Saturday, March 2, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்

    


கீதம் 2 : மழையும் நீயே






         ஓர் ஆணுக்கும்,ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் அறிமுகம் காதலாய் மலரும் தருணம் மிக இன்பமானது.மனைவியை இழந்து தனிமையில் இருக்கும் ஆணும்,திருமணத்தில் நாட்டமில்லாமல் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் ஒருவருக்கொருவர் ஈடுபாடு கொண்டு காதல் கொள்ளும் தருணத்தை அழகன் திரைப்படத்தில் வெகு இரசனையோடு சொல்லியிருப்பார் கே.பாலச்சந்தர்.மரகதமணியின் இசையில் இப்படத்தில் நிறைய இனிமையான பாடல்கள்.அவற்றில் ஒன்றுதான் மழையும் நீயே’.

     மனதில் இருக்கும் காதலை இருவருமே உணர்ந்தபோதிலும் வாய்விட்டு சொல்லிக்கொள்ளவில்லை.அதுவே ஒரு பெண்ணுக்கு எத்தகைய ஏக்கத்தையும்,வேதனையையும் கொடுக்கும்.அந்தச் சமயத்தில் அந்த ஆணை இன்னொரு பெண்ணோடு பார்த்துவிட்டால் அவளுக்கு எவ்வளவு கோபமும்,விரக்தியும் தோன்றும் என்பதை அப்பாடலில் வெகு அழகாய் காட்டியிருப்பார்கள்.மனதில் வெகு ஆழமாய் அழகன் மீது நேசம்,வாய்விட்டு சொல்லமுடியாமல் தவிக்கும் தவிப்பு,அவன் இன்னொரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டதும் ஏற்படும் கோபமும்,பொறாமையும்.படபடவென பொரிந்து தள்ளிவிட்டு,அவனும் கோபத்தில் திட்டிவிட்டு காதலைச் சொல்லிவிட்டதும் ஏற்படும் பரவசம்,மகிழ்ச்சி,சந்தோச கண்ணீர்,தாபம் அனைத்தையும் ஒருசேர இப்பாடல் கொண்டிருக்கும்.1991- ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில்,இப்பாடல்மம்முட்டி(அழகப்பன்),பானுப்பிரியாவுக்காக(பிரியா) ஒலிக்கும்.இப்பாடல் ஒலிக்கும் காட்சியே வெகு இரசனையானதாய் இருக்கும்.
   மம்முட்டியைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் செல்வார் பானுப்பிரியா.மம்முட்டியின் உறவினர் வேண்டுமென்றே கதையைத் திரித்துக்கூற பானுப்பிரியா கோயிலுக்குப் போவார்.அங்கே மம்முட்டியையும்,கீதாவையும் ஒன்றாகப் பார்த்ததும் கோபம் பற்றிக்கொண்டு வரும்.அந்தக் கோபத்தை மம்முட்டியின் மகள் மீது காட்டும் காட்சி சிரிப்பைதான் வரவழைக்கும்.மம்முட்டி தனது மகளை பானுப்பிரியாவிடம்தான் நடனம் கற்றுக்கொடுக்க அனுப்பியிருப்பார்.பானுப்பிரியா திட்டி அனுப்பியதும் அந்தப் பெண்பிள்ளை அழுதுக்கொண்டே மம்முட்டியிடம் போய்ச் சொல்வாள்.இனிமே டான்ஸ் கிளாஸ் வரவேண்டாம்னு சொல்லி என்னைத் திட்டி அனுப்பிட்டாங்கப்பா என அந்தக் குழந்தை அழுதுக்கொண்டே சொல்ல,கோபமாய் பானுப்பிரியாவைத் தேடிப்போவார் மம்முட்டி.
       பானுப்பிரியா கோபமாய் நடனம் ஆடிக்கொண்டே மூச்சிறைக்க படபடவென பொரிந்து தள்ளிவிடுவார் மம்முட்டியிடம்.யாரிடமும் மயங்காமல் இருந்த தான் மம்முட்டியின் மீது வைத்துவிட்ட காதலை தனது முட்டாள்தனம் போல அவர் சுட்டிக்காட்டவே மம்முட்டிக்கும் கோபம் வந்துவிடும்.அவர் பேசி முடித்ததும் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துரைக்க விரும்பும் மம்முட்டி,”ஆனால் உன்னை மாதிரி டான்ஸ் ஆடிக்கிட்டு எல்லாம் என்னால பேசமுடியாது,” என ஆரம்பித்து தன் விளக்கத்தைக் கொடுத்துவிட்டு தன் மனதில் இருக்கும் காதலையும் கோபமாகவே சொல்லிவிட்டு படியில் இறங்கிப் போக முற்படுவார்.அப்போது,”ஒருத்தர் மேல ஒருத்தர் பொறாமையா இருக்கிறது கூட காதல்தான் என  பானுப்பிரியாவின் குரல் கேட்கும்.நின்று பார்ப்பார்.பானுப்பிரியாவின் கண்களில் கோபம்,அழுகை,கொஞ்சல்,காதல்,கண்ணீர்,இலேசான புன்னகை எல்லாமே கலந்து தென்படும்.மம்முட்டிக்கும் சிரிப்பு வந்துவிட,கனிவாய் காதல் பார்வை பார்க்க,பானுப்பிரியா வேகமாக ஓடிப்போய் அருகில் நெருங்கியதும் வெட்கப்பட்டு தலை குனிந்து நிற்பார்.மம்முட்டி பானுப்பிரியாவின் கையைப் பிடித்து இழுக்க,பானுப்பிரியா மம்முட்டியின் மோதி நிற்க,மம்முட்டி அவரை அணைத்துக்கொள்வார்.உடனே ஒலிக்கும் மழையும் நீயே என்ற பாடல்.வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி.பாலாவின் குரல் இதமாய்த் தாலாட்டும்.
    கோபமாய்ச் சுடுபவளும் நீதான்,மழையாய்க் குளிர்விப்பவளும் நீதான் என்ற உவமையோடு பானுப்பிரியாவின் கோபத்தையும்,அன்பையும்  எடுத்துரைக்கும் அப்பாடல்.அப்பாடல் காட்சியில் இருவரும் காதலை வெளிப்படுத்திவிட்ட சந்தோசத்தில் மனம் முழுக்க குதூகலத்தோடு வீட்டுக்குப் போகும்போது பானுப்பிரியா மம்முட்டிக்குப் பரிசாக அனுப்பிவைத்த பியானோ வீட்டில் இருக்கும்.அதில் இசையைவிட இனிமையானவருக்கு என்ற வரிகள் எழுதப்பட்டிருக்கும்.அன்பிற்கினியவர்களிடமிருந்து வரும் பரிசு தரும் ஆனந்தத்துக்கு ஏதும் ஈடாகக்கூடுமோ?உடனே வாசித்துப் பார்ப்பார்.பதிலுக்கு தன் அன்பை காட்ட பானுப்பிரியாவுக்கு  ஒரு காரை வாங்கி அனுப்புவார்.அதில் என்னைப் புதுப்பித்த புதியவளுக்கு என்ற வரிகள் எழுதப்பட்டிருக்கும்.மனம் கவர்ந்தவனின் வாசகம் வஞ்சி அவளை நெகிழவைக்க,ஏக்கத்தோடு கண்கலங்க அந்தக் காரை முத்தமிடுவாள்.இப்படி அப்பாடல் ஆரம்பிக்கும் முன் தொடங்கி,பாடல் காட்சி முழுவதிலும் இரசனையான அம்சங்கள் அதிகமாய் வெளிப்படும் இப்பாடலை யாருக்காவது பிடிக்காமல் போகுமா?தென்றல் கூட தனிமை நினைவில் அனலாய்ச் சுடுகிறதாம்.விரகதாபத்தையும்,ஏக்கத்தையும் கூட இவ்வளவு கவித்துவமாக,ஆபாசமின்றி வரிகளிலும்,காட்சியிலும் காட்டமுடியுமா?காட்டியிருக்கிறார் வைரமுத்து.என் அன்பிற்கினிய ஜீவனோடு சேர்த்து மம்முட்டியின் தீவிர ரசிகர் பாலசேனா அண்ணாவுக்கும்,மற்றும் யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்காகவெல்லாம் இந்தப் பாடல் வரிகள்.




மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ...உனைத்தான்..
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ...உனைத்தான்..
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?


இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா?
சரசம் பயிலும் விழியில் வருமே..
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா?
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே..
பார்க்காமல் மெல்ல பார்த்தாளே...
அதுதானா காதல் கலை?
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே..
அதுதானா மோக நிலை?
அடடா இதுதான் சொர்க்கமா?
இது காமதேவனின் யாக சாலையா?
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ...உனைத்தான்..
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா


கலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம் பருவம்
கடல்நீர் அலைபோல் மனமும் அலையும்
கருநீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்..
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய்..முடிவாய்..
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்.
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ...உனைத்தான்..
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?




உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங் (02.03.2013,சனி)










 


1 comment: