Saturday, March 15, 2014

முகமன் : அப்பா (நயனம் பத்திரிக்கை : 5.01.2014,ஞாயிறு)

தொடர்க்கட்டுரை :அப்பா....



முகமன்..

    ஐந்தாண்டுகளுக்கு முன் என் அன்புத் தந்தையின் இறுதிக்காரியங்களை முடித்துவிட்டு கண்ணீர் வற்றிய நிலையில் தாப்பா சாலையில் பயணித்துக்கொண்டிருந்த பொழுது எதிரில் ஒரு பழக்கப்பட்ட நண்பருக்காக அண்ணன் காரை நிறுத்தினார்.மரியாதை நிமித்தம் காரை விட்டு இறங்கியபோது துடிதுடித்துப்போனேன்.என் கால் அந்தச் சாலையில் பட்டபோது என் மனதில் அப்படியொரு வலி.அந்தக் கணத்தில்தான் அப்பாவின் மறைவு எத்தனை பெரிய இழப்பு என்பதை உணர்ந்தேன்.நினைவு தெரிந்த நாள்முதலாய் அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டு சுற்றிவந்த சாலை அது.அந்தச் சாலையில் அப்பாவின் பாதம் படாத இடமே இல்லை எனலாம்.அப்பாவின் பாதச்சுவடுகள் அந்தச் சாலையெங்கிலும் வியாபித்திருப்பதால் ஏற்பட்ட வலி அது என்பதை புரிந்து கொள்ளமுடிந்தது.அதன்பிறகு பூச்சோங் வந்து சேரும் வரையில் அதே நினைவுதான் என்னை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

   அப்பாவை மீண்டும் எங்காவது பார்த்துவிடமுடியாதா என ஏங்கி தவித்த பொழுதுகள் பல..முதியோர் இல்லத்தில்,நெடுஞ்சாலைகளில் கடந்து போன மரங்களின் ஊடே,வானத்தில் தோன்றிய முகில்களின் பின்னே,சேர்த்து வைத்திருந்த அப்பாவின் உடைகளில்,கனவுகளில் இப்படி அப்பாவை ஒவ்வொருநாளும் தேடிக்கொண்டேதான் இருந்தேன்.அவரது மரணத்திலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவானதாக இல்லை எனக்கு.

   அப்பா தாப்பாவிலுள்ள தொங் வா தோட்டத்து மண்ணை வெகுவாய் நேசித்தவர்.அந்தத் தோட்டத்து முருகன் கோயிலும்,ரப்பர் மரங்களும்,செம்பனைக் காடுகளும்தான் அப்பாவின் உயிர்.மரணத்திற்குப் பின் வந்து போன கனவுகளில் எல்லாம் அப்பா அந்தத் தோட்டத்தில்தான் இருந்தார்.

  அப்பாவைத் தேடித்தேடி களைத்துப்போன பிறகு,அவர் இன்னும் அந்தத் தோட்டத்தில் உயிரோடு இருப்பதாக ஒரு பிம்பம் கானலாய் தோன்றியது எனக்கு.அந்த இடத்திற்குச் சென்றால் அந்தப் பிம்பம் உடைந்து போய்,அப்பா இறந்துவிட்ட உண்மையை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும்.என் கற்பனையில் அவர் அங்கு உயிரோடு இருக்கட்டும் என்ற எண்ணத்தால் நான் அவரது மறைவுக்குப் பிறகு அந்த மண்ணை மிதிக்கவேயில்லை.

  நயனம் பொறுப்பாசிரியர் ராஜகுமாரன் ஐயாவிடம் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் என் அப்பாவை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.அப்பா இறந்துவிட்டதாக சொன்னபோது அவரால் நம்பவே முடியவில்லை.அப்பாவின் சாந்தமான முகம் இன்னும் தன் கண்களுக்குள் அப்படியே இருப்பதாக சொன்னார்.அப்போதுதான் அப்பாவுடனான என் அனுபவங்களைத் தொடராக எழுத எண்ணம் கொண்டுள்ளதைச் சொன்னேன்.உடனே எழுதும்மா என்றார்.

  ஒவ்வொரு முறையும் இந்தத் தொடரை எழுதலாம் என நினைப்பேன்.ஆனால் முடியாது.எழுதும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் அப்பாவின் மரணம் கண்முன் வந்து நின்று கொண்டே இருந்தது.என் மனதில் ஆறாமல் இருக்கும் இந்தக் காயத்தை எழுத்தின்மூலம்தான் ஆற்றமுடியும் என்ற பக்குவம் இப்போதுதான் எனக்கு வந்துள்ளது.

   எனது எழுத்தின் மூலம்,இந்தத் தொடரின் மூலம் மீண்டும் அப்பாவை உயிரோடு கொண்டுவந்து அவருடனான இனிமையான,சோகமான,சுவாரசியமான பொழுதுகளை எல்லாம் பகிர விழைகிறேன்.அடுத்த வாரம் முதல் நயனத்தில் எதிர்பாருங்கள்...




-          உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

No comments:

Post a Comment