Sunday, June 1, 2014

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்:கீதம் 30:அஞ்சலி அஞ்சலி(டூயட் 1994)



   தாப்பா பட்டணத்தில் கோகுலன் திரேடிங் என்ற கடை எனக்கு மிகவும் பிடித்தமான கடையாக இருந்தது.பட்டணத்திற்குச் செல்லும்போதெல்லாம் அந்தக் கடையை வேடிக்கை பார்ப்பேன்.அந்தக் கடையில் துணிமணிகள்,அலங்காரப்பொருள்கள் ஆகியவற்றோடு சினிமாப்பட வீடியோக்களும்,சினிமாப்பாடல் ஒலிநாடாக்களும் விற்கப்பட்டன.தீபாவளி சமயத்தில் வீட்டை அலங்கரிக்கும் தோரணங்களும்,வண்ண வண்ண விளக்குகளும் அந்தக் கடைக்கு கூடுதல் கவர்ச்சியைத் தந்தன.ஆனால் அவை எல்லாவற்றையும் விட,அங்கு சினிமாப்பாடல்களைப் பதிவு செய்து தருவதுதான் எனக்குப் பெரிய விசயமாக இருந்தது.

    இசைஞானிக்கு அடுத்து ஏ.ஆர்.ரகுமானும் புகழடைந்து கொண்டிருந்த காலம் அது.என் அம்மாவால் இளையராஜா ஐயாவின் ரசிகையாக இருந்த எனக்கு ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் பிடித்துப்போயின.எனக்கு அப்பாதான் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை வாங்கித் தருவார்.

    பெரும்பாலான பொழுதுகளில் எங்கள் வீட்டில் வானொலி ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதால் எனக்குப் பிடித்த பாடல்களையெல்லாம் நான் குறித்து வைத்துக்கொள்வேன்.பத்துப் பாடல்கள் சேர்ந்தவுடன் என் அப்பாவிடம் அந்தப் பாடல் பட்டியலைக் கொடுத்து கோகுலன் அண்ணாவின் கடையில் கொடுக்க சொல்வேன்.இரண்டு வாரம் கழித்து ஒலிநாடாவை எடுத்துக்கொள்ளலாம் என சொல்லிவிடுவார் கோகுலன் அண்ணன்.

     அச்சமயத்தில்தான் ஒரு பாடல் என்னை வெகுவாய் ஈர்த்தது.பாடலின் அர்த்தம் புரியவில்லை.அந்தளவுக்கு அதை ஆராய்ச்சி செய்யவுமில்லை.ஆனால் அந்தப் பெண்குரலில் இருந்த கவர்ச்சி என்னை வசியப்படுத்தியது.அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆதங்கம் தோன்றவே பாடல் பட்டியலில் அந்தப் பாடலையும் இணைத்து அப்பாவிடம் கொடுத்தனுப்பினேன்.

  அந்தப் பாடல் எப்போது என் வசம் வந்து சேரும் என ஆவலாய் நாள்களை எண்ணினேன்.அந்த நாளும் வந்தது.அப்பாவின் சம்பள தினம்.அப்பாவோடு கோகுலன் திரேடிங் கடைக்குப் போனேன்.அந்தப் பாடல் ஒலிநாடாவை ரப்பர் கயிறு போட்டு கட்டி,கீறல் படாமலிருக்க ஒரு பழைய நாளிதழில் அழகாய் சுற்றி கொடுத்தார் கோகுலன் அண்ணன்.மிகவும் பத்திரமாக அந்தப் பொட்டலத்தை வீட்டுக்கு எடுத்துவந்தபோது பெருமிதமாக இருந்தது.

  எங்கள் வீட்டு வானொலியில் அந்தப் பாடலைத் தினமும் ஒலிக்கவிட்டு கேட்டு கேட்டு பூரித்துப்போனேன்.வானொலியின் அருகிலேயே கண்மூடி அமர்ந்து அந்தக் குரலைக் கூர்ந்து கேட்டேன் பலமுறை.ஒரு தடவை லில்லி அக்காள் கூட என்னிடம் அந்த ஒலிநாடாவை இரவல் வாங்கி கொண்டு போனார்.அவ்வருட தீபாவளியின்போது அப்பாடலை வானொலியில் ஒலிக்கவிட்டபோது அதீத மகிழ்ச்சியாகவும்,பெருமையாகவும் இருந்தது.

     அந்தப் பாடல் டூயட் திரையில் இடம்பெற்ற அஞ்சலி அஞ்சலி என்ற பாடல்.இவ்வாரம் உதயகீதங்களுக்கு 30-ஆவது வாரம்.வெள்ளிவிழாவைக் கடந்து பயணித்துக்கொண்டிருக்கும் உதயகீதங்கள் தொகுப்பில் நான் புதிதாய் கொண்டுவர எண்ணிய சில அம்சங்களில் ஒன்று தொன்னூறுகளின் பிற்பகுதியில் வெளிவந்த பாடல்களையும் இணைப்பதாகும்.

   அவ்வகையில் இவ்வார உதயகீதங்கள் தொகுப்பில் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி என்ற பாடலைப் பற்றி பகிர்வதில் பெருமையடைகிறேன்.
  டூயட் திரைப்படம் பிரபு,ரமேஷ் அரவிந்த்,மீனாட்சி சேஷாத்திரி நடிப்பில்,கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் 1995-ஆம் ஆண்டு வெளிவந்த முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்ட படம்.ஏ.ஆர்.ரகுமான் இசையில்,கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் இப்படத்தில் நான் பாடும் சந்தம்’,’தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு’,’குளிச்சா குத்தாலம்’,’கத்திரிக்காய் கத்திரிக்காய்’,’அஞ்சலி அஞ்சலி’,’வெண்ணிலாவில் தேரில் ஏறி’,’என் காதலே என் காதலே என இப்படத்தின் அனைத்து பாடல்களுமே தனித்துவம் வாய்ந்தவை.மெட்டுப்போடு என்ற பாடலில் தமிழின் சிறப்பை சாக்சபோன் இசையோடு கலந்து கொடுத்து சாதனை படத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.கேட்கும்போதே சிலிர்ப்பூட்டும் பாடல் இது.அதைப்போன்றே மனதில் அழமாய் நுழைந்து சுகராகம் மீட்டும் பாடல் அஞ்சலி அஞ்சலி’.

   அஞ்சலி அஞ்சலி பாடல் படத்துக்கே உயிர்நாடி எனலாம்.

    தாய்.தந்தையில்லாத குணாவும் (பிரபு),சிவாவும் (ரமேஷ் அரவிந்த்) அண்ணன் தம்பிகள்.அவர்களுக்கு ஒரு தங்கை.சிவாவை காதல் தோல்வியிலிருந்து மீட்பதற்காக குணா அவ்வூரில் இருந்த நிலபுலன்களை எல்லாம் விற்றுவிட்டு சென்னைக்கு அழைத்துவருகிறான்.இறக்கும் தருவாயில் தந்தை கேட்டுக்கொண்டபடி அவரது இரண்டாவது மனைவி சீத்தம்மாவையும் வீட்டுக்கு அழைத்துவந்து தன்னோடு வைத்துக்கொள்கிறான்.சீத்தம்மாள் தான் யாரென்ற உண்மையை அவனது தம்பி,தங்கையிடம் மறைத்து அவ்வீட்டில் வேலைக்காரியாய் இருக்கிறாள்.

  அண்ணன் குணா தமிழில் வல்லவன்.சிறப்பாக கவிதைகளையும்,பாடல்களையும் இயற்றக்கூடியவன்.சாக்சபோன் இசைக்கருவியை அற்புதமாய் வாசிக்கக்கூடியவன்.தம்பி சிவா நன்றாக பாடக்கூடியவன்.இருவரும் இணைந்து நடத்தும் இசைநிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.

      பருமனான உடல் அமைப்பைக் கொண்ட குணாவைக் காதலிக்க எந்தப் பெண்ணும் முன்வருவதில்லை.ஒரு தடவை அவனது பழைய ஊரில் ஒரு பெண்,”நீங்க எந்தக் கடையில அரிசி வாங்கறீங்க?” என கேலி செய்ய அவமானமாய் உணரும் குணா பெண்களை நேரடியாக அணுக தயங்குகிறான்.இந்நிலையில் ஒரு தடவை பேரங்காடியில் ஓர் அழகான பெண்ணைப் பார்த்து மயங்கிப்போகிறான்.அவளின் ஐம்பது ரூபாய் பறந்து வந்து அவன் வாயில் ஒட்டிக்கொள்ள,அதை எடுப்பதற்குள் எங்கெங்கோ பறந்து போகிறது.பெரும்பாடுபட்டு அப்பணத்தை அவளிடம் கொண்டுவந்து சேர்ப்பவன்,கிழிந்திருந்த சிறு பகுதியை அவள் நினைவாக கண்ணாடியில் ஒட்டி வைக்கிறான்.

    அந்த அழகுப்பெண் அஞ்சலி தன் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறாள் என்பதை அறிந்த பிறகு குணா மகிழ்கிறான்.மனதுக்குள் அவளை வெகு ஆழமாய் நேசிக்க தொடங்குகிறான்.அவளிடம் சொல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஒருநாள் இவர்கள் வீட்டு பலகாரத்தைச் சாப்பிட்ட அஞ்சலி சீத்தம்மாவிடம்,”நீங்க எந்தக் கடையில அரிசி வாங்கறீங்க? என கேட்டுவைக்க,குணா துணுக்குறுகிறான்.

   தன் தம்பியும் அவளை நேசிப்பதை அறியாத குணா,அவளது தந்தையிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்து அவளிடமும் நட்பாக பழகுகிறான்.

  இவ்வேளையில் ஒருநாள் அவன் தன் வீட்டில் செக்சஃபோன் இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருக்க,அதன் இசையில் மயங்கிப்போகும் அஞ்சலி மனம் உருசி ரசித்தபடி அவனது வீட்டை எட்டிப்பார்க்கும்போது சிவா கையில் சாக்சபோன் வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு அவன்தான் வாசிக்கிறான் என தப்பாக எண்ணிக்கொள்கிறாள்.

   இவை ஏதும் அறியாத குணா ஒருநாள் தன் வீட்டிலிருந்து சாக்சபோன் வாசிக்க,குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் அஞ்சலி அந்த இசைக்கேற்றவாறு லாலலா லாலலா என பாட தொடங்குகிறாள்.மகிழ்ந்து போன குணா மேலும் தீவிரமாய் வாசிக்க,அஞ்சலியும் தொடர்ந்து ஹம்மிங் செய்தவாறு இருக்கிறாள்.

      தன் காதலின் முதல்படியில் ஜெயித்துவிட்டதாய் சந்தோசப்படும் குணா அதே ராகத்தில் அவளது பெயரை இணைத்து அஞ்சலி அஞ்சலி என பாடல் புனைகிறான்.அடுத்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக புனையப்பட்ட அந்தப் பாடலின் டியூன் எப்படி என சிவா கேட்க,குணா பாடிக்காட்டுகிறான்.அப்போது படத்தில் முழுமையாக ஒலிக்கிறது இப்பாடல்.

    இப்பாடலில் என்னை அதிகமாய் ஈர்த்தது சித்ராவின் குரல்தான்.கண்ணாளனே எனது கண்ணை என்ற பாடலைப்போன்றே இப்பாடலில் அவரது குரல் என்னை இன்னும் அதிகம் வசியப்படுத்தியது.ஆரம்பத்தில் ஒலிக்கும் சாக்சபோன் இசைக்கு ஏற்ப ஒலிக்கும் அந்த ஹம்மிங் ஆகட்டும்,முதல் சரணம் முடிந்தபிறகு ம்ம்,ஆஆஆஆ என ஒலிக்கும் ஹம்மிங்காகட்டும் அப்படியே மனதை வருடி நம்மையும் தொடர்ந்து முணுமுணுக்க செய்கிறது.

   இப்பாடலை சித்ராவுடன் இணைந்து பாடியவர் எஸ்.பி.பாலா எனும்போது சொல்லவே வேண்டாம்.பிரபு பாடும்போது அவருக்குப் பொருத்தமாக சற்று முரடான குரலாகவும்,ரமேஷ் அரவிந்த் பாடும்போது அவருக்குப் பொருத்தமாக சற்று குழைவாகவும் அந்த வித்தியாசம் தெரிகிறது.
  
  இப்பாடலின் இசையைப் பற்றி சிலாகித்துப் பேசும்போது சக்சபோன் இசைக்கலைஞரைப் பற்றியும் கட்டாயம் பகிரவேண்டும்.இப்படத்தின் பிரதான இசையாக விளங்கிய சக்சபோன் இசையை வழங்கியவர் கத்ரி கோபால்நாத் அவர்கள்.

  இப்படத்தின் இயக்குனர் திரு.கே.பாலச்சந்தர் அவர்களின் முயற்சியால் இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்து பணியாற்றினார் பத்ரி கோபால்நாத்.

   ரகுமானுக்கு சுமார் 30 இராகங்களை வாசித்துக் காட்டியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. கடைசியாக கல்யாண வசந்தம் வாசித்ததும் 'இதுதான்' என ரகுமான் மகிழ்ந்தார்.

  சாக்சபோன் இசையில் பல சாதனைகளைப் படத்த இவர் லண்டன் பிபிசி நடத்திய உல்லாசவீதி’ (BBC Promenade) எனும் இசைவிழாவில் 1994ஆம் ஆண்டு தனது இசையை வழங்கினார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கருநாடக இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்குக் கிடைத்தது.பல விருதுகளையும் வென்ற இவருக்கு இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றித்தந்தது.

    இப்படத்தில் எல்லா பாடல்களையும் எழுதி,இரண்டு கவிதைகளையும் எழுதியிருக்கும் வைரமுத்து இப்பாடலில் அசத்திவிட்டார்.நாயகியின் பெயர் அஞ்சலி என்பதால் வார்த்தைக்கு வார்த்தை அஞ்சலி என போட்டும் எழுதியிருப்பது வித்தியாசமான அதே சமயம் கவித்துவத்தின் உச்சம்.

    படத்தின் நாயகி அஞ்சலி ஈடு இணையற்ற அழகி என்பதால் அவளது குரல்,பாதம்,எல்லாவற்றுக்கும் அஞ்சலி செலுத்துவதாய் பாடலை அமைத்திருக்கிறார்.

     அவளின் அழகைவிட அதிசயமானது எதுவும் இல்லை என்றும்,அவளது பெயரைச் சொன்னவுடன் முல்லை மலர்ந்ததாகவும்,அவர் புனைந்திருப்பது அழகிய ரசனை.

    நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
    பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா?

   அவளது அழகைப் புகழும் உச்சக்கட்ட வரிகள் அவை.படத்தில் அப்பெண்ணானவள் கலைகளை இரசிப்பவள்;தமிழையும்,இசையையும் நேசிப்பவள்.அவள் காதல் வயப்பட முதல் காரணமாக இருந்தது அவனது இசை.அடுத்தது தமிழ்.ஒன்றில் மனம் குளிர்ந்தவள் மற்றொன்றில் உயிர் கசிந்ததாய் அந்தச் சரணத்தில் எவ்வளவு அற்புதமாய் எழுதப்பட்டிருக்கிறது.

   கடலிலே மழைபெய்தபின் எந்தத்துளி மழைத்துளி
   காதலில் அதுபோல நான் கலந்துட்டேன் காதலி

ஒன்றர கலந்துவிட்ட காதலை கடலில் விழுந்த மழைத்துளியோடு ஒப்பிட்டிருப்பதும் அருமை.

   அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள் என விழி பார்த்து வந்த சீதையின் காதலை செழி வழியாய் இசையாகவும்,தமிழாகவும் வந்து சேர்ந்த தன் காதலோடு ஒப்பிட்டு முரண்படுத்தியிருப்பது ரசிக்கத்தக்க சந்தம்.

  .ஆண் அப்பெண்ணின் புற அழகை மையப்படுத்தி பாடுவதுபோன்றும் அதே அப்பெண் பாடுவதாய் வரும்போது அவனது தமிழ்வளமையையும்,இசைத்திறமையையும்,
கவியாற்றலையும் அவள் வாழ்த்துவதாய் மையப்படுத்தி எழுதியிருப்பது அபாரம்.

    பாடல் காட்சியும் அழகியலோடு படமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு அஞ்சலிக்கும் ரமேஷ் அரவிந்தும்,மீனாட்சியும் வெளிப்படுத்தும் அபிநயம் அற்புதம்.அவள் திரைப்பட நடிகர்களுக்கு நடனம் வடிவமைப்பவள் என்ற பாத்திரத்துக்கு ஏற்ப நடனக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    ஆக மொத்தத்தில் குரல்,வரிகள்.இசை,அபிநயம்,ஹம்மிங் அனைத்திலும் சிறப்புக்குரிய வகையில் இருக்கும் பாடல் இது.அதனால்தான் லாலலா என்ற ஹம்மிங்கைக் கூட கணக்கிட்டு அதன்படி எழுதியுள்ளேன்.அனைத்து புதிய பார்வை ரசிகர்களுக்கும் சமர்ப்பணமாய் இதோ பாடல்.


பெ: லாலலா லாலலா லாலாலலாலா
    லாலலா லாலலா லாலாலலாலா
     சக்சபோன் இசை
    லாலலா லாலலா லாலாலலாலா
    லாலலா லாலலா லாலாலலாலா
    லலலல்ல லல்லலா லலலாலா லல
    லல்ல லலலா லலலாலா
    லலலல்ல லல்லலா லலலாலா லல
    லல்ல லாலா லலலாலா
    லாலலா லாலலா லாலாலலாலா
    லாலலா லாலலா லாலாலலாலா
   லலலல்ல லல்லலா லலலாலா லல
   லல்ல லலலா லலலாலா
   லலலல்ல லல்லலா லலலாலா லல
   லல்ல லாலா லலலாலா
  
ஆண் :அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
      அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
      பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
      பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
      கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
      கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி
      அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
       அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
       பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
       பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
       கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
       கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி

       காதல் வந்து தீண்டும் வரை
       இருவரும் தனித்தனி
       காதலின் பொன்சங்கிலி இணைத்தது கண்மணி
       கடலிலே மழை பெய்தபின் எந்தத்துளி மழைத்துளி
       காதலில் அதுபோல நான் கலந்துட்டேன் காதலி
       திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
       தினம் ஒரு புதுப்பாடல் வடித்துவிட்டேன்
       அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி
       பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
       பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
       கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
       கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி
       அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
       அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
       பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
       பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
       கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
      கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி

பெண் : சீதையின் காதல் அன்று விழிவழி நுழைந்தது
        கோதையின் காதல் இன்று செவிவழி புகுந்தது
        என்னவோ என் நெஞ்சினை
        இசை வந்து துளைத்தது
        இசை வந்த பாதைவழி
        தமிழ் மெல்ல நுழைந்தது
        இசை வந்த திசை பார்த்து மனம் குளிர்ந்தேன்
        தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
       அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி
       அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
        நண்பா உன் கற்புக்கு நடனாஞ்சலி
        கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
        கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
 ஆண்:  அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
        அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
        பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
        பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
        கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
        கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி

        அழகிய உனைப்போலவே அதிசயம் இல்லையே
       அஞ்சலி பேரைச் சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
       கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே
       கண்மணி நீ இல்லையேல் கவிதைகள் இல்லையே
       நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
       பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா?
       அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி
       பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
       பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
       கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
       கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி
       அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
       அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
      பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
      பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
       கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி

       கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி


No comments:

Post a Comment