Saturday, June 28, 2014

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் 32:பார் மகளே பார் (1963)

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் 32
தந்தையர் தின சிறப்பு கீதம்
பார் மகளே பார் (பார் மகளே பார் 1963)




      அறுபதாம் ஆண்டு பாடல்களில் காதல் பாடல்களைக் காட்டிலும் சோகப்பாடல்களும்,தத்துவ பாடல்களும் அதிகமாய் அன்றைய மக்களால் கொண்டாடப்பட்டு வந்தன.அந்தக் காலக்கட்டத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் பலருக்கும் மன ஆறுதலாய் இருந்திருக்கின்றன.அந்தக் காலக்கட்டத்தில் வெளியான சோகப்பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் நாம் கடந்து வந்த சோகத்தை எண்ணி நம் கண்களும் கலங்குவது திண்ணம்.

   எனக்கு அறுபதாம் ஆண்டு பாடல்களை இரவில் மிக சன்னமான ஒலியில் என் காதுக்கருகில் ஒலிக்கவிட்டு கேட்க பிடிக்கும்.இருளின் இரகசியத்தையும்,நிசப்தத்தையும் கிழித்துக்கொண்டு என் செவிகளுக்கு அருகே ஒலிக்கும் அவ்வகைப் பாடல்கள் என்னைச் சுகமாய்த் தாலாட்டி உறங்கவைத்திருக்கின்றன.அப்படி என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்றுதான் பார் மகளே பார் படத்தில் ஒலித்த ஒரு பாடல்.

  மூத்த தலைமுறையினரை என் தந்தையின் ஸ்தானத்தில் இருப்பவர்களாக வணங்குவதால் தந்தையர் தின சிறப்பு கீதமாக மூத்த தலைமுறையினர் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்றை அவர்களுக்குச் சமர்ப்பணமாக எழுத விரும்பியபோது என் மனதில் வந்து நின்ற பாடல் இதுதான்.

  வரிசையாக வரிசை படங்களைக் கொடுத்த வெற்றிப்பட இயக்குனர் பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படமான பார் மகளே பார் திரைப்படம் 1963-ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,சௌகார் ஜானகி,முத்துராமன்,விஜயகுமாரி,புஸ்பலதா,ஏ.வி.எம் ராஜன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது. பட்டு அவர்கள் எழுதிய பெற்றால்தான் பிள்ளையா என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் விஸ்வநாதன்,ராமமூர்த்தி இணையரின் இசையில் நீரோடும் வைகையிலே,வெட்கமா இருக்குதடி தோழி,மதுரா நகரில் தமிழ்ச்சங்கம்,துயில்கொண்டாள்,பூச்சூடும் நேரத்திலே போய்விட்டாயே,அவள் பறந்து போனாளே,பார் மகளே பார் ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன.அவள் பறந்து போனாளே என்ற ஒரே பாடலை நாயகியின் காதலனும்,அப்பாவும் பாடுவதாய் காட்டியிருப்பது புத்திசாலித்தனமான யுத்தி.

   இப்படத்தில் அந்தஸ்து,பணம் என்ற அகங்காரம் நிறைந்த வித்தியாசமான தந்தை பாத்திரத்தில் நடித்திருப்பார் சிவாஜி ஐயா.படத்தின் கதையும் புதுமையானதுதான்.

   ஜமீன்தார் சிவலிங்கத்தின்(சிவாஜி) மனைவி லக்ஷ்மி (சௌகார் ஜானகி)பிரசவலி வலியின் காரணமாக கஸ்தூரிபாய் நர்ஸிங் ஹோமில் அனுமதிக்கப்படுகிறார்.அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கும் அதேவேளையில் சுலோசனா என்ற நாட்டியக்கார பெண் ஒருத்திக்கும் பெண்குழந்தை பிறக்கிறது.

 இரு குழந்தைகளையும் கழுவுவதற்காக எடுத்துப்போன இரு தாதிகளும் மின்சாரம் தாக்கி இறந்துபோக,கழற்றிவைக்கப்பட்டிருந்த எண் அட்டைகளில் எது எந்தக் குழந்தையினது என கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.

   தன் கணவன் தன்னைக் கைவிட்டுவிட்டுப்  போய்விட்டதால் தன்னால் இந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது என கடிதம் எழுதிவிட்டு சுலோசனா எங்கோ போய்விடுகிறாள்.ல‌ஷ்மியம்மாளுக்கும் தன் குழந்தை எது என அறியமுடியாததால் அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகிறது.

  இப்படி ஒரு விசயம் நடந்தது வெளியில் தெரிந்தால் தங்கள் மருத்துவமனையின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என அஞ்சும் தலைமை மருத்துவர் ல‌ஷ்மியம்மாளிடம் நடந்த உண்மையைச் சொல்கிறாள்.‌அவர் தன் கணவரின் நண்பர் ராமசாமியின் ஆலோசனைப்படி தனக்கு இரட்டைப் பெண்குழந்தை பிறந்திருப்பதாக கணவரிடம் பொய் சொல்கிறாள்.அதை உண்மையென நம்பிவிடும் சிவலிங்கத்திற்குப் பெருமை பிடிபடவில்லை.ஒருத்திக்கு சந்திரா(விஜயகுமாரி) என்றும்,இன்னொருத்திக்கு காந்தா([புஷ்பகுமாரி) என்றும் ஒரே பெயராக வைக்கிறார் சிவலிங்கம்.

  குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிடுவார்கள்.பெரியவள் காந்தா தன்னை மாதிரியே கொஞ்சம் திமிர்ப்பிடித்த கோபக்காரியாகவும்,இளையவள் சந்திரா அவள் அம்மாவைப் போல் சாதுவானவளாக இருக்கிறாள் எனவும் சொல்லும் சிவலிங்கம் குழந்தைகளை மிகவும் பாசத்தோடு வளர்க்கிறார்.

   இளையவள் சந்திராவின் கழுத்தில் இருக்கும் பச்சை மச்சம் சிவலிங்கத்தைக் குபேரராக்கும் என வீட்டோடு இருந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சுலோசனாவின் அண்ணன் எம்.ஆர்.ராதா சொன்னபடி சிவலிங்கத்தின் வியாபாரம் விருத்தியடைந்து அவரது செல்வம் பெருக,ஏற்கனவே தான் பணக்காரர் என்ற அகம்பாவத்தில் இருக்கும் சிவலிங்கத்தின் செருக்கு அதிகரிக்கிறது.

    காலம் உருண்டோட,இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தை சிவலிங்கத்தினுடையது என்ற மர்மம் உடையாமலேயே குழந்தைகள் இருவரும் வளர்ந்து பதினெட்டு வயது மங்கையாகிறார்கள்.இருவரையும் தங்கள் சொந்தமகள் போன்றே பாகுபாடு காட்டாமல் வளர்க்கிறாள் லக்ஷ்மி.

   சந்திராவுக்கும்,சேகருக்கும் (முத்துராமன்) திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு  தன் சொத்தையெல்லாம் குதிரைப் பந்தயத்தில் இழந்து ஏழையாகிவிட்ட பழைய நண்பர் ராமசாமியை சிவலிங்கம் அழைக்கவில்லை.விசயமறிந்த அவர் அழையா விருந்தாளியாய் மனைவியோடு வந்து சேர,அவரிடத்தில் நின்று பேசுவது கூட தன் கௌரவத்திற்கு இழுக்கு என நினைத்து அவரைப் புறக்கணிக்கிறார் சிவலிங்கம்.

 அவரது ஆணவத்தால் அவமானமடைந்த சிவலிங்கம் கோபத்தில் குழந்தைகள் பற்றிய விசயத்தைப் போட்டு உடைக்கிறார்.

  சிவலிங்கத்தைப் பிடித்து ஆட்டும் அந்தஸ்து என்ற பேய் விலகட்டும் என்ற எண்ணத்தில் ராமசாமி சொல்லும் அந்த உண்மை குடும்பத்தில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது.திருமணமும் நின்று போகிறது.

   மனைவி தன்னிடம் ஒரு பெரிய உண்மையை மறைத்துவிட்டாள் என்ற கோபமும் அத்தனை பேரின் முன் பட்ட அவமானமும் சிவலிங்கத்தின் கோபத்தைத் தூண்ட,இருவரில் யார் தன் மகள் என்ற உண்மை தெரியும்வரை தான் யாரிடமும் பேசப்போவதில்லை என வீம்பு செய்கிறார்;மனைவியும்,மகளும் கொண்டுவரும் உணவை உண்ண மறுக்கிறார்.மனைவியோடு பேச மறுக்கிறார்.

  தன் பெற்றோரின் நிலையை எண்ணி வேதனையடையும் சந்திரா குடும்பத்தில் நிலவும் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தன் உயிரைத் தியாகம் செய்ய முடிவெடுக்கிறாள்.தான்தான் நாட்டியக்காரி சுலோசனாவின் மகள் என துப்பறிந்து கண்டுபிடித்துவிட்டதாய் பொய்யாய் ஒரு கடிதம் எழுதிவிட்டு வீட்டைவிட்டுப் புறப்படுகிறாள்.தான் சொன்ன பொய்யை வலுப்படுத்துவதற்காக ஒரு பெண்ணிடம் தனது மோதிரத்தைக் கொடுத்து,தன் வீட்டுக்கு சுலோசனா என்ற பெயரில் சென்று தான் சொன்னமாதிரி சொல்ல சொல்கிறாள்.

   கழுத்தில் இருந்த பச்சை மச்சத்தைப் பற்றி குறிப்பிட்டு பேச,அவள் சொன்னது உண்மை என சிவலிங்கம் நம்பிவிடுகிறார்.சந்தரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் சொல்ல,தன் பிரச்சனை தீர்ந்துவிட்டதென,தன் உண்மையான மகள் காந்தாதான் என குதூகலிக்கிறார்  சிவலிங்கம்.சந்தராவின் புகைப்படத்தை வீட்டிலிருந்து எடுத்து கொண்டுபோய் உடைத்துப்போட சொல்கிறார்.காந்தாவும்,லக்ஷ்மியும் சந்தராவுக்கு பதினாறாவது நாள் சடங்குகள் செய்யும்போது கூட அவரிடத்தில் எந்தச் சலனமும் இல்லை.தன் அந்தஸ்து மட்டுமே பெரிதென தோன்றுகிறது அவருக்கு.

   தந்தையின் செல்வசெருக்கு காந்தாவுக்குக் கோபத்தை உண்டாக்க,தந்தையைப் பழிவாங்குவதற்காக ராமசாமியின் மகனையே மணக்கப்போவதாக சொல்கிறாள் அவள்.

   அவ்வேளையில்தான் தன் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற சந்திரா ஆடிய நாடகம் தெரியவருகிறது.அவள்தான் தன் உண்மை மகளாக இருக்கக்கூடும்,தன்னையே பழிவாங்குவதாய்ச் சொன்ன காந்தா தன் மகளாய் இருக்கமுடியாது என்பவர் நாளடைவில் குற்ற உணர்ச்சியால் கொஞ்சம் புத்தி பேதலித்துப் போகிறார்.அவரது ஆணவம் அழிகிறது.

   சந்திராதான் தான் மகளாக இருக்கக்கூடும் என்றபோதிலும் காந்தாவின் படத்தை எடுக்க சொல்லமாட்டேன் என சந்தராவின் படத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு புலம்புகிறார்.அப்போது படத்தில் ஒலிக்கிறது இப்பாடல்.

    இந்தப் பாடலைச் சமீபத்தில் என் தோழியோடு இணைந்து கேட்டபோது அவள் ஒரு விசயத்தைப் பகிர்ந்து கொண்டாள்.அவளது தந்தையின் நெருங்கிய நண்பரின் மகன் ஒருவர் பதினெட்டு வயதில் மரணமடைந்துவிட்டிருக்கிறார்.இறுதிச் சடங்குக்குச் சென்றுவந்த தோழியின் பெற்றோர் அன்றிரவு தொலைக்காட்சியில் இப்பாடல் ஒளிபரப்பானபோது அந்தப் பையனை நினைத்து அழுதார்களாம்.

    படத்தில் பெண்பிள்ளையின் மறைவுக்காக ஒரு தந்தை பாடும் பாடல் நண்பரின் மகனின் இறப்பையும் ஏற்படுத்தி அழவைக்கிறதென்றால் அது எவ்வளவு ஆத்மார்த்தமாக புனையப்பட்டிருக்கிறது?அப்படியென்றால் பெண்பிள்ளைகளைப் பெற்ற எத்தனை தந்தைமார்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கும் இப்பாடல்?

    இப்பாடலைப் பாடிய ஐயா திரு.சௌந்தர்ராஜன் அவர்கள் என்றைக்குமே மறக்கமுடியாதவர்.அவர் பாடிய பல பாடல்கள் சிவாஜி ஐயாவுக்கு வெகு பொருத்தமாக அமைந்துவிடும்.இப்பாடலும் அப்படியே.அழுதுக்கொண்டே பாடுவதுபோல்,சிவாஜி ஐயாவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்கு அற்புதமாய் பொருந்திப்போகிறது.

  எம்.எஸ்.விஸ்வநாதன்,ராமமூர்த்தி இணையரின் இசை நெஞ்சைப் பிழிகிறது,இப்பாடலில் பார் மகளே பார் என்ற வரிகள் பல தொனிகளில் ஒலிக்கின்றன.படத்தில் பெயர் ஓடும்போதும் இதே வரிகளை முதன்மையாகக் கொண்டு ஒரு பாடல் ஒலிக்கும்.

  இப்பாடலைப் புனைந்தவர் கவியரசு கண்ணதாசன்.ஒவ்வொரு வரிகளும் உயிரோட்டமாக வருடுகின்றன.

  எவ்வளவு கம்பீரமான,ஆளுமை நிறைந்த தந்தையாகவே இருந்தாலும் சொந்த மகளைப் பறிகொடுக்கும்போது குழந்தையைப் போன்று உடைந்துபோய்விடுவார்கள்.அவர்களது மனநிலையிலிருந்து இப்பாடலைப் புனைந்திருக்கிறார் கவியரசு.ஒரு மகளின் இருப்பை மட்டுமல்ல..தந்தையின் இருப்பும் ஒரு குடும்பத்துக்கு குறிப்பாக அந்தத் தாய்க்கும் எத்துணை அவசியம் என்பதையும் வரிகள் உணர்த்துகின்றன.

  மகளை நினைத்தே நோய்வாய்ப்பட்ட தாய் முன்பு அந்தப் படுக்கையில் படுத்த நிலை வேறு.இப்போது நோயின் பிடியில் அவள் படுத்திருக்கும் நிலை வேறு.அதைத்தான் தாய் படுத்த படுக்கையினை பார் மகளே பார் என குறிப்பிட்டுச் சொல்கிறார் அந்தத் தந்தை.பெரும் துயரத்தில் இருக்கும்போது உண்ணவும் முடியாமல்,உறங்கவும் முடியாமல் தவிப்பது என பலரும் கடந்து போகும் வலியையும் நெகிழவைக்கும் வகையில் சொல்கின்றன வரிகள்.

  கண்ணிழந்த தந்தை தனையே
  என்ன செய்ய எண்ணுகிறாய்?

 அந்த வரிகள் இயலாமையில் இருக்கும் அந்தத் தந்தையின் வேதனையின் உச்சத்தைச் சொல்கின்றன.

தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்துபோனால்
தந்தைக்கென்று யாருமில்லை

இரண்டாம் சரணத்தில் வரும் இந்த வரிகள் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிதர்சன வரிகள்.

   என் அம்மாவுக்கு மஞ்சள் பூசிக்கொள்வதென்றால் கொள்ளைப்பிரியம்.தினமும் ரப்பர்க்காட்டில் வேலை முடிந்து வந்ததும்,தலையோடு குளித்துவிட்டு மஞ்சளை உரசிப் பூசிக்கொள்வார்.அந்த வாசம் எனக்கு அதிகம் பிடிக்கும்.அப்பா மறைந்தபிறகு அம்மா மஞ்சளை எல்லாம் தூக்கி வீசிவிட்டார்.அதனால் அந்தக் குறிப்பிட்ட வரி என்னைக் கலங்கவைக்கும்.

  கணவன் இன்றி ஒரு மனைவியால் தனித்து வாழ்ந்துவிட முடியும்.ஆனால் மனைவியின்றி பெரும்பாலான வயதான ஆண்களால் வாழமுடிவதில்லை.சொந்தமாக எதையும் செய்யமுடியாமல் உடைந்துபோய் குழந்தையாக மாறிவிடுவார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை.இதைக் காரணம் காட்டி
தாய் இறந்தபிறகு எத்தனையோ தந்தைமார்களைப் பராமரிப்பது கடினம் என முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறார்கள்.இது நியாயமா?

   சில தந்தைமார்களுக்கு மனதில் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த தெரியாது.குடும்பத்துக்காக உழைக்கவேண்டும் என்பதை முன்னிறுத்தியே ஓய்வின்றி சுழல்பவர்கள் அவர்கள்.அவர்கள் இல்லையென்றால் நாம் கருவில் ஜனித்திருக்கவே முடியாது.அந்த நன்றிக்காகவேனும் தந்தையர்களையும் அவர்களின் கடைசிக்காலத்தில் பராமரிப்பது பிள்ளைகளின் கடமையாகும்.

  இன்று தந்தையர் தினம்.இந்த உலகம் தோன்றிய நாள்முதல் வாழ்ந்து,மடிந்து போன தந்தைமார்களுக்கும்,இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தைமார்களுக்கும்,தந்தையாகப்போகும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தந்தைமார்களுக்கும் என் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்.இப்பாடலை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
 

பார் மகளே பார்
பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை நீ
பார் மகளே பார்
பார் மகளே பார்
தாய் படுத்த படுக்கையினை
பார் மகளே பார்
அவள் தங்கமுகம் கருகுவதை
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை
பார் மகளே பார்
பார் மகளே பார்

உண்பதென்று உணவை வைத்தால்
உன் முகத்தைக் காட்டுகிறாய்
உறக்கமென்று படுக்கை போட்டால்
ஓடிவந்து எழுப்புகிறாய்
கண்மணியில் ஆடுகிறாய்
புன்னகையில் வாட்டுகிறாய்
கண்ணிழந்த தந்தை தனையே
என்ன செய்ய எண்ணுகிறாய்?
என்ன செய்ய எண்ணுகிறாய்?
பார் மகளே பார்
பார் மகளே பார்

தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்துபோனால்
தந்தைக்கென்று யாருமில்லை
தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்துபோனால்
தந்தைக்கென்று யாருமில்லை
ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை
யாருமில்லை உனக்கே என்று
ஓடிவிட்டாய் என் மகளே
ஓடிவிட்டாய் என் மகளே
நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்

பார் மகளே பார்


No comments:

Post a Comment