Friday, December 31, 2010

சிறுகதை - கருமை நிறத்தொரு பூனை

சிறுகதை

கருமை நிறத்தொரு பூனை,,,,,,

     பூனைகளை எனக்குப் பிடித்ததேயில்லை,சிறு வயதாக இருக்கும்போது வெள்ளை,சாம்பல்,பழுப்பு என்று பல வண்ணங்களில் பூனைகள் எங்கள் வீட்டைச் சுற்றி வந்ததுண்டு.மீனைத் திருடிவிட்டதால் சுடுநீர் ஊற்றப்பட்டு முதுகுப்புறம் வெந்துபோயிருந்த பூனை,பாதி வால் வெட்டப்பட்டிருந்த பூனை என்று பல வகையறாக்களைச் சேர்ந்த பூனைகள்.ஆனால் ஒருமுறை கூட அவற்றின் வருகையை நான் பொருட்படுத்தியதேயில்லை.
  மூசாம் பூனை வந்திருக்காம். வா போயி பார்க்கலாம் என என் பள்ளித் தோழி என்னை வற்புறுத்தி அழைத்துப் போகும் சமயங்களில் தூர நின்று பூனைகளை அலட்சியமாக பார்த்ததுண்டு.அதைக் கடந்து பூனைகளைக் கையில் எடுத்துக் கொஞ்சுவதையோ,குறைந்தபட்சம் அவற்றை வருடிக் கொடுப்பதையோ என்னையறியாமல்  கூட செய்ததில்லை நான்.
   பூனைகளைப் பிடிக்காமல் போனதற்கான காரணங்களை ஒருமுறை கூட அலசி ஆராய்ந்து பார்த்ததில்லை நான்.ஒரு வேளை அவற்றின் திருட்டுக் குணமாக இருந்திருக்கலாம்.எப்போதும் உரசிக்கொண்டே இருக்கும் தன்மையாய் இருந்திருக்கலாம்.அல்லது நான் படித்த கதைகளில் எல்லாமே நாய்கள் மட்டுமே கதாநாயகத் தன்மையுள்ளதாக முன்னிறுத்தி வைக்கப்பட்டது கூட காரணமாய் இருந்திருக்கலாம்.முனிவரின் சாபத்தால் தவளை உருவம் அடைந்திருந்த இளவரசனின்  கதையை மாற்றி அவன் பூனை வடிவம் கொண்டதாய் யாராவது கதை எழுதியிருந்தால் ஒரு வேளை நான் பூனைகளைக் கொஞ்சமேனும் நேசித்திருக்கக் கூடும்,ஆனால் நான் படித்த கதைகள் யாவற்றிலுமே பூனைகள்தான் வில்லத்தனத்தைக் கொண்டிருந்தன,போதும்,இவ்வளவு தூரம் பூனைகளைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருப்பதே அதிகபட்சம்தான்.
   இப்படி பூனைகளைப் பற்றி பலரிடத்தில் நான் குறை கூறிக் கொண்டிருந்தாலும் பூனைகளுக்கும் எனக்குமிடையே எப்போதும் நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டேதான் இருந்தது.குருவிகளைப் பிடிப்பதற்காக தந்திரமாக சாக்கடையின் வழியே பதுங்கி வந்து எதேச்சையாக என்னுடைய கண்களில் பட்டு என்னிடம் மொத்து வாங்கிய முனுசாமி வீட்டு பூனையிலிருந்து எலிகளைப் பிடிப்பதற்காக அப்பா கொண்டு வந்த அஸ்கார்(ராணுவர்களின் சீருடையைப் போன்ற வர்ணத்தில் அதன் மேனி இருந்ததால் அந்தப் பெயர்) பூனைகள் வரை எனக்கும் பூனைகளுக்குமான உறவு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது,
   எலி பிடிப்பதற்காக கொண்டு வரப்பட்ட அஸ்கார் பூனையும் தனக்கு இடப்பட்ட வேலையைச் செய்யாமல் சம்பல் செய்வதற்காக சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்த நெத்திலிப்பொடியில் கைவைத்துவிட மன்னிக்கவும் வாய் வைத்துவிட, அன்றே எங்கள் வீட்டிலிருந்து வேறொரு வீட்டிற்கு வீடு கடத்தப்பட்டுவிட்டது,
   அப்பாடா.. இனிமேல் பூனைகளின் தொல்லைகள் அறவேயில்லை என்று சில வருட நிம்மதிக்குப் பிறகு ஒருநாள் எப்படியோ வழிதவறி எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தது அந்தக் கருமை நிறத்து பூனை,பூனைகளை அறவே வெறுத்த நான் இந்தப் பூனையை மட்டும் இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவைத்ததற்கு அதன் கருமை நிறம் மட்டுமே காரணம்.”கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்ற பாடல் எனக்கே எழுதி வைக்கப்பட்டதைப் போன்று எப்போதும் வெளிச்சமாய் கருப்பு நிறத்திலேயே அலைந்து கொண்டிருந்த எனக்கு கன்னங்கரேல் என்றிருந்த அந்தப் பூனை மீது மட்டும் ஒரு சிறு கரிசனம்.கரிசனம் மட்டும்தான்.மற்றபடி எனக்கு அதன் மீது பாசமோ நேசமோ எதுவும் இல்லை.
  போனால் போகட்டும் என்று அந்தப் பூனைக்கு கருப்புசாமி என்று பெயரும் சூட்டிவைத்தேன்.சுதந்திரமாக வீட்டிற்குள் வந்து போய்க் கொண்டிருந்தது அந்தக் கருப்புப் பூனை.அதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த ஓர் இருள் நேரத்தில் அதன் பச்சை வர்ணக் கண்களைச் சிமிட்டியபடி கருப்புசாமி என் அருகில் வந்து நினறது பாருங்கள் அப்போதுதான் புரிந்தது ஏன் திகில் படங்களில் பூனைகளைப் பிரதானமாக காட்டுகிறார்கள் என்று.
  எனக்குப் பிடிக்காமல் போனாலும் என் அம்மா,அப்பா,பாட்டி எல்லாருக்கும் கருப்புசாமியை நிறையவே பிடித்திருந்தது.அந்தச் சுதந்திரத்தில் எப்படியாவது என் மனதிலும் இடம்பிடித்துவிட கருப்புசாமி எவ்வளவோ முயற்சி செய்தது.இருந்தபோதிலும் ஒரு நாலு கால் பிராணி என்ற எண்ணத்தைத் தாண்டி என்மன எல்லைக்குள் கருப்புசாமியை நுழைய விட்டதேயில்லை.
  ஒருநாள் வெளியே போய்விட்டு வந்தபோது கருப்புசாமியை என் உறவுக்கார குழந்தை மாவு பிசைவதைப் போன்று பிசைந்து கொண்டிருந்தாள்.விசுவாசத்தின் காரணமாக வலியைப் பொறுத்துக்கொண்டு அமைதியாகப் படுத்திருந்த கருப்புசாமியைப் பார்த்தபோது கரிசனம் பொங்கவே அதை அந்தக் குழந்தையிடமிருந்து விடுவித்தேன்.
  இன்னொரு நாள் என் அம்மா பட்டணத்திற்குப் போவதற்காக பேருந்திற்காகக் காத்திருந்தபோது கருப்பு சாமியும் அம்மாவுடன் பேருந்து வரும்வரை வெயிலிலேயே காத்திருந்தது,அப்போது கூட கருப்பு சாமியின் மீது எனக்குப் பாசம் வரவேயில்லை.அம்மா பட்டணத்திற்குப் போகும்போதெல்லாம் பொரித்த வாழைப்பழம் வாங்கி வருவார்.அதற்காகதான் கருப்பு சாமி அம்மாவைக் காக்கா பிடிக்கிறது என்றுதான் என் மனதில் தோன்றியது.அதற்கேற்றவாறு அம்மா திரும்பி வந்து பொரித்த வாழைப்பழம் கொடுக்கும்வரை கருப்புசாமியும் வழியைப் பார்த்துக்கொண்டே இருந்தது.அம்மாவைப் பார்த்ததும் வழக்கம்போல் குரல் கொடுக்க ஆரம்பித்தது.
  கருப்புசாமியின் குரல் எப்போதுமே ஏதோ குகைக்குள்ளிருந்து கத்துவதைப்போன்று மிகமிக மெதுவாகத்தான் கேட்கும்.பக்கத்து வீட்டிலும் இரண்டு பூனைகளை வளர்த்தார்கள்.அதில் ஒன்று குழந்தை மாதிரியே கத்தும்.இன்னொன்று அம்மா”,”மோவ் என்று கத்தும்.எத்தனையோ முறை தன்னை யாரோ அழைப்பதாக அம்மா கூட ஏமாந்து போயிருக்கிறார்.ஆனால் கருப்பு சாமி மட்டும் எவ்வளவு சாப்பிட்டாலும் பத்து நாள் சாப்பிடாத மாதிரி மிகவும் சன்னமான குரலில்தான் கத்தும்.எனக்கென்னவோ அது பரிதாபத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்காக வேண்டுமென்றே அப்படி கத்துவதாக தோன்றும்.ஒரு தடவை கருப்பு சாமி மற்ற சராசரி பூனைகளைப் போன்று இல்லையோ என்ற எண்ணம் கூட எனக்கு வந்ததுண்டு.ஆனால் அதைப் பொய்யாக்கும் வகையில் கருப்பு சாமியும் காதலில் விழுந்தது.மழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளில் வெள்ளை வெளேர் என்ற ஒரு பெண் பூனையை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தது.
  அடடே, கருப்பு சாமிக்கு கூட ஜோடி சிடைச்சிருச்சே?” என்று அம்மாவும் அப்பாவும் பெருமிதமாய்க் கூற,
  பாருங்கம்மா..கருப்புசாமி கன்னங்கரேல்னு இருந்தாலும் வெள்ளை வெளேர்னு ஒரு பூனையைதான் ஜோடியா பிடிச்சிருக்கு என்று வழக்கம்போல் கருப்பு சாமியின் மீது குற்றப்பத்திரிக்கையை வாசிக்க ஆரம்பித்தேன் நான்.
  என்னுடைய வாய்வார்த்தையாலோ என்னவோ ஒரே வாரத்தில் கருப்பு சாமி காதலில் தோல்வி கண்டு தனிமரமாய் நின்றது.ஆனாலும் அதன் முகத்தில் சோகம் இருந்ததா என தெரியவில்லை காரணம் கருப்புசாமி சந்தோஷமாக இருந்து நான் பார்த்ததில்லை.சதா எதையோ தொலைத்துவிட்டதைப்போன்றுதான் எப்போதும் இருக்கும்.நாங்கள் ஏதாவது பேசினால் கூட அதனிடமிருந்து எந்த துலங்கலும் இருந்ததில்லை.ஆனால் இந்தா என்ற வார்த்தையைக் கேட்டால் போதும். எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் சரி, எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சரி, அடித்துப்பிடித்து ஓடிவரும்.தமிழில் கருப்பு சாமிக்குப் பிடித்த ஒரே வார்த்தை இந்தா.
  இந்தா என்றாலே ஏதாவது சாப்பிட கொடுப்பார்கள் என்ற எண்ணம் அதன் ஆழ்மனதில் பதிந்து விட்டதே அதற்குக் காரணம்.சில சமயங்களில் வேண்டுமென்றே இந்தா என்பேன்.பாவம் கருப்புசாமி எதையோ கொடுக்கப் போகிறார்கள் என எதிர்பார்த்து ஏமாந்து போய்விடும்.பிறகு மனம் கேளாமல் ஏதாவது சாப்பிட கொடுப்பேன்.அது கூட பாசத்தினால் அல்ல வெறும் பரிதாபத்தினால்தான்.
  இப்படி கருப்புசாமியின் மீது எனக்கு இருப்பது வெறும் பரிதாபம்தான் என்ற நிலையைக் கடந்து அதை நான் நேசிக்க ஆரம்பித்துவிடுவேனோ என பயந்து கொண்டிருந்த வேளையில்தான் அந்த சர்ச்சை எழுந்தது.
  அம்மாவால் இனி தோட்டப்புறத்தில் வேலை செய்ய இயலாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால் குடும்பத்தோடு பட்டணத்திற்கு இடம்பெயர இருந்தோம்.கருப்பு சாமியை என்ன செய்வதுட? உடன் அழைத்துப் போவதா வேண்டாமா என்றொரு பிரச்சனை.இதுதான் கருப்பு சாமியைக் கழற்றிவிடுவதற்கொரு நல்ல வாய்ப்பு என எனக்குத் தோன்றியது.கருப்பு சாமிக்கு எதிரான போர்க்கொடியை நான்தான் முதலில் தூக்கினேன்.
  பாவம் அந்த வாயில்லா ஜீவன்.அடுத்த பிறவியில் நீ கருப்புசாமியாய் பிறந்து கருப்பு சாமி உன் இடத்தில் இருந்து உன்னை வதைக்கப்போகிறது பார் என என் மனசாட்சி (படங்களில் வருவதுபோன்று என்னை மாதிரி இன்னொரு உருவமெல்லாம் வரவில்லை,என் மனதிற்குள்ளேயே இருந்து பயங்காட்டியது) சொன்னது ஒரு கணம் என்னைச் சங்கடப்படுத்தினாலும் ஒரு வேளை கடந்த பிறவியில் நான் கருப்புசாமியாய்ப் பிறந்து கருப்புசாமி என் இடத்தில் இருந்து என்னை வதைத்திருக்கவும் சாத்தியங்கள் இருக்கின்றனவே என என்னை உடனே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
  பாவம், நம்ம கூடவே இருந்துடுச்சி. எப்படி விட்டுட்டுப் போறது? சாப்பாட்டுக்கு என்ன பண்ணும்?” அம்மா உண்மையிலேயே வருத்தப்பட்டாள்.
  அதுக்காக எப்படிம்மா கே.எல்.வரைக்கும் அழைச்சிட்டுப் போறது?நடு ரோட்டுல திடீர்னு குதிச்சிட்டா என்ன பண்றது? சரி அப்படியே அழைச்சிட்டுப் போனாலும் பட்டணத்துல எப்படிம்மா வளர்க்க முடியும்?அது ரோட்டுல எங்கேயாவது போயி அடிபட்டுடுச்சின்னா எப்படிம்மா?”
  அம்மாவின் பாசம் கருப்புசாமியை உடன் அழைத்து வர வைத்துவிடுமோ என்ற பயத்தில் சாக்கு போக்குகளைத் தேட ஆரம்பித்தேன் நான்.
  நீ சொல்றதும் சரிதான்.பட்டணத்துல கஷ்டம்.பரவால இங்கயே இருக்கட்டும்.முனுசாமிக்கிட்ட சொன்னா அன்னாடம் சோறு போட்டுடுவான் ஒருவழியாக அப்பா என் கட்சிக்குத் தாவினார்,
  பிறகு எல்லாரும் பட்டணத்திற்கு குடிபெயர்ந்துவிட்ட பிறகு அடிக்கடி தோட்டப்புறத்திற்குப் போய்வந்த அப்பா கருப்பு சாமியைப் பற்றிய டிஸ்கவரி செய்திகளைத் தொகுத்து வழங்குவார்.அப்பாவின் செய்தி அறிக்கையின் படி கருப்புசாமியை எங்கள் பிரிவு சிறிதும் பாதித்துவிடவில்லை.ஆனால் ஒவ்வொரு நாளும் நாங்கள் குடியிருந்த தோட்டத்து வீட்டை கொஞ்ச நேரம் எட்டிப் பார்த்துவிட்டுதான் போகிறது என அப்பா சொன்னபோது எனக்கும் கருப்புசாமியின் மீது கொஞ்சம் கரிசனம் வரவே செய்தது.உடன் குற்ற உணர்வு வேறு.
    உண்மையைச் சொல்லப்போனால் கருப்புசாமியின் மீது எனக்கு எப்பொழுதோ பாசம் வந்துவிட்டிருந்தது.எல்லா பொருட்களையும் லாரியில் ஏற்றகிக்கொண்டிருந்தபோது என்னை உரசிக்கொண்டு வந்து நின்ற கருப்புசாமியின் வழக்கமான சோகப்பார்வையும் ஈனக்குரலும் என் மனதைப் பாதிக்கவே செய்தது.அப்போதே கருப்புசாமியை வாரி எடுத்துக் கொண்டு போய்விடலாம் என தோன்றியது.ஆனாலும் பூனைகளை என்றுமே நேசிப்பதில்லை என்ற கொள்ளை எங்கே மீறப்பட்டுவிடுமோ என்ற தேவையற்ற தன்மானத்தில் மனதைக் கல்லாக்கிக் கொண்டேன்.
   அதன் பிறகு தோட்டத்துத் திருவிழாவிற்குப் போய்வந்த அம்மா கருப்புசாமி முன்பைவிட பருத்துவிட்டதாக சொன்னபோது யாருக்கும் தெரியாமல் சந்தோஷப்பட்டேன் நான்.ஆனால் அந்தச் சந்தோஷம் இரண்டு வாரம் கூட நீடிக்கவில்லை.அதற்குள் அப்பா வந்து சொன்னார்,கருப்புசாமியை சில நாய்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கடித்துவிட்டனவாம்.உடலில் காயப்பட்டிருந்த கருப்புசாமி சில தினங்கள் உணவேதும் சாப்பிடாமல் இருந்து பிறகு இறந்துபோய்விட்டதாம்.பாவம் வழக்கம்போல் இரவு சாப்பிட்டபின் எங்களின் வீட்டுப்பக்கம் போயிருக்கிறது.அங்கு வந்த நாய்கள் கருப்புசாமியைக் கடித்துக் குதறிவிட்டிருக்கின்றன.
  கருப்புசாமி இறந்துவிட்டது என என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.பிடிக்கவில்லை என்றாலும் அது செத்துப் போய்விட வேண்டுமென்று ஒருபோதும் நினைத்ததில்லை நான்.ஒருவேளை எங்களுடன் பட்டணத்திற்கு எடுத்து வந்திருந்தால் கருப்புசாமிக்கு இப்படியொரு நிலை வந்திருக்காதோ என என்னை நானே திட்டிப் பார்த்தேன்.
  எனக்கும் உன்னைப் பிடிக்கும் கருப்புசாமி என ஒருமுறையாவது கருப்புசாமியின் தலையை வருடிக்கொடுத்து சொல்லவேண்டும் என நினைத்திருந்தேன்.ஆனால் அதற்குள் கருப்புசாமி என்னை விட்டுப் போய்விட்டது.பாவம் கடைசிவரை எனக்கும் அதன்மேல் பாசம் இருந்தது என்பதை உணராமலேயே அது செத்துப் போய்விட்டது.
  வெள்ளை,சாம்பல்,பழுப்பு என்று பல வண்ணங்களில்  எங்கள் வீட்டைச் சுற்றி வந்த பூனைகள்,மீனைத் திருடிவிட்டதால் சுடுநீர் ஊற்றப்பட்டு முதுகுப்புறம் வெந்துபோயிருந்த பூனை,பாதி வால் வெட்டப்பட்டிருந்த பூனை,கருப்புசாமி ஆகிய பூனைகளுக்குப் பிறகு ஏதேனும் ஒரு பூனை நிச்சயம் என் வாழ்க்கையில் மீண்டும் பிரவேசிக்கக் கூடும்.ஆனால் பூனைகளை எனக்குப் பிடித்ததேயில்லை என இனி சொல்லவே மாட்டேன்.
   பூனைகளை எனக்கு அதிகம் பிடிக்கும் இப்படிதான் அடுத்தமுறை என்னுடைய கதையை ஆரம்பிப்பேன் நான்




உதயகுமாரி கிருஷ்ணன்.
பூச்சோங்,
2006
   

No comments:

Post a Comment