Saturday, November 12, 2011


உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 4


   புகழேந்தி தூரத்தில் வந்து கொண்டிருந்ததைப் பார்த்த பூரணி சட்டென்று பின்னால் திரும்பி நடந்தாள்.சமீப காலமாக அவள் இவ்வாறு நடந்து கொள்வது அவனுக்குப் புதிராகவே இருந்தது.அவளுடைய அமைதியான முகத்திலும் ஏதோ ஒரு வாட்டமோ என்னவோ அவனுக்கே சரியாக தெரியவில்லை.
    பொதுவாக புகழ் பூங்குழலியைத் தவிர வேறு எந்தப் பெண்ணைப் பற்றியும் இந்த அளவுக்கு சிந்தித்ததில்லை.அவர்களாக பேசினால் பேசுவான்,இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடுவான்.ஆனால் ஏனோ பூரணியை அவனுக்குப் பிடித்திருந்தது.முதல் நாள் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் முகத்தைப் போன்று  அவளுடைய முகம் பீதியுடன் இருந்தது.அவளுடைய தடுமாற்றம் அவனுக்குப் பிடித்திருந்தது.தவறுதலாக எதையாவது செய்துவிட்டு அவனிடம்தான் வந்து நிற்பாள்.ஆரம்பத்தில் அவன் அவளிடம் பேசியதில்லை.கொஞ்சம் வயதான ஆசிரியர்களிடம் எல்லாம் நன்றாக பேசுபவன் தன்னிடம் அறவே பேசுவதில்லை என்று அவள் புலம்பியதை அறிந்தபோது அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.எத்தனையோ முறை அவன் மற்ற ஆசிரியைகளிடம் பேசும்போது அவளும் அருகில் இருந்திருக்கிறாள்.ஏதாவது கேட்கலாமா என்று நினைத்தால் அவள் அவன் பக்கம் திரும்பவே மாட்டாள்.தானாக போய்ப் பேசினால் தப்பாக எண்ணிவிடுவாளோ என்றுதான் அவனும் பேசாமல் இருந்தான்.மேலும் அவன் அவ்வளவாக பெண்களை நெருங்கியதில்லை.
     ஆனால் நாளடைவில் அவளாகவே அவனுடன் பேசத் தொடங்கிவிட்டாள்.அவளுடைய பேச்சு குழந்தைத் தனமாக இருப்பதால் அவனுக்கு அவள் பேசுவதைக் கேட்க பிடிக்கும்.ஒரு தடவை அவன் புகைப்பிடித்த ஆறாம் ஆண்டு சிறுவன் ஒருவனை பிரம்பால் அடித்தபோது அவள் பயந்து போய்விட்டாள்.இரண்டு நாள் அவன் பக்கமே வரவே பயப்பட்டாள்.ஆனால் அவளுடைய ஒன்றாம் ஆண்டு மாணவர்கள் குறும்பு செய்தால் புகழ் சாரை கூட்டிட்டு வந்து அடிக்க சொல்லட்டா?” என்று அவனுடைய பெயரைப் பயன்படுத்திதான் பயமுறுத்துவாள்.அவனுக்கு அது பிடித்தது.
    ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அவள்தான் இசைக்கல்வி போதிப்பவள்.ஒரு நாள் குழந்தைகளுக்குப் பாடல் சொல்லிக்கொடுத்தவள் அவனைப் பார்த்ததும் கூச்சப்பட்டு பாடுவதை நிறுத்திவிட்டாள்.அதிலிருந்து இசைக்கல்வியின்போது எங்கே பக்கத்து வகுப்பிலிருக்கும் அவன் காதில் விழுந்துவிடுமோ என்று கதவையெல்லாம் சாத்திவிட்டு மெதுவான குரலில் பாடுவாள்.ஆனால் அவன் அவளுக்குத் தெரியாமல் கதவருகில் நின்று அவள் பாடுவதைக் கேட்டு இரசித்துவிட்டுதான் வருவான்.
    அணிலே அணிலே ஓடி வா,” என்று குழந்தைக்குரலில் அவள் பாடுவது அவனுக்குப் பிடித்தது.அவள் அவனுடைய ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு வட்டாரக்கல்வி போதித்தாள்.மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிப்போவாள்.புது ஆசிரியை அதுவும் இளம் ஆசிரியை என்னும்போது மாணவர்கள் குறும்பு செய்வது சகஜம்தானே? அது மாதிரியான சமயங்களில் அவள் படும் அவஸ்தைகளை அவன் ரசிக்கவே செய்தான்.
   ஒரு முறை அவனுக்குப் பயங்கரமான தலைவலி.விசயம் அறிந்ததும் உடனே அவனுக்கு சுடசுட காப்பி கலக்கி கொண்டு வந்து இரண்டு சோலிடோல் கலந்து கொடுத்தாள்.அதன்பிறகு அவன் குணமாகும்வரை வந்து வந்து பார்த்துக்கொண்டே இருந்தாள்.அப்போதுதான் அவனுக்கு அவளை அதிகம் பிடித்தது.
      தான் பூரணியை இரசிப்பது பூங்குழலிக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்று அவன் நினைக்காமல் இல்லை.”ஏமாற்றுக்காரா, என்னிடம் வாக்கு கொடுத்துவிட்டு எப்படி உன்னால் பூரணியை நேசிக்க முடிந்தது? துரோகி்,” என்று சண்டை போடுவாளா? இல்லை ஒரு வேளை கோபித்துக் கொண்டு பேசாமல் போய்விடுவாளா? எது நடந்தாலும் சரி,அவளிடம் இதற்கு மேல் பூரணியைப் பற்றி மறைக்கக் கூடாது என்று முடிவெடுத்தான்.இன்னும் இரண்டு வாரத்திற்கு பூங்குழலியைப் பார்க்க முடியாது.தமிழ் பயில்பணிக்காக சிப்பம் தயாரிக்க வேண்டுமாம்,தலை சுற்றி போகிறது என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.


     புகழிடம் சொன்னது போன்று பூங்குழலி சிப்பம் செய்து முடிக்கும்வரை வீட்டுக்குப் போக வேண்டாம் என நினைத்திருந்தாள்.விடிய விடிய உட்கார்ந்து செய்தாலும் அவளால் முறையாக செய்ய முடியவில்லை.ஏற்கனவே கடந்த வருடம் அவளுடைய சீனியர்களும் இப்படிதான் விடிய விடிய தூங்காமல் அவதிப்பட்டார்கள் சிப்பம் செய்வதற்காக.பூங்குழலியும் அவளுடைய தோழிகளும் ஒன்றாக அமர்ந்துதான் பயில்பணிகளைச் செய்வார்கள்.அப்போதுதான் தூக்கம் வராது என்பது அவர்களுடைய எண்ணம்.
   ஏய், நான் நாளைக்கு செய்யப் போறேன்லா,என் மூளை இப்ப அவுட் ஓப் செர்வீஸ்ல இருக்கு,” கீதா கணினிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு எழுந்தாள்.
   சரி. நான் எனக்கு மைலோ கலக்கப் போறேன்,யார் யாருக்கு வேணும்?” மற்றவர்கள் கையை உயர்த்தும் முன் அவளே தொடர்ந்து சொன்னாள்.
   அப்படி கேப்பேன்னு நெனச்சீங்களா? சோரி,நான் தூங்கப் போறேன், கொட்டாவி விட்டபடி அறையை விட்டு வெளியேறிய அவளைக் கடுப்பாய் பார்த்தார்கள் மற்ற நான்கு பெண்களும்.
   அடுத்த அரைமணி நேரத்தில் பூங்குழலியைத் தவிர மற்ற எல்லாரும் தூங்க போய்விட்டார்கள்.பூங்குழலி எப்படியாவது முதல் அலகையாவது முடித்துவிட வேண்டும் என்று தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு டைப் செய்ய ஆரம்பித்தாள்.சற்று நேரத்தில் கீதா அவளைத் தேடி வந்தாள்.அவள் முகம் கலவரமாய் இருந்தது.
   பூங்குழலி, நம்ம கேரலினோட அம்மா…..” அதற்கு மேல் அவளால் பேச முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டாள்.
   பூங்குழலியால் ஓரளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது.உடனே கீதாவைப் பின்தொடர்ந்து கேரலினுடைய அறைக்கு ஓடினாள்.அழுதுக்கொண்டே இருந்த கேரலின் பூங்குழலியைப் பார்த்ததும் இன்னும் வேகமாக அழ ஆரம்பித்துவிட்டாள்.
   எப்போது நடந்தது?” பூங்குழலி சைகையாலே கேட்க சரளாவும் சைகையாலே பதினோரு மணி என்று சொன்னாள்.பூங்குழலியின் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது.ஏனோ அவளுக்கு உடனே தன் அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.கேரலின் கதறி கதறி அழுதுக்கொண்டிருந்தாள்.சோனியா அவர்களுடைய டியூட்டரிடம் விசயத்தைச் சொல்லிவிட்டு வார்டனை அழைத்து வரப் போயிருந்தாள்.
   நான் இப்பவே எங்கம்மாவைப் பாக்கப் போகனும்,” கேரலினுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று அந்தப் பெண்களுக்குத் தெரியவில்லை.அருகிலிருந்தாலும் பரவாயில்லை.அவளுடைய வீடு மலாக்காவில் இருந்தது.
   வார்டன் வந்துவிட்டிருந்தார்.நள்ளிரவு பன்னிரண்டு மணியாகிவிட்டதால் தலைமை வார்டனிடம் கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி அவளை தலைமை வார்டனிடம் அழைத்துப் போனார்.சோனியாவும், பூங்குழலியும் அவளுடன் போனார்கள்.தலைமை வார்டனைக் கண்டு பேசி எக்ஸ்பிரஸ்நிலையத்திற்குப் போய் விசாரித்தபோது நள்ளிரவு ஒரு மணியாகியிருந்தது.மலாக்காவிற்கு அந்நேரத்தில் பேருந்து இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.கேரலின் அழுது அழுது மயக்கமாகி விட்டிருந்தாள்.அவளைத் தன் அறையில் படுக்க வைத்துக் கொண்டாள் பூங்குழலி.மற்ற பெண்களும் அங்குதான் இருந்தார்கள்.விடிய விடிய தூங்காமல் அழுதுக்கொண்டே இருந்தாள் கேரலின்.அவர்களுடைய டியூட்டர் அவளை மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் கோலாலம்பூருக்கு விமானத்தில் ஏற்றிவிடுவதாக சொல்லியிருந்தார்.
    அவள் கோலாலம்பூரை எட்டு மணிக்கு அடைந்தாலும் வீடு போய்ச் சேர எப்படியும் பத்து மணிக்கு மேல் ஆகிவிடும்.சில மணி நேரங்களுக்கு மட்டும்தானே அவளுடைய ஆசை அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியும்? அதை நினைத்தபோது இன்னும் வருத்தமாக இருந்தது மற்ற பெண்களுக்கு.
   வீட்டை விட்டு கல்வியின் காரணமாகவோ, பணியின் காரணமாகவோ நினைத்த நேரத்தில் போக முடியாத அளவுக்குத் தூரமாக இருக்கும்போது இம்மாதிரியான சம்பவங்கள் நிகழ்வது எவ்வளவு வேதனையான விசயம்? இறந்து போன அம்மாவைப் பார்க்க வழியின்றி தோழி படும் வேதனை அவர்களையும் தாக்கியிருந்தது.


                                             வேதனை தொடரும் ……..

No comments:

Post a Comment