Tuesday, January 8, 2013

சிறுகதை- நல்லதோர் வீணை செய்தே...

                                 நல்லதோர் வீணை செய்தே………







என்ன இது உலகம் இவ்வளவு இருட்டாக இருக்கிறது?என் அம்மா எப்போதுதான் என்னை வெளியே கொண்டு வருவாளோ…? முணுமுணுத்துக் கொண்டே அம்மாவின் கருவறையில் குறுகி உட்கார்ந்திருந்தேன் நான்.
    “என் அம்மா ஏன் இன்னும் என்னை வெளியே கொண்டு வர மாட்டேன் என்கிறாள்?ஒருவேளை அவளுக்கு என்மேல் அலாதி பிரியமோ?அப்படிதான் இருக்கும்.ஏனென்றால் அடிக்கடி தன் வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொள்வாள்.என்னைக் கண்ணே மணியே என்று கொஞ்சுவாள்.எனக்காக நிறைய பொம்மைகள், துணிமணிகள் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறாள்.ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி எனக்காக அழகிய தொட்டில் கூட பார்த்து வைத்திருக்கிறாள்.” “ஐயோ, எனக்கு இப்பவே வெளியே வந்துடனும் போல இருக்கே…? என் ஆசையைப் புரிந்து கொள்ளாத அம்மா மீது கிலோ கணக்கில் கோபம் கோபமாக வந்தது.ஓங்கி ஓர் உதைவிட்டேன்.அம்மா அழவில்லை,மாறாக சந்தோஷப்பட்டாள்.
      “ஐயோ, பயங்கரமா உதைக்கறாங்க,”இப்போதே அப்பாவிடம் புகார் செய்தாள்.
   “பொம்பள பிள்ளன்னு முடிவே பண்ணிட்டயா?எனக்கு பேரன்தான் வேணும்,” பாட்டி சொன்னதை அம்மா பொருட்படுத்தவேயில்லை.  
  “ஏன்தான் இந்தப் பாட்டிக்கு பொம்பள புள்ள வேணாமோ??? இருக்கட்டும் வெளிய வந்து இந்தக் கிழவிக்கு இருக்கு,” இப்போதே எனக்கு எதிரிப்படை முளைத்துவிட்டது.அதில் டோப் டென் வரிசைப்படி முதலிடம் என் பாட்டிக்குதான். இப்படியே கருவறையில் ரொம்ப நாட்கள் வாசம் செய்துவிட்ட பிறகு ஒருநாள் கடவுள் என்னிடம்,”இனி உனக்கு இங்கே இடமில்லை. உன்னுடைய வாடகை காலம் முடிந்துவிட்டது,” என்றார்.எனக்கோ கொள்ளை சந்தோஷம்.அன்று நள்ளிரவே தலைகீழாக பூமிக்கு வந்து சேர்ந்தேன்.  
    
நான் கண்விழித்தபோது உலகம் ஓர் அழகிய கவிதையாக தெரிந்தது எனக்கு. “வாவ் இந்த உலகம் இவ்வளவு அழகானதா?” கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை என்றாலும் சுற்றும் முற்றும் என் முட்டைக் கண்களை உருட்டி உருட்டி பார்க்க பிடித்திருந்தது.பசியே இல்லாவிட்டாலும் “வீல் வீல்” என்று கத்தி வேலை செய்யும் அம்மாவைத் தொந்தரவு செய்ய பிடித்திருந்தது.(அழுத பிள்ளைதான் பால் குடிக்குமாம். யாரோ சொன்னாங்க) பாலைக் குடித்தவிட்டு வயிறு நிறைந்துவிட்டால் மீதப்பாலை வாயிலிருந்து துப்புவது எனக்குப் பிடித்த விளையாட்டாக இருந்தது. அப்புறம் என் அம்மா என்னைக் கொஞ்சுவது அதிகம் பிடித்திருந்தது.அம்மாவும் அப்பாவும் இரவு நேரங்களில் என்னைப் பாடல் பாடிதான் தூங்க வைப்பார்கள்.அவர்களோடு சேர்ந்து நானும் அவ்வப்போது சில புரியாத இசையை இசைப்பதுண்டு.அப்பா கொஞ்சுவது பிடித்தாலும் அவ்வப்போது அவரது மீசை என்னைக் குத்திக் காயப்படுத்தியது.அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் அம்மாவைப் போன்று அப்பாவுக்கும் மீசை இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக் கொள்வேன்.இப்படி நிறைய விசயங்கள் எனக்குப் பிடித்திருந்தன.கையைக் காலை உதைத்துக் கொண்டு ஆட்டம் போட பிடித்திருந்தது.(ஆனால் பாட்டியைப் பார்த்துவிட்டால் மட்டும் என் வாலோடு சேர்த்து கை காலையும் சுருட்டி வைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாய் இருப்பேன்.அவ்வளவு பயம்.இல்லையென்றால் சாம்பிராணி புகையில் போட்டு அமுக்கிவிடுவாளே?அல்லது கசப்பான எதையாவது வாயில் ஊற்றி வைப்பாள்) அம்மா என்னைக் குளிப்பாட்டி, உடலில் லோஷன் தடவி, அழகுப்படுத்தி வாசமாக வைத்திருப்பாள்.குளியல், அலங்காரம் எல்லாம் முடிந்து அவள் என்னை மெத்தையில் கிடத்திவிட்டுப் போகும்வரை அமைதியாக இருப்பேன்.அவளுடைய தலை மறைந்த உடனேயே நெற்றிப் பொட்டையும்,கண்மையையும் அழித்து அலங்கோலமாக்கிவிட்டு அம்மா என்னை எட்டிப் பார்க்கும்போது ஒன்றுமே தெரியாத பிள்ளை மாதிரி முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக் கொள்வேன்.  


       இப்படி நிறைய விசயங்களை எனக்குப் பிடித்திருந்தாலும் சில பிடிக்காத விசயங்களும் இருந்தன. எங்கோ புது இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்று குஷியாக இருந்த எனக்கு பழி வாங்க மாட்டேன் என்ற தைரியத்தில் வலிக்க வலிக்க ஊசி போட்ட தாதியைப் பிடிக்கவில்லை.(யாராவது ஊசிகள் ஒழிப்பு தினத்தைப் பிரகடனப்படுத்தினால் என்ன?) அம்மாவின் பாதுகாப்பை மீறி என்னைக் கடித்துவிட்டு ஓடும் கொசுக்களைப் பிடிக்கவில்லை.என்றேனும் அந்தக் கொசுக்களைத் திருப்பிக் கடித்துவிட வேண்டுமென்ற வெறி தோன்றியது. என்னுடைய அடி அமின் பாட்டி (அதாங்க என் அப்பாவோட அம்மா) என்னைக் கதற கதற இட்டிலி அவிப்பதைப் போன்று சாம்பிராணி புகையில் முக்கி எடுத்தது பிடிக்கவில்லை.ஒருவேளை தூங்கினால் விட்டுவிடுவார்கள் என்று சில நேரங்களில் குளிப்பாட்டியவுடனேயே தூங்குவதுபோல் நடித்தும் பார்த்துவிட்டேன்.ம்ஹூம் பாட்டி ஏமாறவேயில்லை.சொலல்ப்போனால் என்னைச் சாம்பராணியில் அமுக்குவதற்கு அவருக்கு இன்னும் வசதியாகப் போய்விட்டது. அடிக்கடி என்னைக் கொஞ்சும் சாக்கில் என் கன்னத்தைக் காயப்படுத்திய எதிர்வீட்டு அண்ட்டியையும் எனக்குப் பிடிக்கவில்லை.(இருங்க இருங்க…இன்னும் சில மாதங்களில் எனக்குப் பல முளைத்துவிடுமாம்,முதல் கடியே உங்களுக்குதான்)  
      இப்படியே நாளொரு சட்டையும் பொழுதொரு நாப்கினுமாய் வளர்ந்த நான் ஆறு மாதத்தை எட்டிப் பிடித்தேன்.அப்போதுதான் என் அப்பாவின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் வந்தான்.எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை.அவன் தொட்டாலே எனக்கு அருவெருப்பாக இருக்கும்.அவனோ அடிக்கடி என்னைத் தூக்கி கொஞ்சுவான்.சில சமயங்களில் பக்கத்திலிருக்கும் தன் வீட்டிற்கும் என்னைத் தூக்கிக் கொண்டு போவதுண்டு.என்னை அவனிடம் கொடுக்காதீர்கள் என்று சொல்ல ஆசை.ஆனால் என்ன செய்வது?வாயைத் திறந்தாலே ஹா ஹூ என்று கராத்தே பாஷைதான் வருகிறது.சில சமயங்களில் வெறும் காற்றுதான் வருது.ஓட முடிந்தாலாவது அவனிடமிருந்து ஓடிவிடலாம்.நானோ இன்னும் நடக்கவே ஆரம்பிக்கவில்லை.இப்போதுதானே நாலு காலில் நடக்க ஆரம்பித்திருக்கிறேன்?நடக்க ஆரம்பிக்கும்வரையில் அவன் தொல்லையைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்படிதான் ஒருநாள் அப்பா வெளியூருக்குப் போயிருந்தார்.அம்மா சமைத்துக் கொண்டிருந்தார்.
    என்னைக் கொஞ்சுவதை விட்டுவிட்டு அப்படி என்ன சமையல் வேண்டி கிடக்கிறது?அதுவும் அந்தச் சாப்பாட்டையெல்லாம் எனக்குக் கொடுக்கப்போவதும் இல்லை.எத்தனை முறை ஆவலை அடக்கமுடியாமல் வெட்கத்தைவிட்டு வாயை பெரிதாக திறந்திருக்கிறேன்.உடனே பால்போத்தலை எடுத்து வாயில் வைத்துவிடுவார்கள்.எனக்கு அவமானமாகப் போய்விடும்.என்னைக் கீழே போட்டுவிட்டு சமைத்துக் கொண்டிருக்கிறாளே என்ற கோபத்தைவிட அதையெல்லாம் எனக்கு சாப்பிட கொடுப்பதில்லை என்ற கோபம் மேலோங்க என் பெருங்குரலைத் திறந்து கத்த ஆரம்பித்தேன்.
   என்னுடைய கெட்ட நேரம் அந்நேரம் அப்பாவின் நண்பன் வீட்டுக்கு வரவே,அம்மா என்னை அவனிடம் தூக்கிக் கொடுத்து பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டாள்.அவன் என்னைத் தன்னுடைய வீட்டுக்குத் தூக்கிப் போனான். அன்று அவனிடத்தில் ஏதோ ஒரு வித்தியாசம்.குடித்திருந்தான்.என்னைக் கொஞ்சிய விதமும் வேறு மாதிரி இருந்தது.திடீரென்று என்னை மெத்தையில் தள்ளி என் வாயில் பிளாஸ்டரை ஒட்டினான்.பிறகு என்னை ஏதேதோ செய்தான்.எனக்கு எதுவுமே புலப்படவில்லை.நான் இன்னும் மொட்டுதானே? “ஐயோ அம்மா…என்னைக் கொசு கடித்தாலே தாங்க மாட்டியே?இந்த மிருகம் என்னைக் கடிச்சி குதறுதே…எனக்கு உடம்பெல்லாம் வலிக்குதும்மா..”அவன் என் பிஞ்சு உடலைக் கண்டமாதிரி துவம்சம் செய்ய ஆரம்பித்திருந்தான்.  

     “அம்மா…சீக்கிரம் என்னை வந்து பாரும்மா,அம்மா….இனிமே நீ வேலை செய்யும்போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டேம்மா,நெத்திப் பொட்டையெல்லாம் அழிச்சி அலங்கோலமாக்க மாட்டேம்மா,நல்ல பிள்ளையா இருப்பேம்மா…என்னை வந்து தூக்கிட்டுப் போயிடும்மா,அம்மா….” என்னால் அதையெல்லாம் மனதில் நினைக்க மட்டும்தான் முடிந்தது.வாயைத் திறந்து பேச தெரியவில்லை.அம்மா என்ற வார்த்தையே என் வாயில் இப்போதுதானே தட்டுத் தடுமாறி வருகிறது. நான் வலியால் இடைவிடாமல் கதறினேன்.ஆனால் என் குரல் அவன் என் வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்டருக்குள்ளேயே சிறைப்பட்டுப் போனது.நான் கதறிய கதறல் எனக்குள்ளேயே கரைந்து போனது.  
    “ஐயோ இந்த உலகம் இவ்வளவு கொடுமையானதா?இந்த மோசமான உலகத்தையா பார்க்க வேண்டுமென்று துடித்தேன்?இப்படி கன்னியாகும் முன்பே கற்பிழந்து போகவா அவசரப்பட்டு பிறந்தேன்?முன்னமே தெரிஞ்சிருந்தா அம்மாவின் கருவறைக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்திருப்பேனே? பாட்டி சொன்னது உண்மைதான்.நான் ஆண்பிள்ளையாக பிறந்திருக்கலாம்.ஐயோ அம்மா இப்போது வந்தால் கூட என்னைக் காப்பாற்றிவிடலாமே?ஒரே ஒரு தரம் என்னை வந்து எட்டிப்பாரேன்,அம்மா……..அம்மா…………………..   
       எனக்குப் புரியாமலேயே ஏதோ ஒன்று எனக்கு நடந்து முடிந்தபோது என்னுடைய பாதி உயிர் வெளியே வந்துவிட்டிருந்தது.சிறுநீர் கழித்து கழித்து புண்ணாகிவிடும். எனக்கு வலிக்கும் என்று அம்மா பார்த்து பார்த்து பவுடர் போட்டு வைக்கும் அந்த இடம் சிதைந்து போய் ரத்தக்களறியாய் இருந்தது.எனக்கு கத்த கூட தெம்பில்லை.அப்போது கூட காமவெறியில் சிக்கியிருந்த அந்த மிருகம் என்னை விடவில்லை.என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே இறந்துட்டேனே?எப்படி ரெண்டு தடவை இறப்பது?
 
  
  “அம்மா,சீக்கிரம் வந்து என்னைத் தூக்கிட்டுப் போம்மா….எனக்கு ரொம்ப வலிக்குதும்மா,இந்த மாதிரி ஒரு வலியை இதுவரைக்கும் நான் அனுபவிச்சதே இல்லம்மா. சீக்கிரமா வந்து என்னைத் தூக்கிட்டுப் போயிடும்மா,அம்மா…. “ஐயோ, நான் சாகப்போறேனா? யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்,என் அப்பா அம்மா ஆசைப்பட்ட மாதிரி நல்லா படிச்சி பல்கலைக்கழகம் போயி பட்டமெல்லாம் வாங்கனும்னு நெனச்சேனே?அதெல்லாம் நடக்காதா? அம்மா, சீக்கிரம் வாம்மா…அம்மா….அம்மா………..அம்மா…… சீ-க்-கி-ர-ம் வாம்மா….அம்மா அம்……மா அ...ம்மா.... அம்.
 
உதயகுமாரி கிருஷணன். பூச்சோங்

No comments:

Post a Comment