, கொஞ்சம் நில்லேன்,” யார் அழைத்தது என்று திரும்பி பார்த்தாள்.பிரியன்தான் அவளை அழைத்திருந்தான்.நிற்பதா போவதா என்று அவள் தடுமாறிக்கொண்டிருக்கும்போதே பிரியன் அவள் அருகில் வந்து நின்றான்.
   எப்படி வளந்துட்ட தேனு?முன்ன பாவாடை தாவணியில பாத்ததுக்கும்,இப்ப பாக்கறதுக்கும் ரொம்ப வித்தியாசம் உன்கிட்ட.அன்னிக்கு நான் கோயிலுக்கு உன்ன பாக்கத்தான் வந்தேன்.உன் பின்னால நின்னுக்கிட்டு இருந்ததும் ஒரு வகையில நல்லதா போச்சி பாத்தியா?” என்றான்,பிறகு ஏதேதோ விசாரித்தான்.அவள் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்து யோசித்து உதிர்த்தாள்.இருவரும் பேசிக்கொண்டே(?) நடந்தார்கள்.
    கோயிலை அடைந்ததும் அவன் விலகிப் போய்விட்டான்.அவளால் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.யாரும் இல்லையென்றால் நன்றாக பேசுகிறான்.யாரேனும் இருந்தால் தெரியாத மாதிரி இருக்கிறான்.இருந்த போதிலும் சிறுவயதில் தன்னுடன் ஒன்றாக கைபிடித்து விளையாடிய பிரியன்தான் தன்னைத் தொட்டுத் தூக்கினான் என்று தெரிந்தபின் அவள் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.
    தேன்மொழி இருந்ததால் பிரியனும் விடிய விடிய கோயிலிலேயே இருக்க தீர்மானித்தான்.ஆனால் தேன்மொழிக்கு அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் தூக்கம் வந்துவிட்டது.கத்தரிக்காயை மட்டும் வெட்டிக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு குழாயடியில் தண்ணீர் பிடிக்கப் போனாள்.
    அவள் குழாயடியில் தனியாக இருப்பதைப் பார்த்த பிரியன் அவளை நெருங்கினான்.அவள் தான் வீட்டுக்குக் கிளம்பப் போவதாக கூறியதும் அவனும் துணைக்கு வருவதாக சொன்னான்.
     அவள் வரும்வரை காத்திருந்தவன் அவள் மறுத்தும் கேளாமல் அவளுக்குத் துணையாக வந்தான்.அவளுக்குப் பயம் வேறு.யாராவது பார்த்தால் என்னாவது என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவனுடன் நடந்தாள்.



                                                   தொடரும் ….

No comments:

Post a Comment