Wednesday, February 10, 2016

நூல் விமர்சனம் : சிறுவர்களுக்குச் சிறகு தரிக்கும் ‘வனதேவதை’





           சிறந்த படைப்பாளிக்கான பல விருதுகளை வென்றும் எழுத்துத் தாகம் தணியாமல் இலக்கியத்துறையில் தொடர்ந்து தமது பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் நம் நாட்டின் மூத்த எழுத்தாளர் ஐயா திரு.கோ.புண்ணியவான் அவர்கள் முதன்முறையாக சிறுவர்களுக்காக எழுதியிருக்கும் திகில் நாவல் வனதேவதை’.
        தற்போதைய கணினி யுகத்தில் நம் தமிழ்ச்சமூகத்தில் வாசிப்புப் பழக்கம் மனநிறைவளிக்கும் வகையில் இல்லை.வாசிப்பின் சுவை அறியாதவர்கள் மலிந்து கிடப்பதன் காரணத்தால் நாளிதழ்கள்,சஞ்சிகைகள் ஆகியவற்றோடு நம் எழுத்தாளர்கள் எழுதி வெளியிடும் நூல்களும் நம் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதில்லை.இந்நிலை மாறவேண்டும் என்றால் சிறார் பிராயத்திலிருந்தே வாசிப்புப் பழக்கம் தொடங்கப்படவேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்தச் சிறுவர் நாவலை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமதுரையில் தெரிவித்துள்ளார் திரு.கோ.புண்ணியவான்.
     இந்நாவலை நான் என் பார்வையிலிருந்து,என் பாணியில் விமர்சிக்க விரும்புவதால் என் வாசிப்புப்பழக்கத்தோடு தொடர்புப்படுத்த விழைகிறேன்.
      பள்ளிக்குப் பயிலப்போகும் முன்பே எனக்குத் தமிழ் சொல்லித்தந்து,புத்தகம் வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டிருந்தவர் என் அம்மா.தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் காலெடுத்துவைத்த சமயத்தில் பள்ளி நூலகத்தில் சின்னஞ்சிறு வடிவில்,கபில நிறத்தில் இருந்த ஒரு புத்தகம் என்னைக் கவர்ந்தது.கதைக்களஞ்சியம் என்ற தொகுப்பிலான அந்தப் புத்தகத்தில் உள்ள கதையைப் படிக்க ஆரம்பித்ததும் ஏதோ ஒரு மாய உலகம் என்னை இழுத்துச்சென்றது.நான் கற்பனை உலகத்தில் வசிக்க ஆரம்பித்தேன்.புறா ரூபத்தில் இருந்த இளவரசி,எல்லாரும் உறங்கியபின் சமையலறைக்குள் நடனமாடும் உபகரணங்கள்,சாபத்தின் காரணமாக தவளை உருவில் இருந்த இளவரசன் இப்படி நிறைய மாயஜால கதைகள் என்னைத் தனக்குள் பதுக்கிவைத்துக்கொண்டன.
   கதைக்களஞ்சியத்தைத் தொடர்ந்து சிண்டரெல்லா போன்ற அயல்நாட்டு சிறுவர் இலக்கியங்களையும் வாசிக்க ஆரம்பித்தபோது வாசிப்பின் சுகம் அறிந்தேன்.நான் சிறுவயதில் வாசித்த சிறுவர் இலக்கியங்கள் எனக்குள் இன்னொரு கற்பனை உலகத்தை வளர்த்துவிட்டிருந்தன.மிகமிக இனிமையான,அழகான அவ்வுலகில் சஞ்சரிப்பதும்,கதைகளினூடே பயணிப்பதும் வெகு சுகமானதாயிருந்தது எனக்கு.பின்னாளில் எழுத்துத் துறையில் காலெடுத்துவைக்கவும் நான் வாசித்த சிறுவர் இலக்கியம்தாம் எனக்கு வித்திட்டன.வளர்ந்து பெரியவளாகிவிட்ட பின்னரும் புனைவுலகில் நான் கண்ட மாய உலகமும்,அந்தக் கதைகளும் என்னைவிட்டு அகலாதிருந்தன.சிறுவர்களுக்கான கதைகளையும்,நாவலையும் வாசிக்கும்போது இரட்டை சடையோடு சுற்றிக்கொண்டிருந்த ஒரு சிறுமியாகதான் என்னை உணர்கிறேன்.
   ஐயா திரு.கோ.புண்ணியவான் அவர்களின் வனதேவதை சிறுவர் திகில் நாவலையும் ஒரு சிறுமியின் மனநிலையில் இருந்துதான் வாசித்தேன்.
    இந்நாவலின் நாயகன் சிவா.அறிவியல் சார்ந்த விசயங்களில் பேரார்வம் கொண்டுள்ள சிவா கற்பனாசக்தி கொண்டுள்ளவனாகவும் இருக்கிறான்.அது கனவாக வெளிப்பட்டு அவனை மிரட்டவும் செய்கிறது.பள்ளியில் பரிசோதனைக்காக ஆசிரியர் எடுத்து வரச்சொன்ன தவளை முதல்கொண்டு ஆசிரியரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் தென்பட்ட புதர் வரையில் அவனது கற்பனையில் வேறு பரிமாணத்தில் தோன்றி அவனை அச்சுறவும் செய்கிறது,
  இந்நிலையில் அவனது ஆசிரியர் சண்முகம் இரண்டாம் தவணை விடுமுறையில் மாணவர்களை வனவுலா அழைத்துச்செல்லவிருப்பதாக கூறுகிறார்.தான் நன்றாக படித்தால் தந்தை நிச்சயம் வனவுலா செல்ல அனுமதி வழங்குவார் என்ற நம்பிக்கையில் அவன் தான் படிக்கும் நேரத்தை அதிகரிக்கிறான்.அவனது மாற்றத்தைக் கண்டு மகிழும் தந்தை அவன் வனவுலா செல்ல அனுமதிக்கிறார்.
      தன் சக நண்பர்களோடு உற்சாகமாக புறப்படுகிறான் சிவா.காடுகளைப் பற்றியும்,விலங்குகளைப் பற்றியும் அந்த வனவுலாவில் நிறைய விசயங்களை அறிந்துகொண்டு புறப்படும் வேளையில் சிவாவை வேர்களால் ஆன ஒரு நிழலுருவம் பிடித்துக்கொள்கிறது.அது அவனை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் நுழைந்து மறைகிறது.கனவுந்தில் ஏறிக்கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து கத்துகிறான் சிவா.ஆனால் அவனது குரல் யாருக்கும் கேட்கவில்லை.
   காட்டுக்குள் சிக்கிக்கொண்ட சிவாவுக்கு என்ன நேர்ந்தது என்பதே மீதிக்கதை.
  சிறுவன் சிவாவின் கதாபாத்திரம்தான் முதன்மைப் பாத்திரம்.தேடலுக்கும்,கற்பனைக்கும் இடையில் அவனது பாத்திரப்படைப்பு எதார்த்தமாக இருக்கிறது கனவிலும்,கற்பனையிலும் காண்பதை நிஜமென எண்ணி மருகும் குணம்தானே குழந்தைகளினுடையது..நாயகன் என்றாலும் ஒரு சிறுவனுக்குரிய குணாதிசயங்களை மீறி,மிகைப்படுத்தப்படாமல் மிதமான தன்மையைக் கொண்ட பாத்திரமாக அவன் வடிக்கப்பட்டிருக்கிறான். கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு நிஜ உலகில் சவால்கள் ஏற்பட்டால் அதைத் தங்கள் புத்திக்கூர்மையால் சமாளிக்கவும் முடியும் என்பதை அவனது பாத்திரத்தின் மூலம் காட்டி,கற்பனை உலகில் இருப்பதென்பது அசாதாரணமான,முரணான விசயமல்ல என்பதையும் உணர்த்தியுள்ளார்.
   ஆசிரியராக வரும் சண்முகம் இயற்கையின் மீது அக்கறை கொண்டுள்ளவராகவும்,மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியைத் தாண்டி அனுபவக்கல்வியையும் போதிக்கவிரும்பும் மனப்பான்மை மிக்கவராகவும் காட்டப்படுகிறார்.சிவா காட்டில் காணாமல் போய்விட்ட பிறகு தவிக்கும் இடத்தில் பிள்ளைகளின் மீதான அவரது அக்கறை புலப்படுகிறது.
   சிவாவின் தாயும்,தந்தையும் இயல்பான பெற்றோர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.மகன் காணாமல் போனதும்,ஆசிரியர் மீது அந்தத் தந்தை வெளிப்படுத்தும் கோபம் வழக்கமாக எல்லா பெற்றோருக்கும் வரக்கூடியதுதான்.
காட்டிலாகா அதிகாரிகளான சத்யாவும்,ராஜாவும் மாணவர்கள் நாயகனாக எண்ணும் அளவுக்கு தைரியமும்,பரிவும் கொண்ட மனிதர்களாக திகழ்கிறார்கள் குறிப்பாக சிங்கத்துக்கு வைத்தியம் பார்த்த ராஜா.
        நாவலுக்கு வர்ணனை வெகு அவசியம்.என் தொடர்கதை ஒன்றைப் படித்துவிட்டு திரு.கோ.புண்ணியவான் எனக்கு கூறிய அறிவுரை அதுதான்.அவரது வர்ணனை இந்நாவலில் அற்புதமாய் உள்ளது.குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் ஓர் அத்தியாயத்தில் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு தந்தையுடன் மோட்டார்சைக்கிளில் திரும்பும்போது அவனை மிரட்டும் ஒரு புதரை பச்சைப்பூதம் என அவர் வர்ணித்து எழுதியவிதம்.கதையின் களம் காடாக இருப்பதால் அங்குள்ள செடிகொடிகள்,பறவைகள்,மிருகங்களை அவர் வர்ணித்துள்ள விதம் மிகையின்றி எதார்த்தமாக இருக்கிறது.இக்கால நவீன உலகத்து குழந்தைகளுக்கு இயற்கைக் காட்டைப்பற்றி அறிந்திருக்கும் வாய்ப்பு வெகு கம்மி.அவர்கள் இந்நாவலைப் படித்தால் காடுகளைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளமுடியும்.
   இந்நாவலுக்கு ஓவியம் தீட்டியிருக்கும் ஜீவானந்தனின் ஓவியம் வெகு அழகு.வழுவழுப்பான அட்டையில் அவரது வண்ணப்படங்கள் கதைக்குப் பொருத்தமாக,கண்கவர் வண்ணத்தில் கவர்கின்றன.
     நாவலின் முன்னுரையில் மேனாள் தேர்வுவாரிய உதவி இயக்குனர் ஐயா திரு.பி.எம்.மூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி இந்நாவல் சிறுவர் புனைவுக்குரிய அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியுள்ளதாக இருக்கிறது.கதையினூடே நிறைய நல்ல விசயங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
    மாயக்கதையாக இருந்தாலும் இயற்கையைக் குறிப்பாக காடுகளையும்,காடுவாழ் உயிரினங்களையும் பாதுகாக்கவேண்டிய சமூக நலன்,அறிவியல் செய்திகளோடு,சமய கூறுகளையும் இக்கதையில் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது.அழுது அடம்பிடித்தால் வேண்டியது கிடைக்கும் என எண்ணாமல்,நன்றாக படித்தால் விரும்பியதை பெற்றோர் செய்துக்கொடுப்பார்கள் என்ற நேர்மறையான சிந்தனையையும் புகுத்தியுள்ளார்.மாணவர்களுக்கு இதுபோன்ற விசயங்களைக் கதையின் வாயிலாக புகுத்தும்போது இன்னும் ஆழமாக அவர்களின் மனதில் பதியும்.
   திரு.புண்ணியவான் இந்நாவலை எழுதும்போதே தம் பேரப்பிள்ளைகளிடம் கொடுத்து படிக்கச்சொன்னது சிறப்பு.இதன்மூலம் அவர் தமது நாவல் குழந்தைகளை எந்தளவுக்குக் கவரும் என பரீட்சித்து,தன்னை சுயமதிப்பீடும் செய்திருக்கிறார்.
    குழந்தைப்பருவத்திலிருந்தே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தால்தான் அது தொடர்ந்து வலுப்பெற்றிருக்கும்.கற்பனாசக்தி என்பது கேடு விளைவிக்கக்கூடியதல்ல.அதிக கற்பனாசக்தியோடு இருப்பவர்கள்தாம் கெட்டிக்காரத்தனமாக,காலத்துக்கு ஏற்றபடி சிந்தித்து வாழமுடியும்.குழந்தைகள் நல்ல கற்பனாசக்தியோடு திகழ்வதற்கும்,புத்தாக்கச் சிந்தனை கொண்டவர்களாக வளரவும்,பிற்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாவதற்கும்,மொழியை நன்கு கற்றறியவும் வாசிப்புப் பழக்கம் மிக அவசியமானது.கைபேசியைக் கொடுத்து குழந்தையைப் பாழ்படுத்தாமல் நல்ல நூல்களை வாங்கி கொடுத்து அவர்களின் சிந்தை புத்தகங்களின்பால் திரும்ப ஆவன செய்யலாமே?
   உங்கள் குழந்தைகளுக்கு இந்நாவலை வாங்கி கொடுக்கும் அதேவேளையில் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அன்பளிப்பாக வாங்கி கொடுத்தால் நம் சமுதாயம் பயனடையும் அல்லவா?
இந்நாவல் வெளியீடு குறித்த விபரங்கள் பின்வருமாறு:

ஆக்கம்: உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

No comments:

Post a Comment