Saturday, March 15, 2014

தொடர்க்கட்டுரை : அப்பா : அத்தியாயம் 2 (நயனம் பத்திரிக்கை :19.01.2014,ஞாயிறு)


அப்பா என் முதல் கதாநாயகன்....




     அப்பாதான் நமக்கு அறிமுகமாகும் முதல் கதாநாயகன் என்பார்கள்.அந்தக் கூற்றுக்கு நானும் விதிவிலக்கல்ல.எனக்கு என் அப்பாதான் என்றென்றும் போற்றும் நற்பண்புகளும்,வீரமும் நிறைந்த நிகரில்லாத கதாநாயகன்.அதற்குப் பல சம்பவங்கள் நான் வளர்ந்து நின்ற பருவம் வரையில் சான்றாக அமைந்திருந்தன என்றபோதிலும் முதல் சம்பவமானது கொஞ்சம் அமானுஷ்யம் நிறைந்தது.

   எனக்கு அப்போது ஏறக்குறைய ஏழு வயதிருக்கும்.எனக்கு அந்தத் தோட்டப்புறத்தில் ஓடியாடி விளையாடுவது என்றால் கொள்ளை விருப்பம்.அந்தத் தோட்டப்புறம் என் பார்வையில் வெகு இரசனையாக இருந்தது.

  அப்பா கங்காணியாக பணிபுரிந்துவந்தார்.ரப்பர் பால் நிறுக்குமிடம் ஒன்று இருந்தது.அங்கேதான் அப்பா ரப்பர் பாலை நிறுப்பார்.அந்த நேரத்தில் அங்கே போவேன்.பழைய முருகன் கோயில் இருக்கும் இடத்தையொட்டி ஓர் ஆலமரமும்,அரசமரமும் ஒன்றாக பின்னி வளர்ந்திருந்தது.காற்று வீசும் பொழுதுகளில் அரசமரத்து இலைகள் வெகு உயரத்திலிருந்து பறந்துவரும்.அப்பாவின் வேலை முடியும்வரை அந்த இலைகளை ஓடி ஓடி பிடித்துக்கொண்டிருப்பேன்.சில வேளைகளில் சக நண்பர்களும் எங்களோடு சேர்ந்து கொள்வார்கள்.அப்படி ஒரு சமயத்தில்தான் ரப்பர் பால் ஆலையின் அருகில் ஓர் இடத்தைக் கண்டு பிடித்தோம்.சுரங்கம் மாதிரி இருக்கும்.நான்கைந்து  படிகளில் இறங்கினால் அங்கே சிறு பாதாள அறை இருக்கும்.அங்கு சில வினோதமான கருவிகள் எல்லாம் இருந்தன.அவை ரப்பர் ஆலையோடு சம்பந்தப்பட்ட பொருள்கள் போலும்.ரப்பர் பாலை பட்டணத்தில் கொண்டு போய் அங்குள்ள ஆலையில் வைத்து சில உற்பத்தி வேலைகள் நடைபெற்றதால் எங்கள் தோட்டப்புறத்திலுள்ள ஆலை பயன்படுத்தப்படாமல் அப்படியே இருந்தது.அங்கு விளையாடுவது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்ததால் தினமும் அங்கே விளையாட ஆரம்பித்தோம்.

  ஒருநாள் என் அம்மா நாங்கள் அங்கு விளையாடுவதைப் பார்த்துவிட்டார்.இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என மிரட்டினார்.அப்போதும் கேளாமல் ஒருநாள் திருட்டுத்தனமாக அங்கு விளையாட போய்விட்ட நாங்கள் மலை ஏழுவரையில் அந்த இடத்தில் விளையாடினோம்,அப்போது அங்கு அப்பா இல்லை.

  இரவு ஏழு மணிக்கு இருட்ட தொடங்கியதும் ஒரு பயம் வந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டோம்.அன்றிரவு படுத்து தூங்கும்போது நான் கட்டிலின் வலது புறத்தில் கடைசியாக படுத்திருந்தேன்.ஏனோ என்னால் அன்று சரியாக தூங்கமுடியவில்லை.

   சுவரோரமாய் திரும்பி படுத்தபோது சுவரில் ஒரு வித்தியாசமான உருவம் தோன்றியது.அந்த உருவத்தைச் சரியாக வர்ணிக்க கூட தெரியவில்லை எனக்கு.அதற்கு முழுமையான வடிவம் இல்லை.முகம் மட்டும் அந்தச் சுவரில் தெரிந்தது.சிறு சிறு கருப்புப் புள்ளிகள் சேர்ந்து ஒரு மனித முகம் மாதிரி தோன்றியது.அது என்னைப் பார்த்து சிரித்தது.நான் அரண்டு போனேன்.எப்படியோ சத்தமாக முனகிவிட்டேன்.என் அம்மா நான் தூக்கத்தில் உளறுகிறேன் போலும் என நினைத்துவிட்டார்.நான் அம்மாவின் பக்கமாக திரும்பிகொண்டாலும் சுவரில் அந்த முகம் என் முதுகுக்குப் பின்னால் சிரித்துக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது.அப்போது என் அப்பா திடீரென எழுந்தார்.

  சாமி மேடையில் அருகே சென்றவர் சூடத்தை ஏற்றுக்கொண்டு வந்தார்.அம்மாவிடம் என்னை எழுப்ப சொன்னவர் என் முகத்துக்கு நேரே மூன்று முறை சூடம் சுற்றி என் நெற்றியில் திருநீறு இட்டார்.அதன்பிறகு என்னைத் தனக்கும்,அம்மாவுக்கும் மத்தியில் படுக்கவைத்தார்.அதன்பிறகு நான் நிம்மதியாக உறங்கிப்போனேன்.


  அந்தச் சம்பவத்திற்குப் பிறகு என் மனதில் அப்பா கதாநாயகனாகிப் போனார்.எவ்வளவு பயங்கரமான பேயாக இருந்தாலும் சரி அப்பா வந்தால் பயந்து ஓடிவிடும் என்ற பிம்பம் எனக்குள் தோன்றியது.அப்பா வீட்டில் இருந்தால் எந்தப் பேயும் என்னை நெருங்கவே முடியாது என்ற இறுமாப்பு தோன்றியது.அப்பா என்னுடன் இருக்கும் இரவுப்பொழுதுகள் எனக்குப் பாதுகாப்பானவையாக இருந்தன.   

தொடரும்...

No comments:

Post a Comment