Saturday, March 8, 2014

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 25 :அழகே அழகு தேவதை ( ராஜபார்வை :1981)

கீதம் 25 : அழகே அழகு தேவதை (ராஜபார்வை 1981)


 
    அவனை நாயகனாக வைத்து கதை எழுத வருகிறாள் அவள்.கடைசியில் அவளே அக்கதையின் நாயகியாகிப்போகிறாள்.அதுதான் ராஜபார்வை படத்தின் கதை.
   ஒரு மோதலில் தொடங்கும் அவர்களது உறவு காதலாக தருணமிக்கும் இடம் வெகு அழகானது;உணர்ச்சிப்பூர்வமானது;இரசனை மிக்கது.அந்தப் படம் நெடுக தூவப்பட்டிருக்கும் சிறு சிறு விசயங்களில் கூட இரசனை இழைந்தோடுகிறது.கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தாலும் இயல்பாக,எவ்வித மிகைத்தன்மையுமின்றி நம் மனதில் பதியும் வண்ணம் இருக்கின்றன.எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ஜேசுதாஸ் ஐயாவின் குரலில் ஒலிக்கும் அழகே அழகு தேவதை என்ற பாடல்.
    எனக்குப் பிடித்தமான நடிகரின் படமாக இருந்தாலும் சரி,பாடலாக இருந்தாலும் சரி ஒவ்வொரு கட்டத்தையும் அணு அணுவாக இரசித்துப் பார்க்கும் என இரசனைக்குத் தீனிபோட்ட படங்களுள் ஒன்றுதான் ராஜபார்வை.வெள்ளிவிழா காணும் இவ்வார உதயகீதங்கள் தொகுப்பில் இரசனையான ஒரு படத்திலிருந்து இரசனையான ஒரு பாடலை எனது இரசனையோடு ஒத்துப்போகும் என் அன்பிற்குரிய நண்பன் ஒருவனுக்குச் சமர்ப்பணமாய் எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
  ஒரு நள்ளிரவுப் பொழுதில் வானொலி கேட்டுக்கொண்டே இப்படத்தைப் பார்த்தபோது நான் இரசித்தவிதத்தில் இப்படத்தைப் பற்றி பகிர விழைகிறேன்.
   ரகு (கமல்) பார்வையற்றவன். அவன் அற்புதமான வயலின் இசைக்கலைஞன்.ஒருநாள் அவன் லிப்ட்டில் இருக்கும்போது நான்சி (மாதவி) தன் தாத்தாவுடன் லிப்ட் ஏற வருகிறாள்.அவள் ஏறுவதற்குள் லிப்ட்டின் கதவு சொந்தமாக சாத்திக்கொள்ள,ரகுதான் வேண்டுமென்றே அப்படி செய்திருக்கிறான் என தப்பாக எண்ணிக்கொள்கிறாள்.கமல் சொந்தமாக சிரித்தபடி நிற்க,தன்னைப் பார்த்துதான் அப்படி புன்னகைக்கிறானோ என அவள் கோபத்துடன் தன் ஆடையைச் சரி செய்து கொள்கிறாள்.லிப்ட் நிற்கும்போது அது ஆறாவது மாடிதானா என பார்த்து சொல்லும்படி ரகு சொல்ல,அவன் வேண்டுமென்றே தன்னிடம் வழிவதாக எண்ணிக்கொண்டு நான்சி பொரிந்து தள்ளுகிறாள்.
 லிப்டிலிருந்து தடி,கருப்புக் கண்ணாடி சகிதம் வெளியே வரும் ரகுவை அவனது நண்பன் சீனு (ஒய்.ஜி.மகேந்திரன்)  கைதாங்கலாய் அழைத்துக்கொண்டு போக,அவன் நிஜமாகவே குருடன் தான் என்பதை அறிந்து நான்சி வருத்தம் அடைகிறாள்.
    தன் பாட்டியின் பிறந்தநாள் விருந்தில்,” வெற்றிகரமா உன் நூறாவது கதை பத்திரிக்கை ஆப்பிஸ்ல இருந்து திரும்பி வந்ததுக்கு வாழ்த்துகள் என அவள் அண்ணன் சீண்ட,அவளோ ரகு எங்கே என தேடுவதில் முனைப்பைக் காட்டுகிறாள்.ஒரு மூலையில் தன் நண்பனோடு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ரகுவையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.அவனிடம் எப்படிதான் மன்னிப்பு கேட்பது என அவள் தவிக்கிறாள்.அவளது தாத்தா அவனது நிகழ்ச்சி நடக்கும் விளம்பரத்தைக் கொண்டுவந்து கொடுக்க,அவள் அங்குப்போகிறாள்.அவன் வயலின் வாசிப்பதை இரசித்து கேட்கிறாள். 
     மறுநாள் நான்சி ரகுவைத் தேடிப்போகிறாள்.தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச்சு கொடுக்கிறாள்.அவன் அவளிடம் கோபமாக பேச,அவள் அவனது கண்பார்வையற்றோர் பள்ளியின் தலைமையாசிரியை கொடுத்து அனுப்பிய கடிதத்தைக் கொடுக்கிறாள்.அவரின் பெயரைக் கேட்டதும் அவன் முகம் மலர்கிறது.உள்ளே அழைத்துப் பேசுகிறான்.
   எப்படி நடக்கறீங்க?” என அவள் கேட்க, காலால்தான்.எங்களுக்கு இல்லாதது கண்ணு மட்டும்தான்,” என்கிறான் குறும்பாய்.அவள் மீண்டும் மன்னிப்பு கேட்கிறாள்.பின்னர் தான் அவனை வைத்து கதை எழுதப்போவதாக சொல்கிறாள்.

  என்னமாதிரி கதை எழுதுவீங்க?உங்க கதையில நான் எப்படி?ஹீரோவா?வில்லனா?”என்கிறான்.அந்நேரத்தில் அவனது வீட்டு உரிமையாளர் அழைக்கவே வெளியே போய்விட்டு வருகிறான்.அதற்குள் அவள் அவனது வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் அழகாக ஒழுங்குப்படுத்துகிறாள்.அதன் காரணமாகவே அவன் நாற்காலியில் இடித்துக்கொண்டு கீழே விழுகிறான்.மீண்டும் மன்னிப்பு கேட்டுவிட்டு பொருள்களைப் பழையபடி இருந்த இடத்திலேயே வைக்கிறாள்.அவன் அவளுக்குக் காப்பி கலக்க செல்கிறான்.
    ஸ்ட்ராங்கா,லைட்டா?” என கேட்க,அவள், லைட்டா என சொல்லிமுடிப்பதற்குள் மின்சாரம் தடைப்பட்டு போகிறது.அவள் தடுமாறிப்போகிறாள்.
  எங்கள்   பகல்கூட உங்கள் ராத்திரியைவிட இருட்டா இருக்கும்,என்கிறான்.
   அவளுக்கு அவன் மீது பரிவு என்பதைத் தாண்டி ஒரு பாசம் பிறக்கிறது.வீட்டில் கண்களைக் கட்டிக்கொண்டு அவனை மாதிரி நடந்து பார்க்கிறாள்.
    கதை எழுதுவதற்காக அவனோடு நெருங்கி பழகும் அவள் ஒருநாள் அவனோடு கண்பார்வையற்ற குழந்தைகளின் பள்ளிக்குச் செல்கிறாள்.அவனது குரலைக் கேட்டவுடன், ரகு அண்ணாவா?” என கேட்டபடி குழந்தைகள் கூட்டமொன்று அவர்களை நெருங்கி வருகிறது.எங்களைப் பார்க்க வந்திருக்கீங்களா?” என நான்சியை ஆசையாய் தொட்டுப் பார்க்கும் குழந்தைகளிடம், பிறகு வந்து விளையாடுவார்,” என சொல்லி ரகு அவர்களை அனுப்பி வைக்கிறான்.அவர்களில் ஒரு குழந்தை அவனை அருகில் அழைக்கிறது.என்னம்மா?” என கேட்டபடி குனியும்  ரகுவின் கன்னத்தில் அந்தக் குழந்தை முத்தம் இடுகிறது.அந்தக் காட்சி நான்சியின் மனதை நெகிழவைக்கிறது.அந்தப் பள்ளியில் எல்லாரும் சேர்ந்து சந்தோசமாக பாடுகிறார்கள்.

பனிவிழும் பொழுதினில் இருவிழி நனைந்தது நேற்று
மலர்களின் இமைகளைத் திறந்தது மெல்லிய காற்று
இரவின் பிள்ளைகள் நாங்களே
காதுகளே எம் கண்களே
நிறங்களின் பேதம் இல்லையே......

   தங்கள் குறையை மறந்து அவர்கள் எல்லாரும் சந்தோசமாக சேர்ந்து பாடியது நான்சியை நெகிழவைக்கிறது.அன்றிரவு ரகு அவள் மனதில் வேறொரு பரிமாணத்தில் தெரிகிறான்.அவர்களை நினைத்து கவிதையொன்றை வடிக்கிறாள் அவள்.

நீங்கள் அழக்கூடாது
உங்களைத் தோற்கடித்த இயற்கையை
ஜெயித்தவர்கள் நீங்கள்
கண்கள் என்ன கண்கள்?
எங்கள் கண்களை நாங்கள் பார்ப்பதற்கு விட
உறங்குவதற்குதானே அதிகம் பயன்படுத்தினோம்?
நீங்களோ உங்கள் பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தில்
பிரபஞ்சத்தையே படைத்து விடுகிறீர்களே?
உண்மையில் உங்களுக்கு இருப்பது இருபது கண்கள்..
நகக்கண்கள்...
கல்லறையைப் பார்க்கவரும் சொந்தக்காரன் மாதிரி
அந்தக் கண்களில் கண்ணீர்த்துளியும் வருவது உண்டு
அதைப் பார்க்கும்போது
என் அத்தனை ரத்தமும் ஆவியாகிவிடுகிறது.
நீங்கள் இந்த உலகத்தைக் கண்களைத் தவிர
எல்லா உறுப்புகளாலும் பார்க்கிறீர்கள்
இந்த உலகமோ உங்களின்
கண்களை மட்டுமே பார்க்கிறது.
உங்கள் பார்வை அந்தகப் பார்வையல்ல..அந்தரப் பார்வை
கனவுகளுக்கு இரகசிய கட்டளையிடும் ராஜபார்வை

  
அந்தக் கவிதையை எழுதிமுடித்தவள் ரகுவை வைத்து தான் எழுதப்போகும் கதைக்கு ராஜபார்வை என பெயர் சூட்டுகிறாள். ரகுவிடம் சொல்லும்போது,”ராஜபார்வையா?அதென்னாங்க அப்படி ஒரு டைட்டல்?குருடனுக்கு எப்படிங்க ராஜபார்வை?” என்கிறான்.
  ராஜநீதிக்கு எப்படி பாரபட்சம் கிடையாதோ அதேமாதிரி உங்க பார்வைக்கும் பாரபட்சம் கிடையாது,அதான் ராஜபார்வை,” என்கிறாள்.அவன் அவளிடம் தன் சிறுபிராயத்து காயங்களைப் பகிர்கிறான்.அம்மா இறந்தபிறகு ஆயாவிடம்,ஆயா இறந்தபிறகு தந்தையிடம் என வளர்ந்து,தந்தை இறந்ததும் காய்ச்சலில் கண்பார்வை பறிபோக,சித்தி தன்னைப் பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பிவிட்டதைச் சொல்கிறான்.அவனது கதையைக் கேட்டபிறகு அவனிடம் இன்னும் நெருங்கிவிட்டமாதிரி தோனுவதாக அவள் சொல்லிவிட்டுப் போகிறாள்.
   அவள் அவன் வீட்டுக்கும் வந்து அவனோடு உரிமையாக,அக்கறையாக பழகுகிறாள்.இரவில் வீட்டுக்குத் தாமதமாக போய் தன் தந்தையிடம் திட்டும் வாங்குகிறாள்.
  மறுநாள் அவனுக்குப் பிறந்தநாள்.நான்சி அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போகிறாள்.அவள் அண்ணனுடன் சேர்ந்து அவள் அப்பாவும் அவனைத் திட்ட,அவன் மிகுந்த வலியோடு அங்கிருந்து புறப்படுகிறான்.விட்டுவிட்ட பொருளை எடுக்க வந்தபோது நான்சியின் அப்பா குருட்டு கபோதி என தன்னைத் திட்டுவதைக் கேட்டு உடைந்து போகிறான்.மனதில் வலியோடு பார்வையற்ற குழந்தைகளின் பள்ளியைத் தேடிப்போக,அந்தக் குழந்தைகள் அவனுக்கு வாழ்த்து சொல்வதற்காக காத்திருந்து தூங்கிவிட்டதாக அறிந்து வருத்தமடைகிறான்.கயல்விழி என்ற குழந்தை தனக்கு கொடுத்த இரண்டு மிட்டாய்களில் ஒன்றை அவனுக்காக எடுத்து வைத்தாக சொல்லி,அவனிடம் கொடுத்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க,”குழந்தைகளுக்கு இருக்கும் மனசு பெரியவங்களுக்கு இல்லையே,” என  கண்கள் கலங்குகிறான்.
   அவன் தன் வீட்டை அடையும்போது நான்சி பரிசோடு காத்திருக்கிறாள்.கோபமாய் அவளைத் திட்டும் ரகு,”இனிமே குருடனைப் பத்தி கதை எழுதறேன்,நொண்டியைப் பத்தி நாடகம் எழுதறேன் என சொல்லிக்கிட்டு இங்கே வராதீங்க,” குருடனுக்கு எதுக்குங்க ராஜபார்வை?”என விடாப்பிடியாக துரத்துகிறான்.அவள் போனதும் அந்தப் பரிசைப் பிரிக்கிறான்.அவள் தன்னையே ஓவியமாக வரைந்து தந்திருக்க,பெரும் ஆசையோடு அந்த ஓவியத்தின் முகத்திற்கு முத்தம் கொடுக்கிறான்.அப்போது அவனது தலையை அன்பாக கோதுகிறாள் அவள்.இதற்கு மேல் தன்னை மறைக்கமுடியாது என அவன் அவளது மடி சாய்கிறான்.
     அவனைக் காதலிப்பதாய் சொல்கிறாள் அவள்.அவன் தன் உடல்குறையைச் சுட்டிக்காட்டி என்னென்னவோ சொல்லிக்கொண்டு போக,அவள் அவனை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் முத்தமிடுகிறாள்.அவனது எல்லா தயக்கத்தையும் அந்த முத்தம் உடைத்தெறிய,அவனும் அவளைத் தழுவிக்கொள்கிறான்.இருவரும் காதல் மயக்கத்தில் திளைக்கிறார்கள்.
  நாளுக்கு நாள் அவளுக்கு அவன் மீதான அன்பு கூடுகிறது.அவனது சிறுவயது காயத்திற்கெல்லாம் மருந்தாக,அவனது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அமைக்க எண்ணுகிறாள்.ஒரு தடவை அவன் சில சிறுவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடுகிறான்.அவன் குருடன் என அறியாத சிறுவர்கள் அவனது கண்களை ஒரு துணியால் இறுக்கமாக கட்டிவிடுகிறார்கள்.கடைசிவரையில் அவன் குருடன் என்பது அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாமலேயே போகிறது.நான்சிக்கு அது வேதனையாக இருக்கிறது.அழுதுவிடுகிறாள்.அந்தச் சம்பவத்தைக் கண்டிப்பாக கதையில் இணைப்பேன் என்கிறாள்.
  கதையில் நீயும் இருக்கியா?” என்கிறான்.
   அவள் ஆம் என்கிறாள்.
கதையை எப்படி முடிக்கப்போறே?”
என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா?”
அருமையான முடிவு,கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,”
   ரகுவுக்கும் அவளது காதல் அளவிலாத இன்பத்தைத் தருகிறது.அவளை ஒருநாள் காணாவிட்டால் கூட ஏங்கிப்போகிறான்.அவளைத் தொலைபேசியில் அழைத்து, ஏன் நேத்து வரல?” என உரிமையாக விசாரிக்கிறான்.அவனைச் சமாதானப்படுத்தும் அவள் தன் தந்தை வெளியூர் போவதால் தான் அங்கு வந்து ஒருநாள் முழுக்க அவனுடனேயே இருக்கப்போவதாக சொல்கிறாள்.மதியம் அவனுக்காக தானே சமைக்கப்போவதாகவும் சொல்கிறாள்.அந்தக் கணத்திற்காக இருவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.படத்தில் என் கண்களுக்கு மிகவும் இரசனையான தோன்றிய காட்சிகள் இத்தருணத்தில்தான் வந்து போகின்றன.
   தந்தை கிளம்பியதும் வீட்டை விட்டு வெளியேறும் நான்சி ரகுவோடு சந்தைக்குச் சென்று சமைப்பதற்கு வேண்டிய காய்கறிகளையெல்லாம் வாங்கி கொண்டு போகிறாள்.சமையல் குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து சமைக்க எத்தனிக்கிறாள்.அவள் புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கிறாள்.ரகு தவறுதலாக அந்தப் பாத்திரத்தில் கையை விட்டுவிட புளி கொஞ்சம் கீழே ஊற்றிவிடுகிறது.புத்தகத்தைப் பார்த்து சமைத்துக்கொண்டிருக்கும் நான்சி,அச்சச்சச்சோ,புளி எல்லாம் ஊத்தியாச்சா?” என கோபமாக கேட்கிறாள்.எதுக்கு புளி?என அவன் கேட்க,கோபத்தோடு,”ம்ம் எதுக்கு புளி? கறியில போடறதுக்கு என்கிறாள்.
   அவள் சமைக்கும் நேரத்தில் அவளுடன் இருக்கும் ரகுவின் சேட்டைகள் இரசிக்கும்படி இருக்கும்.ஒரு கட்டத்தில் புளியை அப்படியே அவளது தலையில் கவிழ்க்க,அவள் கோபமாகிவிடுவாள்.குளியலறைக்குள் சென்று தலையை அலசிக்கொண்டு வர சொல்ல,ஐயே இங்கே தாழ்ப்பாளே இருக்காதே?” என்பாள்.அவன்,”நான் வேனும்னா என் கண்ணை மூடிக்கொள்கிறேன்,” என்பான்.அவன் உடனே அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு குளியலறைக்குள் நுழைவாள்.உடைகளைக் களைந்துவிட்டு தண்ணீரை மொண்டு தலையோடு ஊற்றுவாள்.அவனிடம் சமையல் குறிப்புப் புத்தகத்தைக் கொண்டு வந்து தரும்படி கேட்க,அவன் சடாரென குளியலறைக்குள் நுழைந்துவிட,அவள் ஒருகணம் என அதிர்ச்சியாகிவிடுவாள்.கைகள் அனிச்சையாய் உடலின் குறுக்கே மறைத்துக்கொள்ள,நாணம் அவளைக் கௌவிக்கொள்ளும்.அவனுக்குக் கண் தெரியாது என்றாலும் கூட,தன் உடலை ஓர் ஆண் பார்த்துவிட்டதாக அவளுக்குள் தோன்றும் அந்த வெட்கத்தை வெளிப்படுத்தும் காட்சியில் மாதவியின் பெண்மையும்,அழகும் நன்கு வெளிப்படும்.
  நீங்க போங்க,” வெட்கத்திலிருந்து இன்னும் வெளிவராத அவளின் குரலில் ஒரு குழைவும்,அமைதியும் கலந்து ஒலிக்கும்.அவள் சொல்ல சொல்ல அவன் சமைப்பான்.
  அவள் குளித்துவிட்டு தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு வெளிவரும்போது அவன் வயலின் வாசித்துக்கொண்டே இருப்பான்.அவள் அதை இரசித்துக்கொண்டே ரசத்தை ருசி பார்த்துவிட்டு நிமிரும்போது அவன் பக்கவாட்டில் பின்புறமாய் நின்றபடி வயலின் வாசிக்கும் காட்சி அவளுக்கு வெகு இரசனையானதாய் தோன்றும்.
  அசையாதீங்க! என்பாள்.
  ஏன் கையில் துப்பாக்கி கிப்பாக்கி வெச்சிருக்கியா?” என்பான்.
   அவள் அவனை வரையப்போவதாய் சொன்னதும் உடனே திரும்பி நின்று போஸ் கொடுக்கிறேன் பேர்வழி என காலைப் பரப்பிக்கொண்டு நிற்க,அவளுக்குக் கோபம் வரும்.பிறகு அவள் சொன்னமாதிரி அவன் நிற்க,அவள் அவனை தத்ரூபமாய் வரைவாள்.அவனது விரல்களைப் பிடித்து அந்த ஓவியத்தின் மீது வைத்து காட்டுவாள்.
    இது வேனா,நான் ஒரு நல்ல ஐடியா தரேன்,நீ உன்னை வரியேன்,” என்பான்.
   நான் நிறைய வரஞ்சிட்டேன்,” என அவள் சொல்ல,
   இல்ல,இப்ப நான் சொல்லறேன்;வர்ணிக்கிறேன்,கேட்டுட்டு வரி என்கிறான்.
   நீங்களா?” என சிரித்தபடி படிக்கட்டில் அமர்கிறாள் அவள்.
    அவன் ஆ என இழுக்க, என்ன ஆ ஊ ன்னுக்கிட்டு,இதுதான் வர்ணனையா?” என அவள் கேலியாய் சிரிக்கிறாள்.அவன் அவளுக்கு அருகில் படிக்கட்டில் அமர்ந்து ம்ம்ம் என்ற ஹம்மிங்கோடு,தாத ராரேரா என இழுக்க,”என்னா ஒன்னும் வரலையா?” என கேட்டபடி அவனது காதைப் பிடித்து திருகுகிறாள்.
    மறுகணமே அவன் அழகே அழகு தேவதை என வர்ணித்துப் பாட ஆரம்பிக்கிறான்.
   இந்தப் பாடலில் அவள் அங்கங்களை ஒவ்வொன்றாக வருடிப் பார்த்து அவன் வர்ணிப்பதாய் அழகியல் ததும்ப எழுதியிருப்பார் கவியரசு கண்ணதாசன்.
       ஜேசுதாஸ் குரலில் பாடலை ம்ம்ம்ம் என்ற ஹம்மிங்கில் ஆரம்பிக்கும்போதே மனதை என்னவோ செய்யும்.இப்பாடல் காட்சியில் மாதவியின் முக பாவனைகள் வெகு அழகு.கோபம்,காதல்,வெட்கம் அனைத்தையும் அழகாக தனது நீண்ட விழிகளில் வெளிப்படுத்துவார்.அவன் கண் தெரியாதவன்;அவளது உடலைத் தொட்டுப்பார்க்கும்போது அவனது கை தவறுதலாக எங்கேனும் பட்டுவிடக்கூடிய சாத்தியம் உண்டு.பெண்மைக்கே உரிய அந்தத் தவிப்பையும் மாதவி அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.தனது விழிகளிலேயே அனைத்து உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்துவார்.அவன் அவளது இடையைப் பிடித்து அழுத்தும்போது கோபமாய் திமுறுவது,ஒருமாதிரி முறைப்பது,அவன் தொடையில் கைவக்கும்போது ஒருவித எச்சரிக்கையுடன் அவனைப் பார்ப்பது,அவன் அவளது தொடையில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டதும்,தாய்மையின் பரிவோடு அவனது தலையைக் கோதுவது,அவன் கைகளை நீட்டியபடி வர,ஒளிந்து விளையாடுவது,அவனது விரல்களைக் கடிப்பது என மாதவியின் சேட்டைகள் அற்புதம்.அவளது தோள்பட்டையிலிருந்து அவளது விரலைத் தொடும் அவனது கைகள் அவளது நெஞ்சுப்பகுதிக்குச் செல்லும்போது ஒரு அங்கம் கைகள் அறியாதது,” என அவன் தன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு பாடும்போது ஒரு நொடிக்குள் அவள் முகத்தில் வழியும் வெட்கம்,ஒசையின்றி உதடுகளில் வெளிப்படும் சிணுங்கல் எல்லாமே அற்புதம்.
    அந்த ஒரே ஒரு வரியில் கூட நிறைய விசயங்கள் புதைந்துள்ளன.காதலனாக இருந்தாலும் கூட ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணின் உடல் மீது முழு உரிமை இல்லை.அதுதான் நம் பண்பாடு.காதலியின் அங்கங்களில் எதைத் தொடலாம்,எதைத் தொடக்கூடாது என ஒரு வரையறை உண்டு.அந்த வரையறையை மீறாமல் நடந்து கொள்வதுதான் கண்ணியமான நன்மகனுக்கு அழகு.இப்படத்தில் அவனுக்குக் கண் தெரியாது.அப்பெண்ணைத் தொட்டுப் பார்த்து வர்ணிக்கும் வேளையில் அவனது கை அவனையறியாமல் தவறுதலாகவேனும் அவளது அங்கத்தில் வரம்பு மீறி பட்டுவிடக்கூடும்.அவளது நெஞ்சுப்பகுதியை நோக்கி கை நீளும்போது தனிச்சையாய் ஒரு பிரக்ஞை தோன்றி அவனே தன் கையை இழுத்துக்கொண்டு அவ்வாறு பாடுகிறான்.அவனுடைய கண்ணியத்தை,பெண்மையைப் போற்றும் குணத்தை அந்த ஒரே வரியில் எவ்வளவு அற்புதமாய்,கவித்துவமாய் சொல்லிவிட்டார் கவியரசு.
   இப்பாடலில் ஒளிப்பதிவு மிக அருமையாக உள்ளது.அந்தச் சிறு வீட்டில் நடக்கும் விசயங்களை மிகத்துல்லியமாய் படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.கமலின் அலட்டிக்கொள்ளாத இயல்பான பாவனையும் சொல்வதற்கு வார்த்தையில்லை.மாதவியைச் சீண்டும் இடத்தில் அவரது குறும்புத்தனம் வெகு எதார்த்தமாக அமைந்துள்ளது.
  இப்பாடல் முடியும்வேளையில் சமையல் தீய்ந்துவிடும்.
  என் சமையலையெல்லாம் பாடியே கெடுத்துட்டீங்களே என புலம்பிவிட்டு ரகுவின் சட்டையை எடுத்து மாட்டிகொண்டு கூடையை வாயில் கௌவிக்கொண்டு,”உதைப்பேன் என திட்டிவிட்டு அவள் புறப்பட்டுப்போவது ரசனை தெரிக்கும் எதார்த்தம்.
   இப்படத்தின் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்,ஒளிப்பதிவாளர் பரூண் முகர்ஜி,தாத்தா பாத்திரத்தில் அசத்தியிருக்கும் பிரபல இயக்குனர் எல்.வி.பிரசாத்,சித்தியாக வரும் லலிதா,எப்போதும் டென்ஷன் நிறைந்தவராக,மாதவியின் அப்பாவாக வரும் தனுஷ்கோடி,ரகுவின் நண்பனாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன்,கண்பார்வையற்றவனின் தொடுதலில் தெரியும் பிம்பத்தை வார்த்தைகளால் வடித்த கவியரசு கண்ணதாசன், வயலின் இசையோடு அற்புதமான பின்னனி இசையை வழங்கிய இளையராஜா,செவிகளுக்குள் இதமாய் இறங்கும் ஜேசுதாஸ் ஐயாவின் குரல்,படத்தில் நடித்த பார்வையற்ற பள்ளி மாணவர்களின் நடிப்பு இப்படி பல அற்புதங்கள் ஒன்றிணைந்த காவியமாக இப்படம் என் இரசனையில் நிறைந்துவிட்டது.
  என் பாடல் இரசனைகளோடு ஒன்றிப்போகும் என் இனிய நண்பன் ராஜ் அவர்களும் என்னை மாதிரியே கமலின் தீவிர ரசிகர்.அவரை இதுவரையில் நேரில் பார்த்ததில்லை.ஆனால் முகம் தெரியும்.அவரது கடைகளில்தான் நான் பெரும்பாலான இளையராஜாவின் பாடல்களை வாங்கியுள்ளேன்.ஏதாவது பொருள்களைப் பரிமாறிக்கொள்வதென்றால் அவரது கடையில்தான் பரிமாறிக்கொள்வோம்.சில வேளைகளில் அவரது பணியிடத்தில் கொடுத்துவிட்டு ஒளிந்துவிடுவேன்.இந்த வித்தியாசமான நட்பு எனக்கு சுவாரஸ்யமானதாய் தோன்றுகிறது.இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் என் வாழ்க்கையில் ஓர் இன்பத்தைத் தருவதாய் உணர்கிறேன்.என்னை மாதிரி ராஜ்க்கும் பெரும்பாலான பாடல்களின் வரிகள் அத்துப்படி.என்னை மாதிரியே பாடலின் ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து இரசிப்பவர்.அவருடன் பாடலைப் பற்றி பேசும்போது என் இரசனைகளும் பன்மடங்கு பெருகுவதாய் உணர்கிறேன்.
  இந்த வார உதயகீதங்கள் தொகுப்பில் இடம்பெறும் பாடலை ராஜ், என் மாயலோகத்து அன்பிற்கினியவன், மற்றும் அனைத்து வாசகர்களுக்கும் சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன்.வாருங்கள் மனக்கண்கள் சொன்ன அந்த இனிய கானத்தை நாமும் பாடிப்பார்க்கலாம்.
 

அழகே அழகு.. தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகே அழகு.. தேவதை

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக் கண்கள் சொல்லும் பொன்னோவியம்
அழகே அழகு.. தேவதை



சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசை யாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது
அழகே அழகு.. தேவதை



பூ உலாவும் கொடியைப் போல
இடையைக் காண்கிறேன்
போக போக வாழை போல
அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே
அழகே அழகு.. தேவதை




3 comments:

  1. ரசிக்க வைக்கும் ஆழ்ந்த விமர்சனம்...

    ரசனைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றி என் இனிய நண்பரே..இரசனையான உங்களைப் போன்ற நண்பர்களால் என் எழுத்தும் இரசனையாய் மலர்கிறது :)

      Delete
  2. இனிய நண்பரே தனபாலன்,உங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை எனக்கு அனுப்பி,உங்களுக்குப் பிடித்தமான எண்பதாம் ஆண்டு பாடல்களில் ஓரிரண்டையும் தெரிவியுங்கள்.உங்களுக்குச் சமர்ப்பணமாய் அப்பாடலை எழுதுகிறேன்.. :)

    ReplyDelete