Wednesday, February 10, 2016

நூல் விமர்சனம் : என் மனதில் நங்கூரமிட்ட ‘செலாஞ்சார் அம்பாட்’



    


    ஒரு நல்ல புனைவென்பதை அதன் மையக்கரு,எழுத்து நடை,பாத்திரப்படைப்பு போன்ற எத்தனையோ விசயங்கள் தீர்மானிக்கலாம்.ஆனால் என் பார்வையில் நல்ல புனைவென்பது வாசகனின் மனதில் நங்கூரமிட்டு அமரவேண்டும்.சில மணித்துளிகளுக்கோ அல்லது சில தினங்களுக்கோ அவன் சிந்தையில் இருந்து கொண்டு அவனை வதைக்கவேண்டும்.சமீபத்தில் எனக்குள் அப்படிப்பட்ட தாக்கத்தைத் தந்ததொரு நாவல் கடாரத்து இலக்கியவாதி ஐயா திரு.கோ.புண்ணியவான் அவர்களின் செலாஞ்சார் அம்பாட் எனும் நாவலாகும்.
  புண்ணியவான் ஐயாவின் கதையில் அவரை மாதிரியே குறும்புத்தனமும்,நகைச்சுவையும் நிறைந்திருக்கும் என்ற பிம்பத்தினூடேதான் அவரது நாவலைக் கையில் எடுத்தேன்.ஆனால் முதல் அத்தியாயத்திலேயே என் கண்களில் கண்ணீரை வரவழைத்து,முற்றிலும் வேறொரு புதிய மனிதரைப் பார்ப்பது போன்றதொரு படிமத்தை (அவர்மீது) எனக்குள் தோன்ற செய்தது அந்நாவல்.
  எனக்கு எப்போதும் தோட்டப்புறம் சார்ந்த கதைகளையும்,கட்டுரையையும் படிப்பதில் வெகு ஆர்வம்.அந்நாளில் தோட்டப்புற வாழ்க்கையில் வறுமை வாட்டி எடுத்தாலும் இனிமையான தருணங்களே அதிகம் நிறைந்திருக்கும் என எனக்குள் இருந்த ஒரு கற்பனையைத் தவிடு பொடியாக்கிவிட்டது அந்நாவல்.
  இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு சஞ்சிக்கூலிகளாய் கொண்டுவரப்பட்ட நம் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளை பல புனைவுகளில் படித்திருப்போம்.சியாம் மரண ரயில் தண்டவாளம் போடும் பணியில்தான் நம்மவர்களுக்கு பெரும் கொடுமை நிகழ்ந்தது என எண்ணியிருப்போம்.ஆனால் அதையும் விட பயங்கரமான,நெஞ்சைக் கனக்க செய்யும் அவலமொன்று சுதந்திரத்திற்குப் பிந்திய காலக்கட்டத்தில் நிகழ்ந்திருந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?அதை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் செலஞ்சார் அம்பாட் எனும் இந்நாவல்.
  இந்தப் பெரும் துயரத்தின் பின்னணியில் அடிப்படையாய் அமைந்திருந்தது சிவப்பு அடையாள அட்டை.சிவப்பு அடையாள அட்டையின் பாதிப்பில் மக்கள் எதிர்கொண்ட வேதனையின் உச்சமாய் இக்கதை திகழ்கிறது.அதனால்தான் இக்கதையை,”சிவப்பின் பிரதிநிதியாக இருந்து,அதன் சீரழிவு வரலாற்றின் ஒரு சிறு பகுதியை மட்டும் கருப்பு மையால் எழுதியுள்ளேன்,” என கூறியிருக்கிறார் நாவலாசிரியர்.
  தோட்டம் விற்கப்பட்ட பிறகு வாழ்வாதாரம் தேடி முன்பின் அறியாத ஓர் ஊருக்குக் கிளம்புகிறது எஞ்சியிருக்கும் மக்கள் கூட்டம்.அக்கூட்டத்தில் தனித்து வாழும் தாய் முனியம்மா இருக்கும் சொற்ப பொருட்களையெல்லாம் மூட்டை கட்டிவைக்க,”எங்கம்மா போறோம் என கேட்கும் ஆறு வயது சிறுவனின் கேள்வியில் தொடங்குகிறது கதை.
   சிவப்பு அடையாள அட்டையை வைத்துக்கொண்டு எங்கும் நல்ல வேலை கிடைக்கப்போவதில்லை என்ற உண்மை முகத்தில் அறைய,வசதியாக வாழ்ந்துவிடவில்லையென்றாலும்,இங்கு வாழ்ந்த மாதிரி ஓரளவேனும் அடிப்படை வசதிகளோடு இருக்கக்கூடும்;நாளடைவில் பழகிவிடும் என்ற நம்பிக்கையோடும்,சொந்த இனம் நிச்சயம் கெட்டது செய்துவிடாது என்ற அபார நம்பிக்கையினாலும் கனவுந்தில் ஏறி கிளம்புகிறார்கள்.
  ஐந்து மணி நேர பயணத்திற்குப் பின்,பழைய அத்தாப்பினால் வேயப்பட்ட மாட்டுக்கொட்டகையின் அருகில் இறக்கப்படுகிறார்கள்.பழைய சட்டங்களாலும்,பலகைகளாலும் கட்டப்பட்டு,கீழ்த்தளம் மண்ணாகவே விடப்பட்ட அந்தக் கொட்டகைதான் அவர்கள் நிரந்தரமாய் தங்கப்போகும் இடம் என அறியும்போதே தங்களின் அவலநிலை அவர்களுக்குப் புரிய தொடங்கிவிடுகிறது.
  ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு அவர்களின் அடையாள அட்டையையும் வாங்கி வைத்துக்கொள்கிறான் அந்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவனான நாகு.
  குழந்தையை விடுவதற்கு ஆயக்கொட்டகை இல்லை.செம்பனைக் காட்டுக்கு அவனையும் அழைத்துப்போய் கல்லிலும்,முள்ளிலும் அவதிப்படவைக்கவேண்டிய நிலை,கைகால்களைக் குத்திய மரப்பலகையில்,ராக்காசி கொசுக்கடியோடு சில மணி நேர தூக்கம்,செம்பனைக் காட்டில் சக்திக்கு மீறி உழைத்தும் அறவே சம்பளம் கொடுக்கப்படாத நிலை,சமையலுக்கு ஒரு சீன மளிகைக் கடையில் கடனுக்கு சாமான் என கொத்தடிமைகளாய் இன்னல் நிறைந்ததொரு வாழ்க்கைதான் அவர்களுக்கு வாய்க்கிறது.
   அந்த வாழ்க்கையில் கிடைக்கப்பெறும் துன்பத்தையும்,அவர்களின் இயலாமை தரும் வலியையும் முன்னிறுத்தி பயணிக்கும் கதையில் வாசகன் கடந்து போக நேரும் வலி அதீதமானது.
  நாவலில் இடம்பெற்றுள்ள சிறுசிறு விசயங்கள் கூட மிகப்பெரும் பாதிப்பை உணர செய்கின்றன.உடன் வருமா என தாமுவின் கேள்வியினூடே மட்டும் வந்து போகும் பூனை, விட்டுச் சென்றுவிட்டதையறியாமல் எசமானரைத் தேடி தெருவுக்கே வந்துவிடும் நாய்கள்,குழந்தைகளின் குதூகலத்தில் மௌனம் கலையும் புளியமரம்,பல ஆண்டுகளாய் அவர்கள் வாழ்ந்த வீடுகள்,அதையொட்டிய இடத்திலிருந்த தென்னை,மாமரங்கள்,துளசி,கருவேப்பிலைச் செடி,நெல்லிமரம்,அம்மி,கயிற்றுக்கட்டில்,மர நாற்காலிகள் இப்படி தோட்டப்புற வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருந்த பல அஃறிணைகள் குறித்த பதிவுகளும் கூட மிக இயல்பாய் எடு(ழு)த்தாளப்பட்டு,மனதில் பாரத்தை ஏற்படுத்துகின்றன.
     அஃறிணைகளே அந்தளவுக்கு மனதை ரணப்படுத்துகிறது எனும்போது ரத்தமும்,சதையுமாய் உணர்ச்சிப்பிழம்புகளின் கலவையில் ஜனித்த மனிதர்கள்?
   தெரியாமல் தன் மக்களை ஓர் அவலத்துக்குள் தள்ளிவிட்டோமே என குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் இருளப்பன் தண்டல்,துணிச்சலாய் தட்டிக் கேட்க முயன்று பின்னர் அந்தத் துணிச்சலுக்காக பெரும் விலை கொடுக்க நேர்ந்த முனியம்மா,வயிற்று உபாதையைக் கூட தணிக்கமுடியாமல் அவதிப்பட்ட சாலம்மாள்,மணி எனும் கொடுங்கோலனின் காமப்பசிக்கு இரையான வேலாயி,தப்பிக்க முயன்று சித்திரவதைக்கு ஆளாகும் ராமையா,அந்திமத்தின் பிடியில் அல்லாடும் சாத்துக்கிழவன்,எப்படியாவது சிவப்பு அட்டையை மாற்றிவிடவேண்டும் என முயற்சித்த முனியன் இப்படி எல்லா பாத்திரங்களும் மிகையான திரிதல் ஏதுமின்றி மிக எதார்த்தமான வடிவில் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
  இந்நாவலில் பத்திரிக்கை நிருபராக வரும் ராஜனின் பாத்திரம் உண்மையில் நிஜ பாத்திரம் (பெ.ராஜேந்திரன்) என்பதை அறியும்போது வியப்பும்,பெருமையும் தோன்றுகிறதென்றால் சிறுவன் தாமுவின் பாத்திரமோ மனதில் கனத்தை ஏற்றிவைத்து வதைக்கிறது.
  பால்ய வயது மாறாத அந்தப் பிஞ்சுக்குழந்தை அனுபவிக்கும் கொடுமைகளை யாராலும் ஜீரணிக்கவே முடியாது.எந்த வாசகனாலும் சிறுவன் தாமுவின் அத்தியாயங்களை இயல்பான மனதுடன் கடக்கவே முடியாது.
   என்னைப் பலநாள் தூங்கவிடாது கனவிலும் பின்தொடர்ந்து வந்து வதைத்த பாத்திரம் அது.செல்லமாக எல்லா சலுகைகளோடும் வளர்ந்து கொண்டிருக்கும் என் அண்ணனின் குழந்தைகளை வெறும் கதாபாத்திரமாக மட்டுமே வந்து,அனுபவிக்கக்கூடாத கொடுமைகளையெல்லாம் அனுபவித்து,அதன் காரணமாகவே மாண்டு போன சிறுவன் தாமுவோடு ஒப்பிட்டு அவனுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து தொடர்ந்தாற்போல் சில தினங்கள் அழுதிருக்கிறேன்.
   இந்நாவலில் கையாளப்பட்டுள்ள பாமரர்களின் உரையாடல்கள் எதார்த்தம் மீறாதவை.நெஞ்சுக்குள் ஆணியடித்ததுபோன்று சுருக்கென்று தைப்பவை.
    நாவல் முழுக்க இத்தகைய உரையாடல்கள் மிகுந்து இருப்பதால் தனித்தனியே குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை.பொதுவாக வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்படும் நாவல்கள் கொஞ்சம் அசந்தால் கட்டுரைத் தன்மையில் கலந்து,கதையில் கொஞ்சம் தொய்வை உண்டாக்கிவிடக்கூடும்.ஆனால் புண்ணியவான் ஐயாவின் இந்நாவலில் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்புக்குக் குறைவில்லை.
   ரெ.கார்த்திகேசு ஐயா கதையின் முன்னுரையில் கூறியுள்ளதைப் போன்று இந்நாவலில் கதைச்சுவை கிஞ்சிற்றும் குறையவில்லை.
  இன்னும் இந்த நாவலைப் பற்றி நிறைய விசயங்களைக் குறிப்பிட்டு சொல்லிக்கொண்டே போகலாம்.அப்படி செய்தால் வாசகனின் சுவாரஸ்யம் குறைந்துவிடக்கூடும்.அந்த அவதானிப்பை அவனே படித்து உள்வாங்கட்டும்.என் விமர்சனத்தை இந்தளவில் நிறைவு செய்கிறேன்.
  இன்று நாம் மிகவும் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவிடவில்லையென்றாலும் நாவலில் சொல்லப்பட்டதுபோன்ற அவல வாழ்க்கையை நாம் வாழ்ந்துவிடவில்லை.அதற்கு நம் முன்னோர்கள் கொடுத்த விலையையும்,கடந்து வந்த கொடுமையின் சுவடுகளையும் இன்றைய தலைமுறை உணரவேண்டுமெனில் இந்த நாவலை அவர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்;அப்போதாவது வன்செயல்களில் ஈடுபடும் நம் இந்திய இளைஞர்களிடையே மனமாற்றம் ஏற்படுத்துகிறதா என பார்க்கலாம்.


உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்.




No comments:

Post a Comment