Monday, April 18, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 12

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 12

 

ஏன்தான் என்னோடு உன் ஊடல் நாடகம்
நீதான் நெஞ்சோடு நீங்காத காவியம்
ஆனாலும் நீதான் சின்ன பிள்ளை
ஆகாது கண்ணா அன்புத் தொல்லை

      வானொலி கேட்டுக்கொண்டே பாடம் படித்துக் கொண்டிருந்த அகல்யா அதிர்ச்சியில் நாற்காலியிலிருந்து பொத்தென்று விழுந்தாள்,
      உன்னை ஒரு பூ கேட்கவே ஓடி வந்தேன் அங்கே
       பூந்தோட்டமே சொந்தம் என்றhல் நான் போவது எங்கே??
       அகல்யாவுக்கும் சித்ராவுடன் இணைந்து பாடவேண்டும் போலிருந்தது.
      அப்படிதான் ஆரம்பமானது வருண் அகல்யாவின் காதல் கதை.ரேணு உட்பட எந்த தோழியிடமும் அவள் வருணுடன் பழகுவதைச் சொன்னதேயில்லை.வருண் அவனுக்குப் பழக்கமில்லை என்று நம்பிக்கொண்டிருந்த அவர்களும் அவளிடம் வருணைப் பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.அவனுக்கு ஏற்கனவே காதலி இருப்பதாகச் சொன்னார்கள்.தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண் அறிவிப்பாளரை அவன் விரும்புவதாகச் சொன்னார்கள்.
       இதற்கிடையே ரேணுவின் தோழி ஒருத்தி சொன்னாள்.வானொலி அறிவிப்பாளராக இருக்கும் நளாயினி அவளுடைய பெரியம்மா மகளாம்.அவளுடைய பெரியம்மாவிற்கு  வருணை அதிகம் பிடிக்குமாம்.வருண் அவருக்கு நல்ல பழக்கமாம்.இவளுக்கு வருணைத் திருமணம் கொடுக்கலாம் என்றொரு எண்ணம் அவள் பெரியம்மாவிற்கு இருக்கிறதாம்.
       நான் ஒரு சொல் சொன்னா போதும்,வருண் எனக்கு கிடைச்சிடுவாரு என்று சபதமிட்டாள்.வருணிடம் அகல்யா இதை சொன்னபோது நளாயினியின் அம்மாவிடம் பேசியதேயில்லையே என்றான்.ஒரே ஒரு தடவைதான்  தூரத்தில் பார்த்து கையசைத்ததாக சொன்னான்.அவள் சபதம் போட்டதையும் சொன்னாள்.
       ஒரு வேளை அந்தப் பொண்ணுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை போலிருக்கு,என்ன பண்றது வானொலியில சேர்ந்தாலும் சேர்ந்தேன்,என்மேல நிறைய பொண்ணுங்க ஆசைப்படறாங்க என்றான்.
      நெனைப்புத்தான்,” என்று சலித்துக்கொண்டாள் அகல்யா.
      பழைய நினைவுகள் அவளுக்கு வருணின் மீது அதிக ஏக்கத்தை ஏற்படுத்தியது.இருந்தபோதிலும் ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு வேண்டுமென்றே அவனைத் தொடர்புக்கொள்ளாமல் இருந்தாள்.இரண்டு நாட்களுக்காகவாவது அவனை ஏங்க வைக்க விரும்பினாள்.ஏற்கனவே ஒரு முறை இதுமாதிரி செய்தபோது அவன் பதறிப்போய் அவளைத் தேடி வந்தது நினைவில் நின்றது.
     ஆனால் அவளுடைய எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.தினங்கள் மூன்று கடந்தும் அவன் அவளைத் தொடர்புக் கொள்ளவில்லை.அவள் ஒரு முகாமில் இருந்ததால் வானொலியும் கேட்க முடியாமல் இருந்தது.
     சரி இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று அவளே அவனுக்குப் போன் செய்தாள்.
* * *

        வானொலியில் செய்தித்துளிகளை வாசித்துக் கொண்டிருந்தான் வருண்.திடீரென அவனுடைய கைத்தொலைபேசி அலறவும் சற்று தடுமாற்றமடைந்து செய்தி வாசிப்பதை சில வினாடிகள் நிறுத்திவிட்டான்.வேலைப்பளுவின் காரணமாக கைத்தொலைபேசியை அதிர்வலையில் வைக்க மறந்து போயிருந்தான் அவன்.
   பிறகு ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக்கொண்டு செய்தி வாசித்து முடித்து ஒரு பாடலை ஒலியேற்றிவிட்டு கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தான்.அகல்யாதான் அழைத்திருந்தாள்.அவனுக்கு முதன்முதலாக அவள் மீது கோபம் வந்தது.
   வரவர அவளுடைய விளையாட்டுத்தனத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.ஏற்கனவே ஓரிரு தடவை அவன் அறிவிப்பு செய்யும்போதெல்லாம் அவள் அவனைத் தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்திருக்கிறாள்.அவன் கடிந்து கொண்டபோது இனிமேல் அவ்வாறு செய்யமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறாள்.ஆனால் இன்று செய்தி வாசிக்கும்போது அவள் செய்த குறும்புத்தனத்தால் அவனுக்கு எவ்வளவு பெரிய சங்கடம் ஏற்பட்டுவிட்டது?
   எத்தனை பேர் வானொலி கேட்டுக்கொண்டிருந்திருப்பார்கள்?அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்?அவன் தனிமனிதனாக பாதிப்படைந்திருந்தால் கூட பரவாயில்லை.ஆனால் வானொலி நிலையத்தின் பெயரும் பாதிப்படைந்தால் என்னவாவது? யாராவது பத்திரிக்கைகளில் வானொலியைப் பற்றி தவறாக எழுதிவிட்டால் என்ன செய்வது? தன்னால் வானொலி நிலையத்தின் நற்பெயர் பாதிப்படைவதை அவன் விரும்பவில்லை.அகல்யாவை நிச்சயம் கண்டித்தாக வேண்டும் என நினைத்தான்.அதற்குள் சில நேயர்கள் தொலைபேசியில் அவனை அழைத்து அவனுடைய தவற்றையே சுட்டிக்காட்டி பேச அவனுடைய கோபம் சற்று அதிகரித்தது.
   அவனுக்கு விளையாட்டுத் தனமாக இருக்கும் பெண்களை அவ்வளவாக பிடிப்பதில்லை.அதிலும் அகல்யாவின் விளையாட்டுத் தனம் சற்று அதிகமாகவே உள்ளது.நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வந்தவன் முதல் வேளையாக அகல்யாவிற்கு போன் செய்தான்.
   3 தினங்களாக அவனுடைய குரலைக் கேட்காத ஏக்கத்தில் கைத்தொலைபேசியை ஆசையோடு கையில் எடுத்த அகல்யா அவன் கோபமாக பேசியதில் வருத்தமடைந்தாள்.ஆரம்பத்தில் அவள் விளையாட்டுத் தனமாக அவன் ஒலிபரப்பில் இருந்தபோது தொலைபேசியில் அழைத்து குறும்பு செய்தது உண்மைதான்.ஆனால் அது அவனுக்குப் பெரும் சங்கடத்தைத் தருகிறது என்று அவன் கண்டித்த பிறகு அவள் தன்னுடைய தவற்றை உணர்ந்துவிட்டாள்.அவன் நிகழ்ச்சியைப் படைத்துக் கொண்டிருக்கிறான் என்று உண்மையிலேயே அவள் அறியவில்லை.காரணம் அவன் வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் வரமாட்டான்.ஆனால் அவன் அவளை எதுவுமே விசாரிக்காமல் எடுத்ததுமே கோபப்பட்டு திட்டியது அவள் மனதைக் காயப்படுத்தியது.
     மறுநாள் அவளே அவனைத் தொடர்புக் கொண்டு பேசினாள்.ஆனாலும் அவனது கோபம் குறைந்ததாக தெரியவில்லை.அவள் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வதாக திட்டினான்.அவன் மட்டும் எப்படி நடந்து கொள்கிறானாம்..ஏதோ தவறு செய்துவிட்டாள்,ஏசிவிட்டான்.இன்னும் ஏன் கோபம்? அது கூட சிறுபிள்ளைத் தனம்தானே?
    அவன் இன்னமும் தன்னைத் தப்பாகதானே எண்ணிக்கொண்டிருக்கிறான்.அவனை அவசியம் நேரில் சந்திக்க வேண்டும்.சந்தித்து உண்மையில் தன் மீது எந்தத் தவறும் இல்லையென்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்.அவன் நிச்சயம் மன்னிப்புக் கேட்பான்.மசியக் கூடாது.அவனை நன்றாக திட்டிவிட்டு வந்துவிட வேண்டும்.ஏதேதோ எண்ணிக்கொண்டு அவனைத் தன்னுடைய தாமானுக்கு முன்பு உள்ள மினிமார்க்கெட்டிற்கு வரச் சொன்னாள்.அவனும் வந்தான்.மழைத்தூறல் போட்டுக்கொண்டிருந்தது.
  வருணன்(வருணபகவான்) அல்லவா?அதான் மழையையும் உடன் அழைத்து வந்திருக்கிறான், என்று எண்ணிக்கொண்டவள் அவனுக்குப் பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்காமல் படபடவென்று ஒரே மூச்சில் யாவற்றையும் சொல்லி முடித்தாள்.அவன் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.அவள் எதிர்பார்த்தபடி மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை.
  சரி கிளம்பறேன் போக எத்தனித்தாள்.தூறலாக இருந்த மழை கடுமையாக இருந்தது.அவளுடைய வீட்டிற்கு இன்னும் கொஞ்சம் உள்ளே போகவேண்டும்.மினிமார்க்கெட்டில் ஒரு குடையை வாங்கி கொண்டு அவளைத் தன்னுடன் குடையில் அழைத்துப் போனான்.ஒரு கையில் குடையைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் அவளுடைய தோளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு நடந்தான்.கனமான மழையுடன் போட்டி போட இயலாமல் அந்தச் சின்னஞ்சிறு குடை  பின்வாங்க மழை இருவரையும் நனைத்தது,அருகிலிருந்த ஒரு காலி வீட்டின் முன் கொஞ்ச நேரம் நின்றார்கள்.
  தன்னை உரசிக்கொண்டு நின்றிருந்த அகல்யாவைப் பார்த்தான் வருண்.உண்மையில் அவள் மீதான கோபம் அவனுக்கு எப்போதோ தணிந்து போயிருந்தது.சொல்லப்போனால் ஒரு வாரமாக அறவே பார்க்காமல், ஒரு வார்த்தை கூட பேசாமல் அவள் மீதுள்ள அவன் ஏக்கம் அதிகரித்திருந்தது.மழை அவனுடைய ஏக்கத்தை அதிகப்படுத்த சட்டென்று அவளை இழுத்து தன் முகத்தை அவளை நோக்கிக் கொண்டுபோனான் வருண்.
  ஐயோ என்ன செய்யப் போகிறான்? தான் அதற்கெல்லாம் இன்னும் தயாராகவில்லையே?” பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
   பொழைச்சிப் போ,” அவளை ஒன்றும் செய்யாமல் விடுவித்தவன் குடையை அவளிடம் கொடுத்து, அவளைப் போகச்சொல்லிவிட்டு மழையிலேயே நனைந்து கொண்டு போய் மோட்டார் சைக்கிளைக் கிளப்பினான்.

 தொடரும்…..

No comments:

Post a Comment