Wednesday, July 27, 2011

தொடர்கதை :உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 3

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 3
         
    கெண்டீனில் முதலாம் பருவ மாணவர்களே அதிகம் இருந்தார்கள்.சுவைபானம் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று பூங்குழலியும் அவளுடைய தோழிகளும்.
      சாப்பாடு வாங்கற எடத்துலதான் தொல்லைன்னா இங்கயுமா? இனிமே சீனியர்களெல்லாம் சாப்பாடு வாங்கிய பிறகுதான் ஜுனியர்கள் வாங்கனும்னு சட்டம் கொண்டு வரனும்,” அரைமணி நேரமாய் காத்திருந்த கடுப்பில் கீதா புலம்பினாள்.
      ஏ மதி,” யாரோ கத்தினார்கள்.அந்தப் பெயரைக் கேட்டதும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது.அப்படி என்னதான் இருக்கிறதோ அந்த மதிவதனனிடம்? எல்லா பெண்களும் உயிரை விடும் அளவிற்குகீதா எஸ்கோவாக இருந்ததால் ஜுனியர் மாணவர்களுக்கான அறிமுக வாரத்தில் அந்த மதிவதனனைப் பற்றி புகழ்ந்து தள்ளினாள்.குழு நடவடிக்கைகளில் மிகவும் துடிப்பாக ஈடுபடுகிறhனாம்.அதன்பிறகு சாரதா மூலம் அடிக்கடி மதிவதனனைப் பற்றிய பேச்சு எழுந்தது.அவளுடைய வகுப்புத் தலைவன் அவன்தானாம்.வகுப்பை அழகாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு பல ஆக்கரமான திட்டங்களைத் திட்டமிட்டு வைத்து விரிவுரைஞர்களிடம் நல்ல பெயரை வாங்கிவிட்டானாம்.
     பொதுவாக தமிழ் விரிவுரைஞர்களிடம் வந்த புதிதிலேயே நன்பெயரை வாங்குவது சாதாரண விசயமல்ல.அவனால் மட்டும் எப்படி அது சாத்தியமானது என்று ஆரம்பத்தில் அவளுக்கும் அவன் மீது வியப்பு இருந்ததுதான்.ஆனால் பிறகு அவளுடைய வியப்பு கோபமாக மாறிப்போனது.
   இறுதி வருடமென்பதால் பூங்குழலியும் அவளுடைய தோழிகளும் பினாங்கு தண்ணீர் மலை கோயிலுக்குத் தைப்பூசத்திற்குப் போய்விட்டு மறுநாள் இரதம் பார்க்க சுங்கைப் பட்டாணி முருகன் ஆலயத்திற்குப் போனார்கள்.அவனும் அவன் நண்பர்களோடு வந்திருந்தான்.கீதாதான் அவனை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.ரத ஊர்வலத்தின்போது அவன் ஆடியது அவளுக்குப் பிடிக்கவில்லை.ஆசிரியராக இருந்துகொண்டு அவன் இம்மாதிரி நடந்து கொண்டது அவளுக்கு வெறுப்பை அளித்தது.அவள் முறைத்துப் பார்த்ததும் ஆடுவதை நிறுத்திவிட்டான்.அவளுக்கு முன்னால் தன் நண்பர்களோடு விரைவாக நடந்து போனவன் அங்கு அறிவிப்பு செய்து கொண்டிருந்தவர்களிடம் என்னமோ சொல்லிவிட்டுப்போய்விட்டான்.
    அடுத்து எம்.பி.சாவிலிருந்து வருங்கால ஆசிரியர்கள் பூங்குழலி எண்ட் கம்பெனி  வந்துகிட்டிருக்காங்க, திடீரென அந்த அறிவிப்பு எழவும் எல்லாரும் அவர்களையே பார்க்க பூங்குழலிக்கு வந்ததே கோபம்.அவளுக்குத் தெரியும் அது மதிவதனனுடைய வேலைதான் என்று.ஏனென்றால் சற்று முன்பு அந்த வழியே வந்தபோதுதான் அவனுடைய நண்பன் காணாமல் போய்விட,”சரவணா, எங்கடா இருக்க? உன்னோட மூனு பிள்ளைங்களும் அப்பாவைக் காணோம்னு அழுதுக்கிட்டு இருக்காங்கடா,” என்று குறும்பாய் அறிவிப்பு செய்தான் மதிவதனன்.
    அவனுக்கு நல்ல நேரம் போலும்.அவள் கண்ணில் படாமல் இருந்தான்.மேலும் அவளுடைய கல்லூரியில் எழுத்தாளர் சங்கத்தின் டிசம்பர் மாதச் சிறுகதைத் திறனாய்வு. அதைத்தொடர்ந்து ஷலங்காவியில் பெண்களுக்கான சாரணியர் இயக்கத்தின் தலைமைத்துவ பயிற்சி, பயில்பணிகள் என்று அவள் மிகவும் பரபரப்பாக இருந்ததால் அவனைப் பார்க்கவில்லை.
    பூங்குழலி, இந்தா கேரட் ஜுஸ் கீதா கொடுத்த கேரட் ஜுஸை வாங்கி கொண்டு காலியாய் இருந்த ஒரு மேசையில் அமர்ந்தாள்.
    பூங்குழலி, இன்னைக்கு அஞ்சு மணிக்கே டேவானுக்கு வந்திடுங்க,பேட்மிண்டன் ப்ராக்ட்டீஸ் பண்ணனும், அவளுடைய வகுப்புத் தோழி பிரேமா அவளிடம் சொல்லிவிட்டுப் போனாள்.
   அங்கு மதிவதனனைச் சந்திக்க நேரிடும் என்று முன்னமே தெரிந்திருந்தால் அவள் நிச்சயமாக போயிருக்க மாட்டாள்தான்.அவள் மாலையில் புறப்பாட நடவடிக்கைகள் இல்லாத சமயங்களில் பொதுவாக கூடைப்பந்து விளையாடப் போய்விட்டு ஆறு மணிக்கு மேல்தான் பூப்பந்து விளையாடப்போவாள்.பிரேமா காத்திருப்பாளே என்று ஐந்து மணிக்கெல்லாம் போய்விட்டாள்.
   அவள் அங்கு போனபோது ஜுனியர் மாணவர்கள் மட்டும்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பிரேமா இன்னும் வரவில்லை.பூங்குழலி ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டுக்கொண்டு அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போதுதான் மதிவதனன் வந்து சேர்ந்தான்.
   என்கூட ஒரு கேம் விளையாடறீங்களா?” அவன் கேட்டதும் அவசரமாய் மறுத்தாள்.
   உங்களுக்குப் பயம்,ஜுனியர் மாணவன்கிட்ட தோத்துப் போயிட்டா என்ன ஆவறதுன்னு அப்படிதானே?”
    அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு இன்னும் ஆத்திரம்தான் வந்தது.அவளாவது தோற்றுப் போவதாவது? கல்லூரிகளுக்கான காகோம் போட்டி விளையாட்டாளர் அவள்.அவளைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டான்.அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமாவது அவனுடன் விளையாட வேண்டும் என்று கூந்தலை இறுக கட்டிக்கொண்டு அவனுடன் விளையாடத் தொடங்கினாள்.இரண்டு ஆட்டங்களில் அவள்தான் வெற்றி பெற்றhள்.அதன்பிறகு பிரேமா வந்துவிட்டாள்.அவளை அவனுடன் விளையாட சொல்லிவிட்டு அவள் ஓய்வெடுக்க வந்துவிட்டாள்.கூந்தலை அவிழ்த்து முடியைக் கோதிக்கொண்டிருந்த வேளையில் மதிவதனனும் அவள் அருகே வந்து அமர்ந்தான்.
    அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க அவளுக்கு சங்கடமாக இருந்தது.ஆனால் அதையும் மீறி எதுவோ ஒன்று அவனைப் பார்க்கத் தூண்டவே பார்த்தாள்.எப்படிதான் இவனுக்குக் குழந்தை முகம் வந்ததோ? ஒரு சாயலில் பார்க்கும்போது சிறுவயதில் அவளுக்கு மிகவும் பிடித்தமான சல்மான்கானின் ஆரம்பகால தோற்றத்தைப் பெற்றிருந்தான்.பச்சை நரம்புகள் தெரியும்படியான நிறம்.பெரிய பெரிய கண்கள்.செக்கச் செவேலென்ற உதடுகளில் சதா புன்னகை.சிரிக்கும்போது மோவாயின் கீழ் விழுந்த குழி அவனைக் குறும்புக்காரனாய்க் காட்டியது.ஆறடி உயரம் இருப்பான் போலும்.ஆனால் எடை கொஞ்சம் கம்மிதான்.
    கேள்விப்பட்டேன்,நேத்து ராத்திரி ரூம்ல பயங்கர ஆட்டமாம்? மதிவதனன் அப்படி கேட்டபோது அவளுக்கு ஆச்சரியமாகதான் இருந்தது.இவனுக்கு எப்படி தெரியும் என்று.சாரதாதான் சொன்னாளாம்.அவனே சொன்னான்.
   அன்னைக்குத் திருட்டுத்தனமா ரும்ல கரண்ட் கேத்தல்ல ரெடிமேட் பாயாசம் கூட காச்சனீங்களாம்,அப்புறம்…. அவள் விடுதி அறையில் செய்யும் சேட்டைகளையெல்லாம் அவன் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போக அவளுக்கு சாரதாவின் மீது பயங்கர கோபம்.பாவி மகள். இவனிடம் எல்லாவற்றையும் சொல்லி வைத்திருக்கிறாள்.பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாயிற்றே என்று மிரட்டி வைக்காமல் விட்டுவைத்தது எவ்வளவு பெரிய தப்பு என்று யோசித்தாள்.
    மதிவதன் விளையாட போனபிறகு பிரேமாவிடம் சொல்லிவிட்டு நேராக நீலாவின் அறைக்குதான் போனாள்.தன்னுடைய தோழிகளுக்கெல்லாம் குறுந்தகவல் அனுப்பிவிட்டுத்தான் போனாள்.அவர்கள் எல்லாரும் நீலாவின் அறைக்கு வந்தபோது சாரதா பேந்த பேந்த விழித்தபடி உட்கார்ந்திருந்தாள்.
    இப்படி பாவமா பார்த்தா விட்டுடுவோமா? நமக்குள்ள நடந்த விசயத்தையெல்லாம் வெளியில போயி அதுவும் ஓர் ஆண்கிட்ட சொல்லியிருக்க,உனக்கு தண்டனை கொடுக்காம எப்படி விடறது?” அவள் என்ன செய்யப் போகிறாளோ. என்று பயந்தபடி நின்றிருந்தாள் சாரதா.
   கேட்டுக்கோ, இன்னைக்கு ராத்திரி அண்ட்டிக்கிட்ட எங்க எல்லாருக்கும் நீதான் சாப்பாடு வாங்கிட்டு வரனும்.எனக்கும் நாசி லெமாவும், ரெண்டு வடையும்.இவங்களுக்கெல்லாம் என்ன வேணுமோ கேட்டுட்டு வாங்கிட்டு வா.அப்புறம் ராத்திரிக்கு நீதான் எங்க எல்லாருக்கும் தண்ணி கலக்கி தரனும்.நாளைக்கு சாயந்திரம் நாங்க ஓலாராகா முடிஞ்சி வரும்போது மரத்துல இருக்கற ஜம்புக்காயெல்லாம் பறிச்சி, கழுவி, வெட்டி உப்பு போட்டு தயாரா இருக்கனும்,சரியா?” பூங்குழலி அதட்டலாக கேட்க பயந்தபடி தலையசைத்தாள் சாரதா.




                                                     தொடரும் ……………

1 comment:

  1. கல்லூரி வாழ்க்கையில் நிகழும் இயல்பான நடவடிக்கைகள்.....கதையோட்டம் பிடித்திருக்கிறது தோழி....

    ReplyDelete