Saturday, March 15, 2014

தொடர்க்கட்டுரை : அப்பா : அத்தியாயம் 1 :நயனம் பத்திரிக்கை (12.01.2014,ஞாயிறு)

       அப்பாவின் முதல் அறிமுகம்




     எனக்கும் என் அப்பாவுக்கும் இடையிலான பாசப்பொழுதுகளை மையமாகக் கொண்டு எழுத விரும்பும் இத்தொடரின் முதல் அத்தியாயத்தை நான் பிறப்பதற்கு முன்பிருந்தே ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் காரணம் என் அப்பா என்னை நான் பிறப்பதற்கு முன்பே நேசிக்க தொடங்கியவர்.

  ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாத என் அப்பா எப்படியோ யார் சொல்லியோ ஏதோ ஒரு நம்பிக்கையில் ஒரு புகழ்ப்பெற்ற ஜோதிடரிடம் ஒரு தடவை ஜாதகம் பார்த்திருக்கிறார்.அவருக்கு ஜாதகம் பார்த்த அந்த ஜோதிடர் அப்பாவிடம், உனக்குப் பிடித்துப்போன பெண்ணை நீ திருமணம் செய்வாய்,அந்த மனைவியின் மூலம் உனக்கொரு பெண்குழந்தை பிறக்கும்.அந்தப் பெண்குழந்தை உன் வாழ்வையே மாற்றியமைக்கும்.அந்தப் பெண்குழந்தை வந்தபிறகு உன் வாழ்க்கை வசந்தமாகும்.அவள் உன்மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பாள்.உன் கடைசிக்காலத்தில் அந்தப் பெண்பிள்ளையின் கையால் தண்ணீர் குடித்து,அவளது கையில்தான் உன் உயிர் போகும்,”என்றாராம் அந்த ஜோதிடர்.என் அப்பாவின் வாழ்க்கையில் படிப்படியாக நடந்த அனைத்துமே அந்த ஜோதிடர் சொன்னபடிதான் நடந்தது.என் அப்பாவின் மரணமும் அவர் சொன்னமாதிரிதான் நடந்தது; என் கையால் தண்ணீர் குடித்து,என் கையில்தான் அப்பாவின் உயிர் பிரிந்தது.

   அந்த ஜோதிடரின் வார்த்தைகளை அப்பா ஏனோ பெரிதும் நம்பியதால் என் பிறப்புக்கு ஆவலாக காத்திருந்திருக்கிறார்.எல்லா பிள்ளைகளையும்விட என் மீது அவருக்கு அதீத அன்பு இருந்தது.

  அம்மா சொன்ன கதைகளிலிருந்து கேட்ட விசயங்கள் அவை.என்னைத் தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டு நடந்தபடியே தூங்கவைப்பாராம்.கைக்குழந்தையாக இருந்தபோதே நான் அப்பாவைதான் அதிகம் தேடுவேனாம்.அப்பா மதியம் வேலை முடிந்து வந்ததும் குளித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் இன்னொரு வேலைக்குப் போய்விடுவார்.

  மாலையில் குளித்து முடித்ததும் முருகன் கோயிலுக்குத் தவறாமல் போய்விடுவார்.அந்தக் கோயிலின் தலைவராக இருந்ததால் சில வேளைகளில் ஐயர் இல்லாமல் போனால் அப்பாதான் விளக்கேற்றி பூஜை செய்வார்.அவர் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தையும்,இரவில் கோயிலிலிருந்து திரும்பும் நேரத்தையும் நான் அதிக ஆர்வதோடு எதிர்பார்த்து காத்திருப்பேனாம்.அந்த நேரத்தில் முட்டிப்போட்டு தவழ்ந்து வந்து,வாசல்படியோரம் அமர்ந்து கொள்வேனாம்.அவ்வப்போது தலையை நீட்டி அப்பா வருகிறாரா என பார்த்துக்கொண்டே இருப்பேனாம்.

    நான் குழந்தையாக இருந்தபோது அப்பா என்னை எப்படியெல்லாம் கொஞ்சினார் என்பதை நானே கேட்டு இன்புறும் வகையில் என் அம்மா ஓர் உன்னதமான வேலையைச் செய்திருக்கிறார்.

  நான் இரண்டு வயதிற்குள்ளாகவே திருத்தமாக பேச ஆரம்பித்துவிட்டேனாம்.அந்த வயதிலும் எனக்குக் கீச்சுக்குரல்தான்.நான் மழலைமொழியில் பேசுவது கேட்பதற்கு இனிமையாகவும்,நகைச்சுவையாகவும் இருக்கிறது என என் அம்மா ஒருநாள் என்னைப் பேசவைத்து வானொலி ஒலிநாடாவில் பதிவு செய்துவிட்டார்.அந்த வேளையில் அப்பாவும் வீட்டில் இருந்திருக்கிறார்.பேச்சின் ஊடே அம்மா வேண்டுமென்றே அப்பாவைப் பற்றிய பேச்சையும் ஆரம்பித்திருக்கிறார்.அம்மா செல்லமாய் அதட்டியபோதெல்லாம் நான் அப்பாவை அழைத்திருக்கிறேன்.

  என்னம்மா?” என அப்பா வாஞ்சையோடு கேட்பது அந்த ஒலிநாடாவில் பதிவாகிவிட்டிருந்தது.அதன்பிறகு என்னை அப்பாவின் அருகில் அமரவைத்து அப்பாவுடன் பேசியதையும் அம்மா பதிவு செய்திருந்தார்.மின்சாரம் இல்லாத சமயமென்பதால் நான் அப்பாவுக்கு நாளிதழில் காற்று வீசியது,அவரது முகத்தில் உள்ள உறுப்புகளைப் பார்வையிட்டது,அப்பாவுக்கு பாட்டு பாடி காத்தடி,” என அப்பா சொல்ல,கொஞ்சமாய் பாடிவிட்டு செல்லமாய் சிணுங்கிய என் சிணுங்கல் யாவும் என் அம்மா,அப்பாவின் குரலோடு சேர்ந்து பதிவாகியிருந்தது.

  அன்பு வழிந்து ஓடும்,அப்பாவின் அந்தக் கரகரப்பான குரல் அவர் இறக்கும் வரையில் மாறவேயில்லை.இப்போது கூட எப்போதாவது அவரது ஞாபகம் வரும்போதெல்லாம் அந்த குறுவட்டை வானொலியில் போட்டு கேட்பேன்.என்னைக் கொஞ்சும் அப்பாவின் அந்தக் கரகரப்பான குரலைக் கேட்கும்போதெல்லாம் மீண்டும் சிறு குழந்தையாகி,அப்பாவின் அருகிலேயே இருக்கும் வரம் கிடைக்குமா என்ற ஏக்கம் பிறந்து என்னை வாட்டி வதைக்கிறது.



தொடரும்......

No comments:

Post a Comment